வெள்ளை மாளிகை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

 

 வெள்ளை மாளிகை என்பது அமெரிக்க ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உலகத்துக்கே சவால் விடக்கூடிய நாட்டுத்தலைவரின் வீடு என்றும் சொல்லலாம். இலங்கையிலும் அவ்வாறு கட்டப்பட்ட கட்டிடங்கள் உள்ளன. இதற்கு சிறந்த உதாரணம் கொழும்பு நகர மண்டபம். ஆனாலும், அமெரிக்க வெள்ளைமாளிகைக்கு ஈடாகாது. செய்திகளில் கூட வெள்ளைமாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன அல்லது வெள்கைமாளிகை தெரிவித்துள்ளது என்று கூறுவார்கள். அந்தளவிற்கு அதிகாரம் மிக்கது. தற்போது அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நெருங்கி வருவதால், அமெரிக்க ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம் குறித்த தொடர்ச்சியான சிறு கட்டுரைகளை உங்களிடம் கொண்டு வர நினைத்தோம். அதன் ஒரு பகுதியாக வெள்ளை மாளிகை பற்றி இன்று அறிந்துகொள்வோம்.

 

தலைநகரம்

கிரேட் பிரிட்டனில் இருந்து அமெரிக்கா சுதந்திரம் பெற்ற நிலையில், எந்த நகரத்தை அதன் தலைநகராக மாற்ற வேண்டும் என்று பல்வேறு கருத்துக்கள் இருந்தன. நாட்டின் முதல் ஜனாதிபதியான ஜோர்ஜ் வொஷிங்டன் நியூயோர்க் நகரில் இரண்டு மாளிகைகளை தனது உத்தியோகபூர்வ இல்லமாகப் பயன்படுத்தினார். நியூயோர்க் நகரில் அமெரிக்க ஜனாதிபதிக்கு வேறொரு உத்தியோகபூர்வ இல்லம் கட்டும் பணி தொடங்கியது. இதற்கிடையில் வொஷிங்டன், டிசி. யை அதன் தலைநகராக உருவாக்கும் பணிகள் தொடங்கியது. பிலடெல்பியா தற்காலிகமாக தலைநகராக மறுபெயரிடப்பட்டது. அங்கு மற்றொரு மாளிகை ஜனாதிபதி இல்லமாக பயன்படுத்தப்பட்டது.

 

போட்டி

ஜனாதிபதி ஜோர்ஜ் வொஷிங்டனும், பின்னர் ஜனாதிபதியான அப்போதைய வெளியுறவுத்துறை செயலாளருமான தோமஸ் ஜெபர்சனும் இணைந்து, அவர்கள் உருவாக்க நினைத்த புதிய தலைநகரில் ஜனாதிபதி அரண்மனை ஒரு முக்கிய அம்சமாக இருக்க வேண்டும் என்று கருதினர். எனவே அவர்கள் ஒரு போட்டியை நடத்த முடிவு செய்கிறார்கள். ஜேம்ஸ் ஹோபன் முன்வைத்த திட்டம் இறுதியில் வென்றது.

 

கட்டுமானம்

1792 ஒக்டோபர் 13 ஆம் திகதி இந்த வெள்ளை மாளிகையின் அடிக்கல் கறுப்பின அடிமைகளின் மிகப்பெரிய பங்களிப்புடன் நாட்டப்பட்டது. இதுவரை குடியுரிமை பெறாத ஐரோப்பியர்களின் தொழிலாளர் சக்தியும் இந்த நோக்கத்திற்காக பெறப்பட்டது. வெள்ளை மாளிகையை வடிவமைப்பதில், ஹோபன் கிரேக்க கட்டிடக்கலை மூலம் ஈர்க்கப்பட்டார். இந்த மாளிகையில் வசிக்க ஜோர்ஜ் வொஷிங்டனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அவருக்கு பதிலாக அமெரிக்காவின் இரண்டாவது ஜனாதிபதியான ஜோன் ஆடம்ஸுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.

 

வெள்ளை மாளிகை என்ற பெயரைப் பெறுதல்

பல அறிஞர்கள் வெள்ளை மாளிகைக்கு அந்த பெயரைப் பயன்படுத்த உடன்படவில்லை. 1814 இல் வொஷிங்டனை ஆக்கிரமித்த பிரிட்டிஷ் இராணுவத்தால் வெள்ளை மாளிகை தீப்பிடித்த பின்னர், கட்டிடம் முழுவதும் வெள்ளை வண்ணப்பூச்சு பயன்படுத்தியதால் அதன் பெயர் வந்தது என்று பலர் நம்புகிறார்கள். ஆனால் அதை எதிர்க்கும் அறிஞர்கள் கூறுகையில், 1811ஆம் ஆண்டிலும் இந்த கட்டிடத்திற்கு வெள்ளை மாளிகை என்ற பெயர் பயன்படுத்தப்பட்டது என்கின்றனர்.

 

வெள்ளை மாளிகையை கைவிடுவதற்கான ஆலோசனை

பண்டைய காலங்களில் வெள்ளை மாளிகையின் அருகே சதுப்பு நிலங்கள் ஏராளமாக இருந்தன. இதனால் மலேரியா பரவும் பாதிப்பும் இருந்தது. 1860களில் இராணுவ அதிகாரிகளின் குழு ஒன்று நியமிக்கப்பட்டு வெள்ளை மாளிகையை முற்றிலுமாக கைவிட வேண்டும் என்றும் ஜனாதிபதி மாளிகையை வொஷிங்டன் டிசி.க்கு மாற்ற வேண்டும் என்றும் பரிந்துரைத்தது. ஆனால் இந்த திட்டத்திற்கு வெள்ளை மாளிகை அதிகாரிகளோ ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனோ ஒப்புக்கொள்ளவில்லை.

 

ஜனாதிபதி ட்ரூமனின் புனரமைப்பு பணிகள்

பல தசாப்தங்களாக பெரிதும் புதுப்பிக்கப்படாத வெள்ளை மாளிகையின் புனரமைப்பை நிறைவுசெய்ய ஜனாதிபதி எஸ். ட்ரூமன் செயற்பட்டார். அதற்கு காரணம், அப்போதைய சூழ்நிலையில் வெள்ளை மாளிகை இடிந்து விழக்கூடும் என்று கட்டிடக் கலைஞர்கள் கணித்துள்ளனர். பின்னர் மேற்கொண்ட புதுப்பித்தல் நடவடிக்கையின்போது கட்டிடத்தின் பழங்கால தன்மையில் சிறிது சேதம் ஏற்பட்டதென கூறப்படுகிறது.

 

ஜாக்குலின் கென்னடியின் புனரமைப்பு பணிகள்

அமெரிக்காவின் முன்னாள் முதற்பெண்மணியான ஜாக்குலின் கென்னடி ஒரு தீவிர ஃபேஷன் கலைஞராக இருந்தார். வெள்ளை மாளிகையில் அப்போது இருந்த மாற்றங்களை அவர் அவ்வளவாக விரும்பவில்லை. மாற்றங்கள், அதன் வரலாற்று மதிப்பைப் பாதுகாக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று நம்பினார். அதன்படி, வெள்ளை மாளிகையில் ஒரு பெரிய அளவில் கலைப்பொருட்கள் சேர்க்கப்பட்டு அதன் பல்வேறு அறைகள் அற்புதமாக அலங்கரிக்கப்பட்டன.