சோளத்தை பயன்படுத்தி சுவையான உணவு தயாரிப்போம்

 

சிறியோர் முதல் பெரியோர் வரை விரும்பிச் சாப்பிடும் உணவாக சோளம் காணப்படுகின்றது. சோளத்தை அப்படியே அவித்தும் பொரித்தும் சாப்பிடுவது மட்டுமன்றி, சோள மாவிற்கும் நல்லா கேள்வி காணப்படுகின்றது. பருப்பிற்கு பதிலாகவும் சோளத்தை போட்டு சமைக்கலாம். சோளம் சுவையானது மட்டுமன்றி சத்தான உணவும்கூட. அதனை பயன்படுத்தி தயாரிக்கக்கூடி மேலும் பல உணவுப்பொருட்கள் பற்றி இன்று பார்க்கலாம்.

 

கோர்ன் லட்

தேவையான பொருட்கள்

 1. வேகவைத்த சோள விதைகள் – 1 கப்
 2. லேசாக வேகவைத்த கரட் – 1 கப்
 3. வெட்டப்பட்ட வெள்ளரிக்காய் – 1 கப்
 4. நறுக்கிய தக்காளி – 1 கப்
 5. நறுக்கிய குடை மிளகாய் – 1 கப்
 6. நறுக்கிய வெங்காயம் – 1
 7. உப்பு
 8. மிளகுத்தூள்
 9. ஆப்பிள் சைடர் வினிகர் – 1/4 கப்
 10. ஒலிவ் எண்ணெய்
 11. நறுக்கிய பார்ஸலி இலைகள் சிறிதளவு

 

 • ஒரு கிண்ணத்தை எடுத்து சோள விதைகளை போட்டு அதில், குடைமிளகாய், வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காய், கரட் மற்றும் சுவைக்கேற்ப உப்பு மற்றும் மிளகு சேர்த்து கலக்கவும். பிறகு அதில் சிறிதளவு வினிகர் சேர்க்கவும். இதையெல்லாம் இப்போது நன்றாக கலக்கவும்.
 • சுமார் 2 தேக்கரண்டி ஒலிவ் எண்ணெயை அதில் சேர்த்து கிளறவும். மேலே நறுக்கிய பார்ஸ்லியையும் தெளிக்கவும்.

 

சோளக் கறி

தேவையான பொருட்கள்

 1. பச்சை சோள விதைகள் – 1 கப்
 2. காய்ந்த மிளகாய் – 2
 3. நறுக்கிய பூண்டு – 3-4
 4. தேங்காய் பால் – 1 கப்
 5. மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
 6. மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
 7. நறுக்கிய பச்சை மிளகாய் 2
 8. மசாலத்தூள் – 1/2 தேக்கரண்டி
 9. நறுக்கிய சிவப்பு வெங்காயம் – 4
 10. ரம்பை மற்றும் கறிவேப்பிலை

 

 • சோளத்தை நன்றாக வேகவைக்கவும். ஒரு பாத்திரத்தில் சிறிது சோளம் போட்டு மிளகாய் தூள், மஞ்சள் தூள், மசாலா தூள், பச்சை மிளகாய், சிறிது சிவப்பு வெங்காயம் மற்றும் தேங்காய் பால் சேர்க்கவும். ஒரு சிட்டிகை உப்பும் அதில் சேர்க்கவும்.
 • ஒரு தனி அடுப்பில், சிறிது எண்ணெயை சூடாக்கி, நறுக்கிய பூண்டு, உலர்ந்த மிளகாய், சிவப்பு வெங்காயம், ரம்பை மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும். சோள கறியில் பால் கொதிக்கும் போது, ​​இந்த கலவையை அதில் சேர்த்து கிளறவும்.

 

சோள உருண்டை

தேவையான பொருட்கள்

 1. உலர்ந்த சோள விதைகள் – 1 கப்
 2. கருப்பட்டி வெல்லம் – அரை கப்
 3. தேங்காய் – 1/2 கப்
 4. உப்பு
 5. தேன் – 1/4 கப்

 

 • சோளத்தை வறுத்து அரைக்கவும். அல்லது ஒரு உரலில் போட்டு நன்கு இடித்து அரைக்கவும்.
 • இதில் தேங்காய் மற்றும் கருப்பட்டியை போட்டு நன்கு அரைக்கவும். பிறகு சிறிது தேன் சேர்த்து அரைக்கவும். அது நன்கு ஈரப்பதமாக வரும்போது உருண்டைகளாக செய்து சாப்பிடுங்கள்.

 

கோர்ன் ஒம்லட்

தேவையான பொருட்கள்

 1. இளம் சோளத்தின் விதைகள்
 2. நறுக்கிய வெங்காயம் – 1
 3. துண்டுமிளகாய் – 1 தேக்கரண்டி
 4. நறுக்கிய பச்சை மிளகாய் – 2
 5. நறுக்கிய கறிவேப்பிலை
 6. உப்பு மற்றும் மிளகுத்தூள்
 7. நறுக்கிய குடை மிளகாய் – 1/4
 8. எண்ணெய்

 

 • ஒரு முழு சோளத்தை எடுத்து விதைகளை உதிருங்கள். அதை கிரீமி ஆகும் வரை அரைக்கவும். தேவைப்பட்டால் சிறிது நீர் சேர்க்கவும். சுவைக்கேற்ப மிளகாய், வெங்காயம், குடைமிளகாய், உப்பு மற்றும் மிளகு சேர்த்து, கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு கலக்கவும்.
 • பின்னர் வாணலிலை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்துக்கொள்ளங்கள். அதில் மேற்குறிப்பிட்ட கலவையில் சிறிது சேர்த்து, இருபுறமும் மெல்லியதாக வறுக்கவும்.

 

கோர்ன் பக்கோடா

தேவையான பொருட்கள்

 1. பச்சை சோள விதைகள் – 1 கப்
 2. நறுக்கிய பச்சை மிளகாய் – 2
 3. உப்பு
 4. மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
 5. கரம் மசாலா – 1/4 தேக்கரண்டி
 6. அரிசி மா – 1/4 கப்
 7. நறுக்கப்பட்ட மிஞ்சி இலைகள்
 8. எண்ணெய்

 

 • இளம் சோள விதைகளில் சிறிதளவை எடுத்து வைத்துவிட்டு மீதமானவற்றை பச்சைமிளகாயுடன் சேர்த்து அரைக்கவும்.
 • உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா, அரிசி மா, சோள விதைகள் மற்றும் புதினா இலைகளை ஒன்றாக சேர்க்கவும். இதையெல்லாம் கலந்து நன்கு கிளறவும். இந்த சோள பக்கோடா கலவையை சிறிது சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.