பலாக்கொட்டையை பயன்படுத்தி சுவையான உணவு தயாரிப்போம்

 

பலாக்கொட்டை என்றதும் பலர் முகத்தை சுழிப்பார்கள். ஆனால், ஒருதடவை சுவையாக சமைத்து சாப்பிட்டால், அதன் பின்னர் வாய்க்கு கட்டுபோடமுடியாத வகையில் சுவையாக இருக்கும். அவ்வாறு செய்யக்கூடிய சுவையான உணவுகளை இன்று லைபீ தமிழ் சொல்லித்தரப்போகிறது. மேலும் 25 பலாக்கொட்டைகள் ஒரு முட்டைக்கு சமன் என்றும் கூறுவதுண்டு. பலாப்பழத்தை போல பலா விதைகளையும் சாப்பிடுவது உடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் நல்லதென மருத்துவர்கள் கூறுகின்றனர்.

 

தாளித்த பலாக்கொட்டை

தேவையான பொருட்கள்

  1. பலாக்கொட்டை – 1 கப்
  2. நறுக்கிய வெங்காயம் – 1
  3. எண்ணெய் – சிறிதளவு
  4. பச்சை மிளகாய் – 2
  5. மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
  6. இடித்த மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
  7. உப்பு

 

  • பலாக்கொட்டைகளை நன்கு கழுவி உப்பு சேர்த்து, கொதிக்க விடவும். ஒரு தனி சட்டியில் சிறிது எண்ணெயை சூடாக்கி, வெங்காயம் சேர்த்து சற்று தாளித்துக் கொள்ளுங்கள்.
  • அதில் சிறிது இடித்த மிளகாய் தூள் சேர்க்கவும். சில பச்சை மிளகாயையும் அதில் சேர்க்கவும். சற்று ஆறியதும் அதில் பலாக்கொட்டைகளை சேர்த்து கிளறி விட்டு, ருசிக்கேற்ப உப்பு சேர்த்து அடுப்பிலிருந்து இறக்குங்கள்.

 

பலாக்கொட்டை உருண்டை

தேவையான பொருட்கள்

  1. பலாக்கொட்டை – 2 கப்
  2. தேங்காய் – 1 கப்
  3. சர்க்கரை – 1/2 கப்
  4. கருப்பட்டி – ஒரு துண்டு
  5. சுவைக்கேற்ப உப்பு
  6. நீர்

 

  • பலாக்கொட்டைகளை தோலோடு சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அதன் தோலை நீக்குங்கள். பின்னர் சர்க்கரை, கருப்பட்டி, தேங்காய் மற்றும் நீர் சேர்க்கவும்.
  • சிறிய உருண்டைகளாக அதை செய்து சாப்பிடவும்.

 

பலாக்கொட்டை பைட்

தேவையான பொருட்கள்

  1. பலாக்கொட்டை – 2 கப்
  2. உப்பு மற்றும் மிளகுத்தூள்
  3. மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
  4. மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி
  5. எண்ணெய்

 

  • பலாக்கொட்டைகளை நன்கு கழுவி உப்பு சேர்த்து அவித்து எடுக்கவும். பிறகு அதை உலரவிட்டு தோலை நீக்கி மிளகாய்த்தூள், மிளகுத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பிரட்டி சாப்பிடவும்.

 

பலாக்கொட்டை டொபீ

தேவையான பொருட்கள்

  1. பலாக்கொட்டைகள் – 2 கப்
  2. சர்க்கரை – 1 கப்
  3. பட்டர் – 1 மேசைக்கரண்டி
  4. கராம்பு – 2
  5. வெணிலா அசன்ஸ்

 

  • பலாக்கொட்டையில் கொஞ்சம் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். பிறகு அதன் தோலை நீக்கிவிட்டு தட்டி கிரைண்ட் செய்து மேலதிக நீரை பிழியவும்.
  • இப்போது இதை ஒரு பாத்திரத்தில் போட்டு சர்க்கரையுடன் சேர்த்து அடுப்பில் வைக்கவும். சர்க்கரை உருகி, அது கட்டியைப் போல ஆகும்போது, ​​சிறிது பட்டர், வெணிலா மற்றும் கராம்பு சேர்க்கவும்.
  • நன்றாகக் கிளறி, வெப்பத்தை குறைக்கவும். கலவை கெட்டியாகும்போது, ​​பட்டர் தடவிய தட்டில் வைத்து துண்டுகளாக வெட்டவும்.