பேஸ்புக் என்பது ஒரு சமூக வலைத்தளம் என பாடசாலை சிறுவர்கள் முதல் பெண்கள், வயதான தாத்தா, பாட்டி வரை அனைவராலும் அறியப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. சுருக்கமாக, பேஸ்புக் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சமூக ஊடகமாகும். நாம் நீண்ட காலமாக இதைப் பயன்படுத்துகிறோம் என்றாலும், பேஸ்புக் பற்றி எங்களுக்கு தெரியாத விடயங்கள் எவ்வளவோ உள்ளன. அவற்றை ஏன் தெரிந்துகொள்ள வேண்டுமென அலட்சியமாக இருக்காதீர்கள். எமது தகவல்களை அதில் கொட்டிவைத்துவிட்டு, அதைப்பற்றி முழுமையாக அறிந்துகொள்ளாமல் இருக்கது முறையில்லைதானே? ஆகவே இந்தக் கட்டுரையை படியுங்கள்.
பேஸ்புக் பற்றிய அறிமுகம்
பேஸ்புக்கின் நிறுவுனர் மார்க் ஸக்கர்பெர்க்கின், பல்கலைக்கழக திட்டமொன்றின் விளைவாக பேஸ்புக் உருவானது. நாங்கள் தற்போது ஃபேஸ்புக்காக பயன்படுத்தும் தளத்தை உருவாக்குவதற்கு முன்பு, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது மார்க்குக்கு சில அடிப்படை யோசனைகள் இருந்தன. ஒன்று ஃபேஸ்மேஷ் என்ற வலைத்தளம். இது ஒருவருக்கொருவர் தத்தமது முகங்களை ஒப்பிடுவது போன்றது. இருப்பினும், திட்ட யோசனை அங்கீகரிக்கப்படவில்லை. அடுத்த யோசனை என்னவென்றால், இப்போது நாம் பயன்படுத்தும் ஃபேஸ்புக்கிற்கு ஒத்ததாகும். ஆனால் ஆரம்பத்தில், ஹார்வர்ட் பல்கலைக்கழக மாணவர்கள் தமது நண்பர்களுடன் இணைக்கக்கூடிய ஒரு ஆவண தொகுப்பகமாக “thefacebook” யோசனை உருவாக்கப்பட்டது. அதன் பின்னரே, 12 வயதிற்கு மேற்பட்டோர் பயன்படுத்தக்கூடிய ஒரு சமூக ஊடகமாக மாறியது.
ஆரம்பகால சட்ட சிக்கல்கள்
ஆரம்ப நாட்களில் இந்த ஃபேஸ்புக் பயணம் மார்க்குக்கு எளிதாக இருக்கவில்லை. அவருடன் இந்த திட்டத்தில் ஈடுபட்ட ஏனைய மூன்று மாணவர்கள் தமது திட்டத்தை திருடியதாக மார்க் ஜுக்கர்பெர்க் மீது வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு பல ஆண்டுகளாக இழுபட்டுச் செல்கிறது. திவ்யா நரேந்திரா மற்றும் விங்க்லேவர்ஸ் சகோதரர்கள் ஆகியோருக்கு பேஸ்புக்கில் 65 மில்லியன் டொலர் இழப்பீடு மற்றும் பங்குகளை செலுத்தியதால், இந்த பிரச்சினை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்க்கப்பட்டது.
ஆண்களை விட பெண்கள் மத்தியில் பிரபலமான பேஸ்புக்
பேஸ்புக் எல்லா வயதினருக்கும் பிரபலமான சமூக ஊடக தளம் என்று நாங்கள் முன்பே கூறியுள்ளோம். ஆனால் வயது வித்தியாசம் இருந்தபோதிலும், பேஸ்புக் பயன்பாட்டில் மற்றொரு தெளிவான பிரிவு இருப்பதாக கணக்கெடுப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது தற்போது உலகில் 75% பெண் மக்கள் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துகின்றனர். ஆண்களில் 63% மட்டுமே ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துகின்றனர்.
250 பில்லியன் படங்கள்
நாம் அனைவரும் எங்கள் படங்களை ஃபேஸ்புக்கில் அப்லோட் செய்கிறோம். இதுகுறித்து நிறைய விவாதம் நடைபெறுகிறது. நிச்சயமாக, பேஸ்புக் மூலம் அப்லோட் செய்யப்பட்ட எங்கள் படங்கள் பின்னர் சிக்கல்களை ஏற்படுத்தும். ஆனால் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றினால், ஆபத்து இல்லாத ஃபேஸ்புக்கைப் பயன்படுத்தலாம் மற்றும் படங்களை பதிவேற்றலாம். அதைப்பற்றி தனியொரு தொகுப்பில் பேசுவோம்.
இந்த படங்களை பதிவேற்றுவது பற்றி பேசினால், இப்போது நாம் அனைவரும் இதுவரைக்கும் 250 பில்லியன் பேர் பதிவேற்றிய படங்களை இந்த பேஸ்புக் தளத்தில் காணலாம். பேஸ்புக்கில் ஒவ்வொரு நாளும் 350 மில்லியனுக்கும் அதிகமான படங்கள் அப்லோட் செய்யப்படுகின்றன.
50% மாத்திரமே ஆங்கிலம் தெரிந்தவர்கள்
இப்போது நம் நாட்டில் பேஸ்புக் பயன்படுத்தும் சகோதர சகோதரிகள், ஏதோ ஐரோப்பிய நாட்டில் இருந்து வந்தவர்களை போல பெரும்பாலான போஸ்ட்ஸ், கருத்துகள், கேப்ஷன்ஸ் போன்றவற்றை ஆங்கிலத்தில் தான் போடுகின்றனர். ஆனால் உண்மையான கதை ஆச்சரியமாக இருக்கிறது. உலகம் முழுவதும் பேஸ்புக் பயன்படுத்தும் மக்களில் சுமார் 50% ஆனோர் அதாவது அவர்களில் பாதி பேர் மட்டுமே ஆங்கிலம் பேசுவோர் ஆவர்.
மார்க் ஸக்கர்பெர்க்கிற்கு நிறத்தை அடையாளம் காண தெரியாது!
இது ஒரு ஆச்சரியமான விடயம். இந்த ஃபேஸ்புக் வலைத்தளம் ஏன் நீல நிறத்தில் தயாரிக்கப்பட்டுள்ளதென நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அதற்கு காரணம் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் வண்ண குருட்டுத்தன்மை கொண்ட மனிதர். அதாவது அவருக்கு சிவப்பு மற்றும் பச்சை நிறங்கள் விளங்காது. அதாவது அந்த வண்ணங்களுடன் வேலையை செய்வது அவருக்கு கடினமாக இருந்தது. இது பெரும்பாலும் தாயிடமிருந்து பெறக்கூடிய ஒரு மரபணு குறைபாடாகும். மார்க் ஸக்கர்பெர்க் சிறப்பாகக் காணும் நிறம் நீலமாக இருந்துள்ளது. சிவப்பு மற்றும் பச்சை வண்ணங்கள் கொஞ்சமாக கலக்கப்பட்டு இருந்தாலும் அவருக்கு அது பிரச்சினையாக இருந்துள்ளது.
98% மொபைல் பாவனை
பேஸ்புக் இன்று உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் சமூக ஊடகம் என்றாலும், உலகத்தில் எவ்வளவு பிரபலமாக இருந்தாலும் இதிலும் ஒரு ஆச்சரியம் உண்டு. அதாவது, இதனை பயன்படுத்தும் பெரும்பாலான மக்கள் கையடக்க தொலைபேசிகள் மூலமாகவே பேஸ்புக்கில் உள்நுழைகிறார்கள். ஒரு குறிப்பிடத்தக்களவு மக்களே டெஸ்க்டொப் அல்லது மடிக்கணினிகளில் பயன்படுத்துகின்றனர்.