சமூக ஊடகங்களை பயன்படுத்த முன்னர் இவற்றை அறிந்துகொள்ளுங்கள்

 

சமூக ஊடகங்களில் பேஸ்புக் இன்று உலகளவில் அதிகமாக பயன்படுத்தப்படும் ஊடகமாக காணப்படுகின்றது. ஆனால் நாங்கள் சொல்வது பேஸ்புக்கிற்கு மட்டுமானது அல்ல. டுவிட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் உட்பட நீங்கள் பயன்படுத்தும் எந்த சமூக ஊடகத்திலும் எதையும் இடுகையிடுவதற்கு அல்லது பகிர்வதற்கு முன்பு இந்த விடயங்களைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள்.

 

மிகவும் தனிப்பட்ட தகவல்!

சிலர் மிகவும் முக்கியமான தரவுகளையும் அவர்களின் தனிப்பட்ட தகவல்களையும் கூட பேஸ்புக்கில் போஸ்ட் செய்வதை நாங்கள் காண்கிறோம். அவர்கள் தங்கள் குடும்ப பிரச்சினைகளைக்கூட சில நேரங்களில் பேஸ்புக்கில் இடுகிறார்கள். சில கணவர்மார்கள் தங்கள் மனைவியுடன் பேசவேண்டிய விடயங்களைக்கூட பேஸ்புக்கில் டெக் செய்து சொல்லுகிறார்கள். சில நேரங்களில், இவை வேடிக்கையான மற்றும் எளிமையான விடயமாக தோன்றினாலும் இது மிகவும் ஆபத்தானது. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் தீங்கு விளைவிக்கும் தகவல்களை பேஸ்புக் அல்லது பிற சமூக ஊடகங்களில் பகிர்வதன் மூலம் மூன்றாம் தரப்பிற்கு தெரியப்படுத்துகின்றீர்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள். அதனை தவிருங்கள்.

 

இது பொய்யா?

செய்திகளை மாத்திரமன்றி அறிவா விடயங்களை, மகிழ்ச்சியூட்டும் விடயங்களை பெற்றுக்கொள்ள, எம்மை புத்துணர்வாக்க என பல விடயங்களுக்காக சமூக வலைத்தளங்களை பயன்படுத்துகின்றோம். அதற்கு சந்தாவும்  செலுத்துகிறோம். ஆனால் இந்த நாட்களில் பல வலைத்தளங்கள் மற்றும் செய்தி தளங்களில் வெளியிடப்பட்ட செய்திகள் அனைத்தையும் நம்பமுடியுமா என்றால் அது கேள்விக்குறியானதாகும். சரியான ஆய்வு இல்லாமல் வெளியிடப்பட்ட செய்திகளின் பெருக்கம் அதிகம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் சமூகத்தை ஏமாற்றி அவர்களின் சித்தாந்தங்களை பரப்பும் நோக்கத்துடன் வெளியிடப்பட்ட தவறான செய்திகள், கட்டுரைகள் மற்றும் வீடியோக்கள் பல உள்ளன. ஆகவே, நாம் வாசித்த ஒன்றை பகிர்ந்துகொள்ள விரும்பினால், முதலில் அது உண்மையா என ஆராய்ந்து அதன்பின்னர் பகிருங்கள்.

 

 பாதுகாப்பு குறித்து சிந்தியுங்கள்!

வயது வித்தியாசமின்றி பேஸ்புக் பயன்படுத்தும் நிலை தற்போது ஏற்பட்டுவிட்டது. திகில் திருடர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்யும் நபர்களும் பேஸ்புக்கிற்கு வருகிறார்கள். அதை நாம் தடுக்க முடியாது. ஆனால் குறைந்தபட்சம் நாம் சமூக ஊடகங்களில் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதனால் அத்தகைய நபர்களுக்கு நாம் இரையாகிவிடக்கூடாது. சிலர் பேஸ்புக்கில் தனது வீட்டு தகவல்களையே பதிவிடுகிறார்கள். உதாரணமாக “இன்று யாரும் வீட்டில் இல்லை. நான் மட்டுமே இருக்கிறேன்” என்று சற்று சந்தோஷத்திற்கு நண்பர்களிடம் தெரிவிப்பது போல பதிவிடுகிறார்கள். ஆனால் அது சென்றடைவது அவரது நண்பர்களுக்கு மட்டுமல்ல, போலி பேஸ்புக் பக்கங்களுக்கு பின் மறைந்திருக்கும் தவறான நபரும் இந்த தகவலைப் பெறலாம். குழந்தைகளின் விபரங்களையும் சில புகைப்படங்களையும் இடுகையிடுவது பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கலாம். நீங்கள் பேஸ்புக்கில் இடும் ஒரு சிறிய தகவலிலிருந்துகூட யாரும் வீட்டில் இல்லை என்பதைக் கண்டறிந்து யாராவது உள்ளே வந்து திருடலாம். சில திருடர்கள் எந்த ஒரு நிலைக்கும் செல்வார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

 

 மற்றவர்களைப் பற்றியும் சிந்தியுங்கள்!

பிரபலமான மற்றும் பிரபலமற்ற நபர்களைப் பற்றி பல பேஸ்புக் பதிவுகள் உள்ளன. அவ்வாறான பதிவுகளில் மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் தவறுகள், அவர்களின் தனிப்பட்ட உறவுகள், அவர்கள் செய்த மோசடிகள் மற்றும் ஊழல் பற்றி பகிரப்படுகின்றன. அந்த விபரங்களில் சிலவற்றை படிக்கும்போது, ​​அந்த நபர்களைப் பற்றி ஏற்படும் தவறான எண்ணங்கள் மூலம் கோபப்படலாம். ஆனால் இதுபோன்ற ஒரு விடயத்தில் உங்கள் கருத்தை பதிவு செய்வதற்கு முன்பு அல்லது யாரோ எழுதிய பதிவை மீண்டும் பகிர்வதற்கு முன் இருமுறை சிந்தியுங்கள். ஏனென்றால் நீங்கள் வேறொருவரின் வலையில் விழக்கூடும். எனவே மற்றவர்களின் வாழ்க்கையைப் பற்றி கருத்து தெரிவிக்கும்போது முடிந்தவரை கவனமாக இருங்கள்.

மேலும், மற்றவர்களின் அனுமதியின்றி புகைப்படங்களைப் பகிர்வது அவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். இத்தகைய புகைப்படங்கள் வேடிக்கையானவையாக இருந்தாலும், அவை புகைப்படம் எடுக்கப்பட்ட நபருக்கு சங்கடத்தையும் வேதனையையும் ஏற்படுத்தும். உங்களுடைய நண்பரின் படத்தைப் பகிர்ந்தால், அதைப் பற்றி உங்கள் நண்பருக்கும் தெரியப்படுத்துங்கள்.

 

தொழில் வாழ்க்கையைப் பற்றியும் சிந்தியுங்கள்!

“தன் வாய் தன் சொல் என்பது போல”அவரவர் யோசனைகளும் அவரவருக்ககே சொந்தம். ஆனால் அவற்றை சமூகத்தில் பயன்படுத்தும்போது எவ்வளவு பொருத்தமானது மற்றும் அவற்றை சமூகத்திற்கு வெளிப்படுத்தும்போது ஏற்படும் விளைவுகள் குறித்து நாம் இருமுறை சிந்திக்க வேண்டும். இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு, ஒருவர் பகிர்ந்துகொள்ளும் ஏதேனும் தவறான பதிவு மூலம் தொழில் ரீதியாக தனக்குத்தானே ஏற்படுத்திக்கொள்ளும் சேதமாகும். பெரும்பாலான நேரங்களில் நீங்கள் உங்கள் பணியாற்றும் நிறுவனத்தின் பெயரை உங்கள் சுயவிபரத்தின் கீழ் பதிவிடுகிறீர்கள். பெரும்பாலான நேரங்களில் உங்கள் முதலாளி உங்கள் சமூக ஊடக கணக்கையும் பார்ப்பார். எனவே இதுபோன்ற சூழ்நிலையில், நீங்கள் சமூக விரோத அல்லது சட்டவிரோதமான ஒன்றைப் பகிர்ந்து கொண்டால் அல்லது சமூக ஊடகங்களில் அநாகரீகமாக நடந்து கொண்டால் உங்கள் நிறுவனம் அதைப் பற்றி அறிந்திருக்கலாம். மேலும் உங்கள் வேலையைக்கூட இழக்க நேரிடும். பேஸ்புக் எமது தனிப்பட்ட பாவனை என்றாலும், பெரும்பாலான நிறுவனங்கள் அவற்றையும் பார்க்கின்றன. ஆகவே கவனமாக இருங்கள்.

 

இது நேரடியானதா?

சிலர் மறைமுகமாக சிலரை தாக்கி பதிவிடுவார்கள். நாம் அதை குறை சொல்ல முடியாது. சிலர் அவர்களை கேலி செய்கிறார்கள். ஆனால் எல்லா மக்களும் அவற்றை ஏளனமாகப் பயன்படுத்துவதில்லை. சில நேரங்களில் எதற்கும் சம்பந்தம் இல்லாத நபர்கள்தான் இதில் சிக்கிக்கொள்வார்கள். பின்னர் தேவையற்ற பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. சிலர் தங்கள் கணவன், மனைவி அல்லது பெற்றோரின் தவறுகளை சமூக ஊடகங்களில் போஸ்ட் மூலம் கூறும் போக்கும் காணப்படுகின்றது. சமூக ஊடகங்களை தவிர்த்து இதனை நேரடியாக கூற முடியாதா நண்பர்களே? ஒருவேளை நாம் அவர்களைப் பற்றி தவறான எண்ணம் வைத்திருக்கலாம். எனவே ஒருவரை பற்றி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சமூக ஊடகங்களின் மூலம் தாக்குவதற்கு முன்னர் ஒன்றிற்கு இருதடவைகள் சிந்திக்கவும்.

 

சிறைக்குச் செல்ல நேரிட்டால்?

சமூக ஊடகங்கள் மூலம் இப்போது மேலும் நடந்துகொண்டிருக்கும் விடயங்களில் ஒன்றுதான் அறிவு சார்ந்த கொள்ளையாகும். யாரோ எழுதிய பதிவுகள், படைப்பு ரீதியான விடயங்கள்கூட பட்டப்பகலிலேயே திருடப்படுகின்றன. இதற்கு அறிவுத்திருட்டு என்ற பெயரும் உண்டு. அதாவது ஒருவரது படைப்பை அவருக்கே தெரியாமல் அவரது அனுமதியின்றி அதை தமக்கு சொந்தமாக்குகின்றனர். அவை உண்மையில் திருட்டு, சட்டவிரோதம் மற்றும் காழ்ப்புணர்ச்சி என்ற வகைக்குள் அடங்கும். தனிப்பட்ட அவதூறு மற்றும் சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்வது போன்ற விஷயங்கள் உள்ளன. இவற்றிற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கலாம். ஆகவே, இதுபோன்ற விடயங்களை இடுகையிடுவதற்கும் பகிர்வதற்கும் முன் இருமுறை சிந்தியுங்கள்.