குழந்தைகளின் எடையை அதிகரிக்க கொடுக்கக்கூடிய உணவுகள்

 

 குழந்தைகளுக்கான உணவைப் பற்றி நாம் பேசும்போது குழந்தைகளின் எடைதான் ​​முதலில் நினைவுக்கு வரும். ஏனென்றால் பெரியவர்களாகிய நாம், நம் உடல் எடையை அதிகரிக்காமல் கவனமாக சாப்பிடுவதில் ஆர்வம் காட்டுகிறோம். ஆனால் குழந்தைகளுக்கு உணவளிப்பதன் முக்கிய நோக்கம் அவர்களின் வளர்ச்சியுடன், அவர்களின் எடையை அதிகரிப்பதும் ஆகும். எனவே, 6 மாதங்களை தாண்டிவிட்ட சிறிய குழந்தைகளைக் கொண்ட தாய்மார்கள் அனைவரும் எப்படியாவது குழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்க ஆர்வமாக உள்ளனர். குழந்தைகள் உணவு சாப்பிட அடம்பிடிப்பதால், அவர்கள் சாப்பிடும் சிறு கவள உணவானாலும் சத்தானதாகவும், குழந்தையின் எடை அதிகரிப்பதாகவும் இருக்கத்தான் தாய்மார்கள் விரும்புகிறார்கள். ஆகவே, சாப்பிடும் குழந்தையின் எடையை அதிகரிக்க புரதம் மற்றும் கலோரிகளைக் கொண்ட சில உணவுகளைப் பற்றி இன்று பார்ப்போம்.

 

வாழைப்பழம்

வாழைப்பழங்கள் பொட்டாசியம், விட்டமின் C மற்றும் B மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அடங்கிய நல்லதொரு உணவாகும். மேலும் இது ஒரு அதிக கலோரி கொண்ட உணவும்கூட. குழந்தைகளின் உடல் எடையை இலகுவாக அதிகரிக்கும். வாழைப்பழங்கள் பல குழந்தைகளுக்கு பிடித்த உணவு. எனவே ஒவ்வொன்றாக அதாவது, ஒரு தனி பழமாக அல்லது ஓட்ஸ் அல்லது தயிர் போன்ற மற்றொரு டிஷ் உடன் கலந்து அல்லது ஒரு பேன்கேக் செய்யும் போது அதில் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். வாழைப்பழம் எங்கும் கிடைக்கக்கூடியது. பையில் எடுத்துச் செல்வதும் எளிது. பயணத்தின்போது உங்களுடன் எடுத்துச் சென்று குழந்தைகளுக்கு இலகுவாக கொடுக்கவும் முடியும்.

 

வத்தல்கிழங்கு

வத்தல் கிழங்கு ஒரு உயர்தரமான குழந்தை உணவாகும். குறிப்பாக மஞ்சள் வத்தல் கிழங்கு, விட்டமின் A, C, B6, கொப்பர், போஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் பலவற்றைக் கொண்டுள்ளது. எனவே, குழந்தையின் எடையை அதிகரிக்க உதவும் எளிதான உணவாகும். வத்தல்கிழங்கில் உள்ள நார்ச்சத்து காரணமாக குழந்தையின் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளுக்கும் இது ஒரு சிறந்த உணவாகும். குழந்தைகளும் இதன் இயற்கையான இனிப்பு காரணமாக வத்தல் கிழங்கை சாப்பிட விரும்புகிறார்கள். இதை வேகவைத்து, வறுத்தெடுத்து சாப்பிடலாம் அல்லது பிற உணவுகளில் சேர்த்து சாப்பிடலாம்.

 

தானிய வகைகள்

இவை நாம் அனைவரும் அறிந்த கடலை, கௌபி போன்ற தானிய வகைகள் மற்றும் பருப்பு வகைகள். இந்த வகை தானியங்களில் புரதம், மெக்னீசியம், கல்சியம், பொட்டாசியம், இரும்பு மற்றும் நார்ச்சத்து நிறைந்த பொருட்களாகும். இந்த வகை தானியங்களில் இறைச்சியிலிருந்து நாம் பெறுவதை விட அதிக புரதத்தை பெறலாம். ஆனால் இவை இறைச்சி மற்றும் மீன்களை விடவும் மிகவும் மலிவானது மற்றும் எந்த காலத்திலும் பெறவும் கூடியது. 6 மாதத்திலிருந்து, குழந்தையின் உணவில் பயறு போன்றவற்றைச் சேர்த்து சமைக்கலாம். நீங்கள் படிப்படியாக மற்ற தானிய வர்க்கங்களையும் சமைத்து கொடுக்கலாம்.

 

நெய்

சந்தையிலும் பல்பொருள் அங்காடிகளிலும் வாங்கி சாப்பிடக்கூடியவாறு இருக்கும் இந்த சுத்திகரிக்கப்பட்ட நெய் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் எடை அதிகரிப்பிற்கும் ஏற்ற நல்லதொரு சத்தான உணவு. தனியாக மாத்திரமல்லாமல் பிற உணவுப்பொருட்களுடன் சேர்த்து சாப்பிடக்கூடிய இது உண்மையில் குழந்தைகளின் உணவிற்கு சேர்க்ககூடிய மிகவும் பயனுள்ள உணவாகும்.

 

பாலாடைக்கட்டி அல்லது சீஸ்

பாலாடைக்கட்டி அல்லது நம் அனைவருக்கும் தெரிந்த சீஸ் மிகவும் சத்தான உணவு என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் சீஸில் உப்பு கலக்கப்பட்டுள்ளது. ஒரு வருடத்திற்கும் குறைவான குழந்தைகளுக்கு உப்பு கொடுக்கக்கூடாது என்பதால், உப்பு சேர்க்காத சீஸ்களை இலங்கையில் தேடுவது கடினம் என்பதால், முதலில் மருத்துவ ஆலோசனையைப் பெறுவது நல்லது. இருப்பினும் சீஸ் என்பது கல்சியம், புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்த ஆரோக்கியமான உணவாகும். குழந்தையின் எடையை அதிகரிக்க சிறந்த உணவாகும்.

 

யோகர்ட்

யோகர்ட் ஒரு பால் தயாரிப்பாகும். வயது வந்தவர்களின் அன்றாட ஊட்டச்சத்து தேவைகளை கூட பூர்த்தி செய்யக்கூடிய ஒரு உணவு இதுவாகும். எனவே சரியான வயதில் குழந்தைக்கு தயிரை அறிமுகப்படுத்துவது ஊட்டச்சத்து தேவைகளுக்கும் எடை அதிகரிக்கும் செயற்பாட்டிற்கும் அதிகம் உதவும். யோகர்ட்டில் கொழுப்பு, புரதம், நார்ச்சத்து மற்றும் கல்சியம் போன்ற பல சத்துக்கள் உள்ளன. இருப்பினும், உப்பு மற்றும் சர்க்கரை இரண்டையும் ஓரளவிற்கு கொண்டிருப்பதால் மருத்துவ ஆலோசனையின்படி இதை அறிமுகப்படுத்துவது நல்லது. உப்பு மற்றும் சர்க்கரை பற்றி யோசிக்கும் ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளை கொண்ட தாய்மார்களுக்கு தயிர் வீட்டில் சுலபமாக தயாரிக்கக்கூடிய உணவாகும்.

 

ஆனைக்கொய்யா

ஆனைக்கொய்யா என்பது நாம் அனைவரும் விரும்பும் ஒரு பழமாகும். நாம் இதை ஒரு பழமாக அல்லது ஜூஸ் செய்து மட்டுமே சாப்பிட்டாலும், ஐரோப்பிய நாடுகளில் இந்த பழங்களை சலட்கள் மற்றும் சாண்ட்விச்கள் போன்ற பல உணவுகளில் பயன்படுத்தப்படுகின்றன. இது விட்டமின்கள், கலோரிகள் மற்றும் நல்ல கொழுப்பு நிறைந்த உணவாகும். உங்கள் குழந்தைகளின் உணவில் இந்த பழங்களைச் சேர்ப்பது உடல் எடையை அதிகரிக்க உதவுவது மட்டுமல்லாமல் பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. குழந்தைக்கு உணவு கொடுக்கும் ஆரம்ப நாட்களிலிருந்து கொடுக்கக்கூடிய மிகவும் சத்தான உணவாகும். மேலும் இதன் இனிப்புச்சுவை காரணமாக குழந்தைகள் அதிகமாக சாப்பிட விரும்புகிறார்கள். தயிர் போன்ற பிற உணவுகளுடன் இதை நேரடியாகவோ அல்லது பானமாகவோ சாப்பிடக்கொடுக்கலாம்.