கெட்ட பெயரை சம்பாதித்த ரோமானிய பேரரசர்கள்

 

ரோமை மையமாகக் கொண்டு உருவாகிய ரோமானிய நாகரிகம் ஐரோப்பாவை மட்டுமன்றி  முழு உலகையும் ஆளும் ஒரு உலக நாகரிகமாக மாறியது. ஆரம்பத்தில் குடியரசாக இருந்த ரோம் பின்னர் முடியாட்சியாக மாறியது. ரோமானிய சக்கரவர்த்திக்கு அபரிமிதமான தெய்வீக பலம் இருந்தன. சில ரோமானிய பேரரசர்கள் தடையற்ற பலத்தால் பைத்தியக்காரர்களைப் போல செயற்பட்டனர். மேலும், சில சமயங்களில் பைத்தியம் பிடித்தவர்கள் ரோமானிய பேரரசர்களாக மாறினர். இதுபோன்ற ஒரு சில ரோமானிய பேரரசர்களைப் பற்றி இன்று பார்க்கவுள்ளோம்.

 

நீரோ

ரோம் தீப்பிடித்து எரியும்போது வீணை வாசிப்பது போல என்று ஒரு உவமை ஒன்றும் உள்ளது. அது இன்றும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. உண்மையில் கி.பி 64 இல் ரோமில் ஏற்பட்ட பாரிய தீ நகரத்தின் பெரும்பகுதியை அழித்தது. அந்த நேரத்தில், ரோமானியர்கள் தமது பேரரசர் நீரோ வேண்டுமென்றே ரோம் நகரை தீக்கிரையாக்கியதாக நம்பினர். அவர் கட்ட ஆசைப்பட்ட அரண்மனையை இந்த இடத்தில் கட்டுவதற்காக எரித்ததாக நம்பினர். ஆகவே, ரோம் தீப்பிடித்ததாகக் கேள்விப்பட்டும், அவர் வீணை வாசிப்பதை இரசிப்பதாக வதந்திகள் பரவ ஆரம்பித்தன. மேலும், நீரோ தனது தாயையும் மனைவியையும் கொன்று கிறிஸ்தவர்களை வேட்டையாடியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால் ரோம் முழுவதும் அவருக்கு எதிராக எதிர்ப்புக்கள் எழுந்ததால் நீரோ தற்கொலை செய்து கொண்டார்.

 

செப்டிமஸ் செவெரஸ்

அப்போதைய ரோமில் வணக்கத்திற்குரிய கடவுளாக இருந்த ஜூபிடர் தவிர வேறு எந்த வழிபாடும் பேரரசர் செப்டிமஸ் செவெரஸால் அனுமதிக்கப்படவில்லை. அத்துடன் அது ரோமானிய சாம்ராஜ்யத்திற்கு எதிரான சதி  என்றும் கருதினார். அத்தகைய மதத் தலைவர்கள் அடையாளம் காணப்பட்டவுடன் தூக்கிலிடப்பட வேண்டும் என்று ஒரு சட்டத்தையும் இயற்றினார். அவருடைய விசுவாசத்தின் காரணமாக, கிறிஸ்தவர்களும் யூதர்களும் ரோமானியப் பேரரசில் முன்னெப்போதையும் விட அதிகமாக படுகொலை செய்யப்பட்டனர்.

 

டைபீரியஸ்

அரச சிம்மாசனத்தை வாரிசாகப் பெறவிருந்த பலரின் மரணத்தின் விளைவாக, ரோம் முதல் பேரரசரான அகஸ்டஸுக்குப் பின் டைபீரியஸ் ஆட்சி பீடம் பெற்றார். அரச வாரிசுகளின் தொடர் மரணத்தின் காரணமாக அவர் தனது அரச அலுவல்களின் வேலையில் பெரிதும் ஆர்வம் காட்டவில்லை. அவர் மாநில நிர்வாகத்தை செனட்டிற்கு விட்டுவிட்டு, காப்ரி தீவுக்குச் சென்றார். அங்கு அவருடைய விபரீதமான காமப்பசியை திருப்திப்படுத்த அவர் அங்கு ஒரு பெரிய அரண்மனையை கட்டி, சிறு குழந்தைகளை தனது பாலியல் தேவைகளுக்கு பயன்படுத்தினார்.

 

கலிகியூலா

டைபீரியஸின் மருமகனான கலிகுலா சக்கரவர்த்தி ரோமானியர்களால் சிறந்த மன்னனாக கருதப்பட்டார். ஆனால் இந்த சிறந்த மன்னர் என்ற பட்டம் நீண்ட காலம் நீடிக்கவில்லை. அதிகளவான காமத்தால் அவதிப்பட்ட அவர், தனக்கு பிடித்த குதிரையை செனட்டில் உறுப்பினராக மாற்றினார். ரோமின் பிரபுக்கள் குதிரைக்கு ஒரு பளிங்கு நிலையை கட்டவும், குதிரையுடன் உணவருந்தவும் கட்டாயப்படுத்தப்பட்டனர். அது ஒரு கடவுளாக வணங்கப்பட வேண்டும் என்றும் கட்டளையிட்டார். அவரது இந்த கொடுமையை தாங்க முடியாமல், கலிகுலா தனது சொந்த காப்பாளர்களாலேயே படுகொலை செய்யப்பட்டார்.

 

கராகலா

ஆரம்பத்தில், கராகலா மற்றும் அவரது சகோதரர் கெட்டா ஆகியோர் செனட்டால் ரோம் நகரின் இணை பேரரசர்களாக பெயரிடப்பட்டனர். ஆனால், தனது சகோதரருடன் அரியணையை பகிர்ந்து கொள்ள விரும்பாத கராகலா, கெட்டாவையும் அவரது மனைவியும் கொன்றார். எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியா மக்கள் அவரது நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகக் கேள்விப்பட்டபோது, ​​அவரும் அவரது இராணுவமும் நகரத்திற்குச் சென்று 20,000 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றனர். மேலும், எங்காவது அவருக்கு எதிராக கிளர்ச்சியின் குரலைக்கேட்டால் கூட, இராணுவத்துடன் புறப்பட்டு அந்நகரத்தையே முழுமையாக கொள்ளையடிக்கவும் அனைவரையும் கொல்லவும் உத்தரவிட்டார். இறுதியில் அவர் தனது சொந்த மெய்க்காப்பாளர்களில் ஒருவரால் கொல்லப்பட்டார்.

 

டயோக்லீஷியன்

பல கிறிஸ்தவர்களை படுகொலை செய்த ரோமானிய பேரரசராக டயோக்லீஷியன் ரோமானிய வரலாற்றில் பதியப்பட்டுள்ளார். அவர் பல்வேறு ஆணைகளை வெளியிட்டார் மற்றும் அனைத்து கிறிஸ்தவ உரிமைகளையும் இரத்து செய்தார். ஆரம்பத்தில் ரோமானிய நம்பிக்கைக்கு திரும்ப மறுத்த கிறிஸ்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் தூக்கிலிடப்பட்டனர். கிறிஸ்தவ தேவாலயங்கள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டன. கிறிஸ்தவ செனட்டர்களைக் கூட படுகொலை செய்ய அவர் தயங்கவில்லை. பொதுவாக கிறிஸ்தவர்களின் படுகொலைகளால் தனது நம்பிக்கைகள் நிறைவேறவில்லை என்பதை உணர்ந்த அவர், இறுதியாக கிறிஸ்தவர்களை சிங்கங்களுக்கு இரையாக உயிருடன் தூக்கி எறியும்படி கட்டளையிட்டார்.

 

எலெக்பாலஸ்

14 வயதில், எலக்பாலஸ் ரோம் நகரின் பேரரசரானார். பின்னர் ரோமின் பிரதான தெய்வமான ஜுபிட்டரையும் இல்லாமல் செய்து அதற்கு பதிலாக தனது பெயரைக் கொண்ட ஒரு கடவுளை அறிமுகம் செய்தார். ஒவ்வொரு நாளும் விலங்குகள், சில நேரங்களில் சிறிய குழந்தைகள்கூட கடவுளுக்காக பலியிடப்பட்டன. வக்கிரமான காம ஆசை கொண்ட அவர், ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருடனும் உறவு கொண்டார். மேலும் பெண்களின் ஆடைகளை அணிந்த இந்த ரோமானிய பேரரசர் உறவிற்கு ஆட்களை தேடி மதுபானசாலைகள் மற்றும் விபச்சார விடுதிகளுக்கும் சென்றார். இறுதியில் அவரும் தனது சொந்த மெய்க்காப்பாளர்களால் கொல்லப்பட்டார்.