தெய்வங்களின் குறும்புத்தனமான செயல்கள்

 

எந்த மதத்தவராக இருந்தாலும் கடவுள் நம்பிக்கை கட்டாயம் இருக்கும். கடவுள்களின் வாழ்க்கை உண்மையில் மானித வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாகவே அமைந்துள்ளன. கடவுள்களும்  தவறு செய்துள்ளார்கள் என்றால் நம்புவீர்களா? ஆம் மக்களே இந்துமத கடவுளரின் சில குறும்புத்தனமான செயற்பாடுகள் அல்லது அவர்கள் செய்த தவறுகளால் அவர்களுக்கு நேர்ந்த விடயங்களை இன்று பார்ப்போம். இதை தவறு என்று கூறினாலும், உண்மையில் மனித வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக இடம்பெற்ற திருவிளையாடல்களே இவை என்பது இந்துக்களின் நம்பிக்கை. அதுமட்டுமன்றி, அவற்றின் மூலம் மானிட வாழ்க்கைக்கு பாடம் புகட்டுவதாகவும் நம்பப்படுகின்றது.

 

ஒரு தலையை பறிகொடுத்த பிரம்மர்

இந்த பிரபஞ்சத்தை முழுவதுமாக உருவாக்கிய கடவுளாக மஹாபிரம்மர் கருதப்படுகிறார். உலகில் எல்லாவற்றையும் உருவாக்கும் மஹாபிரம்மர் ‘சதரூபா’ என்ற தெய்வத்தை உருவாக்குகிறார். பெயரைப் போலவே இந்த தெய்வம் அதிசயமான அழகில் இருந்தது. மஹாபிரம்மர் தனது சொந்த படைப்பின் மீதே காமத்தால் பிணைக்கப்படுகிறார். இதைக் கண்டு அதிர்ச்சியடைகிறார் சதரூபா. அதற்கு காரணம் என்னெவென்றால், மஹாபிரம்மர் தந்தை, சதரூபா அவரது மகள். சதரூபா பிரபஞ்சம் முழுவதும் மஹாபிரம்மனிடமிருந்து தப்பிக்க ஓடிச்செல்கிறார். அவளை பின் தொடர்ந்து மஹாபிரம்மர் வருகிறார். இந்த நேரத்தில் சிவபெருமான் சதரூபாவின் அழுகையைக் கேட்டு, அதிர்ச்சியும் கோபமும் அடைகிறார். சிவபெருமான் மஹா பிரம்மரைத் துரத்திச்சென்று மஹா பிரம்மனின் ஐந்து முகங்களில் ஒன்றை தண்டனையாக வெட்டுகிறார். மேலும், கோபமுற்ற சதரூபா, மஹா பிரம்மருக்கு பக்தர்கள் என்று எவரும் இருக்கக்கூடாது என்று மஹா பிரம்மரை பார்த்து சபிக்கிறார். இந்த சம்பவத்தின் விளைவாக, சதுர்முகா என்றும் பிரம்மா அழைக்கப்படுகிறார். ஏனைய கடவுள்களுக்கு போல பிரம்மாவுக்கு அதிக கோயில்கள் கிடையாது.

 

உடல் முழுவதும் ஆயிரம் யோனிகளை சாபமாக பெற்ற இந்திரர்

கடவுள்களின் அரசர் என்றும் அழைக்கப்படும் தேவ மண்டலத்தின் தலைவர் இந்திரன். இந்திரனுக்கு ஒரு நாள் இயற்கைக்கு மாறான ஆசை ஏற்படுகிறது. அதாவது அஹல்யா என்று அழைக்கப்படும் முனிவரின் மனைவியை கவர்ந்திழுப்பதே அந்த ஆசை. எனவே முனிவர் குளிக்கச் செல்லும்வரை காத்திருந்து முனிவரைப் போல உருமாறி மடத்திற்குள் சென்று அஹல்யாவுடன் இந்திரன் இணைகிறார். இவை முடிந்து மடத்தை விட்டு வெளியேறும்போது முனிவரும் இந்திரனும் நேரெதிரே சந்தித்துக் கொள்கின்றனர். என்ன நடந்ததென அறிந்த முனிவர், இந்திரனின் உடல் முழுவதும் ஆயிரம் பெண் யோனிகள் உருவாகட்டும்  என சபிக்கிறார். அகல்யாவையும் கருங்கல்லாக மாற சபிக்கிறார். இதன்மூலம், தேவ மண்டலத்தை எதிர்கொள்ள முடியாது இந்திரர் மறைந்து கொள்கிறார். இதன் காரணமாக தேவமண்டல நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன. அந்த நேரத்தில் மஹாபிரம்மாவும் மற்ற தெய்வங்களும் முனிவரை சந்தித்து அவர்களை மன்னிக்குமாறு வேண்டுகின்றனர். தெய்வங்களின் குரலைக் கேட்ட மஹாபிரம்மா இந்திரனின் உடலில் உள்ள ஆயிரம் யோனியை ஆயிரம் கண்களாக மாற்றுகிறார். இதனால்தான் இந்திரனுக்கு சஹாசஸ் என்ற பெயரும் வந்தது. விஷ்ணு ராமர் உருவத்தில் வந்து கல்லைத் தொடும்போது அஹல்யாவின் சாபமும் ஒரு நாள் மறைந்து போனது.

 

பெண்ணை போல மாறி அசுரர்களை ஏமாற்றிய விஷ்ணு

கடவுளின் உணவு “அமிர்தம்” என்று கருதப்படுகிறது. இந்த அமிர்தம் கொதிக்கும் பாலில் இருந்து வெளிப்படுகிறது. பால் குடத்தில் இருந்து அமிர்தம் வெளிப்படும் போது, ​​அசுரர்கள் அதை எடுத்துக்கொள்கிறார்கள். இந்த நேரத்தில் தெய்வங்கள் விஷ்ணுவிடம் அசுரர்களிடமிருந்து அமிர்தத்தை பறித்து தங்களுக்குக் கொடுக்கச் சொல்கின்றனர். விஷ்ணு பகிரங்கமாக ஒரு தந்திரமான முடிவை பயன்படுத்துகிறார். தான் பார்த்தவுடன் கண்ணை பறிக்கும் பெண்ணாக மாறி அசுரர்களின் கவனத்தை சிதறடிப்பதே அந்த தந்திரம். “மோகினி” என்பது அந்த உருவத்தின் பெயர். அசுரர்களின் மோகினியின் நடனம் குறித்து கவனம் செலுத்துகையில், “அமிர்தம்” கொண்ட பானையைத் திருடி விஷ்ணு கடவுளுக்குக் கொடுக்கிறார்.

 

கும்பகர்ணனை நித்திரைக்கு அனுப்பிய சரஸ்வதி

கும்பகர்ணனைப் பற்றி அனைவரும் கேள்விப்பட்டிருக்கிறோம். கும்பகர்ணன், விபீஷணன் மற்றும் இராவணன் ஆகியோர் மஹாபிரம்மாவிடமிருந்து ஒரு வரத்தைப் பெற தவமிருந்தனர். அவர்களின் தவத்தால் ஈர்க்கப்பட்ட மஹாபிரம்மர் அவர்களுக்கு வரம் கொடுக்க முடிவு செய்கிறார். கும்பகர்ணன் கடவுள்களின் தலைவராக மாற விரும்புகிறார். அதாவது இந்திரனின் இருக்கை, இந்திராசனத்தை பெற விரும்புகிறார். இந்த எண்ணத்தை அறிந்த இந்திரன் சரஸ்வதி தேவியின் உதவியை நாடுகிறார். சரஸ்வதி தேவியும் பேச்சாற்றலுக்கான தெய்வமாயிற்றே. அந்த நேரத்தில் அவர் கும்பகர்ணனின் வாயிலிருந்து “இந்திராசனம்” என்பதற்கு பதிலாக “தூங்காசனம்” என்று கேட்கச்செய்கிறார். இந்த வரத்தைக் கேட்டதும், மஹாபிரம்மாவும் அதைக் கொடுக்கிறார். பிறகு வரத்தை அறிந்த கும்பகர்ணன், இது ஒரு ஆசீர்வாதம் அல்ல, சாபம் என்று மகாபிரம்மாவிடம் விளக்குகிறார். அந்த வரத்தை முழுவதுமாக ஒழிக்க முடியாததால் வரத்தை சற்று மாற்றுகிறார். அதன்படி, கும்பகர்ணன் ஆண்டின் பாதி காலம் தூக்கத்திலும் மீதி காலம் விழித்தும் இருக்க வரத்தை மாற்றி அமைக்கிறார்.

 

சந்திரனை மறைத்த விநாயகர்

ஒரு நாள் நாரத முனிவர் சிவபெருமானுக்கு ஒரு பழத்தைக் கொண்டு வருகிறார். சிவபெருமான் தனது இரண்டு மகன்களான விநாயகருக்கும் முருகருக்கும் பழத்தைப் பகிர்ந்து கொள்ளும்படி கொடுக்கிறார். ஆனால் இருவரும் மாறி மாறி சண்டையிட்டு கொள்கிறார். சிவபெருமானால் இந்த சண்டையை தீர்க்க முடியாதபோது, ​​யாரிடம் பழம் கொடுக்க வேண்டும் என்று கேட்க சிவன் அவர்கள் இருவரையும் மஹாபிரம்மாவிடம் அனுப்பினார். மஹாபிரம்மா முருகனுக்கு அந்த பழத்தை தருகிறார். அந்த நேரத்தில் கோபமடைந்த விநாயகர் தனது கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் அசுரர் வேடத்தில் வந்து மஹாபிரம்மாவை பயமுறுத்துகிறார். ஆனால் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் சந்திரக் கடவுள், விநாயகக்கடவுளின் குழந்தைத்தனத்தைக் கண்டு சிரிக்கிறார். இதன் காரணமாக எல்லா அசுரர்களும் இந்த அசுரன் யார் என்று அறிந்து கொள்கின்றனர். இதன் விளைவாக, கடும் கோபமடைந்த விநாயகர், சந்திரனை யாரும் பார்க்காதபடி சபிக்கிறார். இந்த சாபத்தால் கலக்கம் அடைந்த மற்ற தெய்வங்கள், விநாயகரின் கோபம் குறையும் வரை இருந்துவிட்டு பிறகு, சாபத்தை மாற்றுமாறு விநாயகக் கடவுளிடம் கேட்கின்றனர். அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, சந்திரன் படிப்படியாக முழுமையான கண்ணுக்கு தெரியாத நிலையில் இருந்து ஒரு முழு நிலைக்கு வளரும் என்று சாபத்தை மாற்றுகிறார். அதனால்தான் நமக்கு அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்கள் உருவாகின்றன. (விநாயகர்-முருகன் மாம்பழ சண்டை தொடர்பான வேறு கதைகளும் உண்டு)

 

பார்வதி தேவியை தோற்கடித்த சிவபெருமான்

ஒரு நாள் பார்வதி தேவி சிவபெருமானை நடனப் போட்டிக்கு வருமாறு சவால் விடுத்தார். பார்வதி தேவி சிவபெருமானின் அனைத்து திறன்களையும் நடனத்தில் ஒரே நேர்த்தியுடன் காட்டினார். தனது மனைவியிடம் தோற்கப்போகிறோம் என்பதை உணர்ந்த சிவபெருமான் தனது வலது காலை தலை வரை உயர்த்தி நடனமாடினார் (அது எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்). பார்வதி தேவி இந்த நடனத்தைக் கண்டு வெட்கப்பட்டு தாமாகவே தோல்வியை ஏற்றுக்கொண்டார்.

 

சிவபெருமானையே தலைகுனிய வைத்த முருகன்

ஒரு நாள் சிவபெருமானைச் சந்திக்க மஹாபிரம்மர் வருகிறார். அவர் சிவபெருமானை போற்றினாலும், முருக பெருமானை கவனஞ்செலுத்தவில்லை. இதனால் கோபமடைந்த முருக பெருமான் மஹாபிரம்மாவைச் சந்திக்கச் சென்று, “நீங்கள் யார்?” என்று கேட்டார். பிரம்மர் அதற்கு “முழு பிரபஞ்சத்தையும் படைத்தவர்” என்று பதிலளிக்கிறார். அப்படியானால், பிரபஞ்சம் முழுவதும் பரவியிருக்கும் “ஓம்” என்ற வார்த்தையின் பொருள் என்ன என்று முருகர் கேட்கிறார். மஹாபிரம்மாவால் இதற்கு பதிலளிக்க முடியாமல் போனது. இதன் காரணமாக பிரம்மா வெட்கப்பட்டு சிறை பிடிக்கப்படுகிறார். இதைப் பற்றி அறிந்த சிவபெருமான் தனது மகனிடம் மஹாபிரம்மாவை விடுவிக்கச் சொல்கிறார். முருகரும் அந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறார். மேலும், “ஓம்” என்ற வார்த்தையின் பொருள் என்ன என்று சிவன் கேட்கிறார். முருகன் சிரித்துக் கொண்டே, “அதைப் பற்றி கற்பிக்க ஒரு மாணவராக ஒரு கோரிக்கை வைக்கப்பட வேண்டும்” என்று கூறுகிறார். அந்த நேரத்தில் சிவபெருமான் முருக கடவுளுக்கு அருகிலுள்ள ஒரு இருக்கைக்குச் சென்று அவரை வணங்கி அவர் விரும்பிய கேள்விக்கான பதிலையும் அறிந்துகொண்டார். இந்த சம்பவத்தின் காரணமாக முருகனுக்கு ஆசிரியருக்கும் ஆசிரியர் என்று பொருள்படும் ‘சுவாமிநாதன்’ என்ற பெயரும் கிடைத்தது.