குழந்தைகளின் படைப்பு திறன்களை ( CREATIVITY ) வளர்ப்பது எப்படி?

 

தொழிநுட்ப உலகில் நின்று நிதானித்து சிந்திப்பதற்கே நேரமின்றி ஓடிக்கொண்டிருக்கின்றோம். இதன் விளைவாக, இன்று சிறு குழந்தைகள்கூட தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பக் கருவிகளில் அதிக அக்கறை கொண்டுள்ளனர். எனவே அவர்களின் சொந்த படைப்புத் திறன்களை வளர்ப்பதில் அவர்களின் ஆர்வம் மற்றும் நேரம் மிகக் குறைவாகவே காணப்படுகிறது. குழந்தைகளின் படைப்புத் திறன்கள் பற்றிய எண்ணமும் இக்கால பெற்றோரிடம் குறைவாகவே உள்ளது.

ஆனால் சிறு குழந்தைகள் இயற்கையாகவே தமக்குள் ஒரு நல்ல கற்பனையுடன் கூடிய எண்ணங்களை வைத்திருப்பார்கள். ஆனால் இந்த தொழில்நுட்ப கருவிகள் மீதான சிறுபிள்ளைகளின் ஆர்வத்தினால் அந்த படைப்புத் திறன்கள் இலகுவாக மந்தமாகும். ஒரு படைப்பு சிந்தனை மூலம் குழந்தைக்கு பல உளவியல் மற்றும் சமூக நன்மைகள் உள்ளன. இந்த ஆக்கபூர்வமான சிந்தனை எதிர்காலத்தில் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் கடினமான சூழ்நிலைகளை சமாளிப்பதற்கும் ஒரு சிறந்த உதவியாகும். அதனால்தான் பெற்றோர் தமது குழந்தைகளுக்கு அவர்களின் படைப்புத் திறன்களை வளர்க்க உதவுவது முக்கியம். ஆகவே, இந்த சிறு குழந்தைகளுக்கு அவர்களின் படைப்புத் திறன்களை வளர்த்துக்கொள்ள பெற்றோர்களாகிய நாம் என்ன செய்ய முடியுமென பார்ப்போம்.

 

சுதந்திரமாக செயற்பட ஒரு இடத்தை ஒதுக்கிக்கொடுங்கள்

ஒரு நெரிசலான சூழலில், படைப்புகள் பற்றிய வெவ்வேறு வேலைகளை பெரியவர்களாகிய எம்மால்கூட சிந்திக்க முடியாது. எனவே பிறப்பிலிருந்தே சிறு குழந்தைகளின் படைப்பாற்றல் திறமைகளை முன்னிலைப்படுத்த, அவர்களுக்கு கொஞ்சம் நெரிசலற்ற இடத்தை உருவாக்க வேண்டும். அமைதியான சூழல் என்று கூறினால் அதற்கென்று பெரியதொரு அறையாகத்தான் இருக்க வேண்டும். இப்போதெல்லாம் 5 அல்லது 10 பேர்ச் கொண்ட சிறிய வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு இது சாத்தியமில்லை. ஒரு அமைதியான இடத்தில் ஒரு சிறிய மூலையில் ஒரு மேசையை போட்டு, உங்கள் பிள்ளை விரும்பும் அளவுக்கு மேசையை அழகாக்குங்கள்.

 

ஊக்குவிப்பு

சிறியவர்கள் என்றால் மிகவும் சுறுசுறுப்பான, எப்போதும் விளையாடுவதற்கும் சுட்டித்தனம் செய்வதற்கும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கக்கூடிய ஒரு கதாபாத்திரமாகும். எனவே ஏதாவது செய்ய அவர்களை ஊக்குவிப்பது சற்றுக் கடினம். அதனால்தான் இந்த படைப்பு திறன்களை வளர்க்க பெற்றோர்கள் தொடர்ந்து தங்கள் குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும். அவற்றில் காணப்படும் நன்மைகளையும் பயன்களையும் விளக்குங்கள். குழந்தைகள் உருவாக்கிய விடயங்கள் அடங்கிய கண்காட்சி போன்ற விடயங்களை பார்வையிடுவதற்கு குழந்தைகளை உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள். உங்கள் பிள்ளைகளை ஏதோ ஒரு வகையில் ஊக்குவிக்கும் விடயங்களைச் செய்யுங்கள்.

 

எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டுங்கள்

நாம் ஊக்குவிப்பது மட்டும் போதாது. எதிலும் பெற்றோர்கள் ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும். ஆனால் பெற்றோர்களும் அதற்கு ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும். அவர்களும் அப்படியே சிந்திக்க வேண்டியதில்லை. எந்தவொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகள் ஏதாவது ஒரு நல்ல விடயத்தை செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்கள். விரும்புவது மட்டுமன்றி அதனை செய்துகாட்ட வேண்டும். பெற்றோர்களும் இந்த வேலையில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதை குழந்தைக்குக் காட்டினால் போதும். குழந்தைகளும் அவர்களுடன் சேர்ந்து வேலைகளை செய்ய பழகிக்கொள்வார்கள். போட்டி போட்டு வேலை செய்வார்கள். குடும்பத்தில் அவர்களை விட மூத்த குழந்தைகளின் படைப்புகளைக் காட்டுங்கள். ஏனென்றால் சிறு குழந்தைகள் பெரியவர்களைப் பின்பற்ற விரும்புகிறார்கள்.

 

தேவையான பொருட்கள்

அவர்கள் உருவாக்க விரும்பும் ஒரு விடயத்திற்கு தேவையான மூலப்பொருளை தொடர்ந்து வழங்குங்கள். ஒரு குழந்தைக்கு கைவினைப்பொருளை உருவாக்கவோ, நடனம் அல்லது பாடலைப் பயிற்சி செய்யவோ தேவையான வசதிகள் வளரும்போது இல்லையென்றால், அது தேவைப்படும் நேரத்தில் அதை இழக்க நேரிடும். எனவே இந்த விடயங்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் பிற வசதிகளை சிறிது சிறிதாக சேர்க்கவும். முதலில், குழந்தை ஆர்வம் காட்டாமல் இருக்கலாம். ஆனால் பின்னர், இந்த விடயங்களை அடிக்கடி பார்க்கும்போது ​​அவர்களுக்கு தானாகவே ஆர்வத்தை காட்டலாம்.

 

கட்டுப்படுத்த வேண்டாம்

குழந்தை செய்யும் எதையும் கட்டுப்படுத்த வேண்டாம். நாம் நினைத்தவாறு அவர்களுக்கு செய்ய முடியாதல்லவா? ஆகவே, அவர்கள் விருப்பத்திற்கு விட்டுவிடுங்கள். நாம் நினைப்பதை விட குழந்தையின் கற்பனை அதைவிட சற்று வித்தியாசமாக இருக்கலாம். ஒரு குழந்தை நினைக்கும் விதம் நாம் நினைப்பதை விட அழகான வடிவமைப்பை உருவாக்குகிறது. எனவே ஒருபோதும் உங்கள் குழந்தைகளை தேவையில்லாமல் கட்டுப்படுத்த முயற்சிக்காதீர்கள். நீங்கள் ஒரு தவறைக் காணும்போது, ​​மிகவும் ஒழுக்கமாக அதை சொல்லிக்கொடுங்கள்.

 

நேரம் கொடுங்கள்

எல்லாவற்றையும் போலவே, இந்த வேலைக்கும் நேரம் தேவைப்படுகிறது. குழந்தையாக இருக்கும்போது இந்த ஆக்கபூர்வ வேலைகள் குழந்தைக்கு பிடிக்காது. ஏனென்றால் சிறுவயதில் ஓடியாடி விளையாட விரும்புவார்கள். அவர்கள் சற்று வளரும்போது ஒரே இடத்தில் அமர்ந்து இவற்றை செய்ய விரும்புகிறார்கள். எனவே அடிக்கடி கட்டாயப்படுத்தாமல் அவர்களுக்கு தேவையான நேரத்தை கொடுங்கள். மேலும், அவர்கள் செய்யும் விடயத்தை செய்து முடிக்கும் வரை விரட்ட வேண்டாம். இது அவர்கள் செய்யும் வேலையிலும் சோர்வடையச் செய்கிறது. குழந்தை மறந்து அந்த ஆர்வத்தை இழந்துவிட்டதாகத் தோன்றினால், அவ்வப்போது அவர்கள் செய்து கொண்டிருந்த வேலை பற்றிய தகவல்களைக் கேளுங்கள். ஆனால் அவற்றை விரைவாக முடிக்க கட்டாயப்படுத்த வேண்டாம்.

 

செய்பவற்றை பாராட்டவும்

இது நீங்கள் செய்யக்கூடிய மிக முக்கியமான விடயம். குழந்தை உருவாக்கும் படைப்புகளை தொடர்ந்து பாராட்டுங்கள். அவை முழுமையானவையாக இல்லாவிட்டாலும் அதற்கு பதிலாக அவர்கள் செய்ததில் சிறந்த வடிவமைப்புகள் என்று கூறி பாராட்டவும். பெற்றோர் அவ்வாறு செய்யாவிட்டால், வேறு யாரும் வந்து பார்த்தப்போவதில்லை. எனவே குழந்தைகள் அவர்கள் செய்யும் வேலைகளுக்கு தொடர்ந்து முடிந்தவரை பாராட்டுங்கள். எதிர்பார்த்தவாறு முடிவு இல்லையென்றாலும், அவர்களின் முயற்சியையும் அர்ப்பணிப்பையும் பாராட்டுங்கள். அப்போதுதான் குழந்தைகள் எதிர்காலத்தில் மேலும் பலவற்றை உருவாக்குவதற்கும், நடந்த தவறுகளை சரிசெய்வதற்கும், ஒரு படைப்பை அச்சமின்றி சமுதாயத்திற்குக் காண்பிப்பதற்கும் ஆர்வத்தையும் தன்னம்பிக்கையையும் வளர்த்துக் கொள்வார்கள். அதில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்ட மறக்காதீர்கள். ஆனால் முதலிலேயே நீங்கள் தவறாக எதுவும் சொல்லாமல் பாராட்டுவதன் மூலம் தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டும்.