உலக வரலாற்றிலிருந்து அழிந்துபோன சிறப்புவாய்ந்த நூலகங்கள்

 

மனித நாகரிகத்தின் அறிவுக் களஞ்சியங்கள் நூலகங்கள் என்றால் அது மிகையாகாது. முழு உலகமும் கணினிகள் மூலம் பிணைந்து நெருங்கி வருவதற்கு முன்பே பல நூற்றாண்டுகளாக அறிவு தலைமுறை தலைமுறையாக புத்தகங்கள் வழியாகவே அனுப்பப்பட்டன. இதன் விளைவாக, பல நாடுகளில் பெரிய நூலகங்களும் கட்டப்பட்டன. துரதிஷ்டவசமாக, இயற்கை சீரற்ற காரணங்கள் மற்றும் மனித அட்டூழியங்கள் காரணமாக மனிதகுலம் அதிக அறிவுக்களஞ்சியங்களை இழந்துள்ளது. இந்த இடத்தில் மனித அட்டூழியங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதென்பது வருத்தமான விடயம்.

 

அலெக்ஸாண்ட்ரியாவின் பெரிய நூலகம்

எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியாவில் அமைந்துள்ள இந்த நூலகம் பண்டைய உலகின் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான நூலகமாகும். கிரேக்க நம்பிக்கையின்படி அனைத்து கலைகளையும் ஆண்ட ஒன்பது கடவுள்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த நூலகம் பண்டைய உலகில் வெளியிடப்பட்ட ஒவ்வொரு புத்தகத்தையும் வைத்திருந்தது. பெரும்பாலும் பெப்பரஸ் தாளே இங்கு அதிகம் பயன்படுத்தப்பட்டது. டோலமிக் வம்சத்தின் கீழ் இருந்த மிகவும் வளமான இந்த நூலகம், ஜூலியஸ் சீசரால் எகிப்து படையெடுப்பின் மூலம் அழிவுக்கு உட்பட்டது. அலெக்ஸாண்ட்ரியா துறைமுகத்தில் எகிப்திய கப்பல்களுக்கு அவர் தீ வைத்தபோது தீ நூலகத்திற்குள்ளும் பரவியது. அடுத்த முறை, கிறிஸ்தவத்தின் எழுச்சியுடன் நூலகம் மீண்டும் அழிக்கப்பட்டது. அதில் பேகன் போதனைகள் இருந்ததாகவும் கூறினர்.

 

செரபியம் நூலகம்

அலெக்ஸாண்ரியாவில் செரபீஸ் கடவுளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சன்னதியுடன் தொடர்புடைய மற்றொரு அற்புதமான நூலகம் இருந்தது. இது அலெக்ஸாண்ட்ரியாவின் முக்கிய நூலகத்தின் குழந்தையாகக் கருதப்பட்டது. ஆனால், நாம் முன்னர் குறிப்பிட்டது போல கிறிஸ்தவத்தின் எழுச்சியுடன், பேகன் தேவாலயங்களை அழிக்கும் திட்டம் தொடங்கியது. அலெக்ஸாண்ட்ரியாவை ஆண்ட ரோமானிய பேரரசர் ஒரு ஆணையை வெளியிட்ட உடனேயே, கிறிஸ்தவர்கள் செராபிம் கட்டிடத்தையும் நூலகத்தையும் அழித்தனர்.

 

நாலந்தா நூலகம்

பண்டைய காலத்து இந்தியாவில் இருந்த இந்த தனித்துவமான நூலகம் ஒரு நூலகமாக அல்லாமல் மூன்று நூலகங்களின் தொகுப்பாக பராமரிக்கப்பட்டது. மகாயானத்தை கற்பிப்பதற்கான மையமாக இருந்த நாலந்தாவில், தேரவாத தத்துவத்தையும் பல்வேறு மதச்சார்பற்ற அறிவியல் விடயங்களும் கற்பிக்கப்பட்டன. இந்த நூலகத்திற்கு தொலைதூர மக்கள் வந்து புத்தகங்களை பிரதியெடுப்பது பொதுவான விடயமாக மாறியது. நாலந்தா மூன்று முறை அழிக்கப்பட்டது. ஆனால் இரண்டு முறை மட்டுமே மீண்டும் கட்டப்பட்டது. ஆனால் இறுதியில், முழு நாலந்தா பல்கலைக்கழகமும் நூலகத்துடன் சேர்த்து டெல்லி சுல்தானகத்தின் மம்லுக் வம்சத்தின் இராணுவத்தால் பக்தியார் கல்ஜியின் கீழ் கொள்ளையடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. நாலந்தா பல்கலைக்கழகம் பல மாதங்களாக தீப்பற்றி எரிந்ததாக கூறப்படுகிறது.

 

கொன்ஸ்டான்டினோபிளின் ரோயல் நூலகம்

கொன்ஸ்டான்டினோபிளின் ஸ்தாபக பேரரசரான முதலாம் கொன்ஸ்டன்டைன், அந்நகரில் ஒரு அரச நூலகத்தைத் திறந்தார். அலெக்ஸாண்ட்ரியாவின் பெரிய நூலகத்தின் அழிவுக்குப் பிறகு, இது பண்டைய ஐரோப்பாவின் மிகவும் மதிப்புமிக்க நூலகங்களில் ஒன்றாக மாறியது. நான்காவது சிலுவைப் போரின் போது கொன்ஸ்டான்டினோபிள் ஆக்கிரமிப்பின் போது இந்த கட்டிடம் கொள்ளையர்களால் வேண்டுமென்றே தீக்கிரையாக்கப்பட்டது. ஓட்டோமான் பேரரசை கைப்பற்றிய பின்னர், நூலகம் ஓரளவிற்கு பராமரிக்கப்பட்டு வந்தாலும் கொன்ஸ்டான்டினோபிளில் வசிக்கும் பல அறிஞர்கள் அங்கிருந்த நூல்களை எடுத்துக்கொண்டு ஐரோப்பாவின் பிற பகுதிகளுக்கு தப்பியோட வேண்டியிருந்தது.

 

அறிவின் வீடு (HOUSE OF WISDOM)

அரபு உலகில் புத்திஜீவிகளின் மையமான பாக்தாத்தில் அமைந்துள்ள இந்த நூலகத்தின் சிறப்பானது மேற்குலகம் முழுவதும் எதிரொலித்தது. மொங்கோலியர்கள் பாக்தாத்தை ஆக்கிரமித்தபோது ​​அவர்கள் இரக்கமின்றி இந்நூலகத்தை அழித்தனர். அவர்கள் நூலக கட்டிடத்திற்கு தீ வைத்து புத்தகத்தை அருகிலேயே பாய்ந்தோடும் டைக்ரிஸ் ஆற்றில் வீசினர். சமகால பதிவுகளின்படி புத்தகங்களில் மை இருந்ததால் டைக்ரிஸ் நதியே கறுப்பு நிறமாக மாறியது.

 

பிப்லியோதெக்கா கொர்வினியா (BIBLIOTHECA CORVINIANA)

மறுமலர்ச்சி ஐரோப்பாவின் மிகவும் மதிப்புமிக்க நூலகமாக இருந்த இந்த புத்தகங்களின் களஞ்சியம், ஹங்கேரிய தலைநகரான புடாவில் உள்ள அரச மாளிகையில் வைக்கப்பட்டது. ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முந்திய ஹங்கேரிய மன்னர்கள் சேகரித்த புத்தகங்கள், கையெழுத்துப் பிரதிகள் மற்றும் குறிப்புகளின் தொகுப்பு இங்கு இருந்துள்ளது. இந்த மன்னர்கள் குறிப்பாக பண்டைய கிரேக்க மற்றும் லத்தீன் இலக்கிய படைப்புகளை சேகரிப்பதில் ஆர்வம் காட்டினர். இருப்பினும், துருக்கியின் ஹங்கேரிய படையெடுப்புடன் இந்த நூலகம் நெருப்பில் தூக்கியெறியப்பட்டது.

 

யாழ்ப்பாண நூலகம்

யாழ்ப்பாண நூலகம் தீக்கிரையானமை எமது நாட்டின் கறைபடிந்த சம்பவமாக கருதப்படுகின்றது. இது தெற்காசியாவின் மிகப்பெரிய நூலகம் மற்றும் ஆசியாவின் மிகவும் தனித்துவமான நூலகங்களில் ஒன்றாகும். இதில் 97,000 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. யாழ்ப்பாண நூலகம் டாக்டர் சேனரத் பரணவிதானவின் தனிப்பட்ட புத்தகத் தொகுப்பைக்கூட வைத்திருந்தது. புத்தகங்களை சேமிப்பதற்காக சிறப்பாக தயாரிக்கப்பட்ட சந்தன பெட்டிகளைக்கூட தயாரித்தனர். 1981 ஆம் ஆண்டில், இந்த அறிவின் புதையல் அரசியல் உதவியாளர்களால் தீக்கிரையாக்கப்பட்டது.