கொரோனா காலத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவோர்

 

யாரும் எதிர்பாராத கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ள நேரத்தில் இலங்கையில் நாம் மிகவும் கடினமான காலகட்டத்தில் வாழ்கிறோம். சற்று நிம்மதியாக வாழ்ந்துக்கொண்டிருந்த நாம் கொவிட்-19.இன் இரண்டாவது அலை காரணமாக மீண்டும் அச்சத்துடன் வாழ்கின்றோம். இந்த வைரஸ் எப்போது ஒழியுமென தெரியாததால் சிலர் தினமும் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்திலும், இன்னும் சிலர் செய்த வேலைகளை நிறுத்தவேண்டிய சூழ்நிலையையும் எதிர்கொண்டுள்ளனர். எப்போதுமே நாட்டிற்கு சிறந்த சேவையை செய்த மற்றும் நாட்டின் வருவாயில் அதிக பங்களிப்பை செய்த பல தனியார் துறை வணிகங்கள்கூட சரிவின் விளிம்பிற்கு வந்துள்ளன. தனியார் துறை தொழிலாளர்கள் வீட்டிலிருந்து முடிந்தவரை வேலை செய்தும் வருகின்றனர்.

இதற்கிடையில், எப்போதும் சரியாக வேலை செய்வதில்லை, செய்யும் தொழிலில் அக்கறை காட்டுவதில்லை என்றெல்லாம் திட்டுவாங்கிக்கொண்டிருந்த  பொதுத்துறை ஊழியர்களே இம்முறை நாட்டைக் காப்பாற்ற முன்னணியில் இருந்து போராடுகிறார்கள். எனவே, இந்த கடினமான நேரத்தில் நாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட அந்த அரசு ஊழியர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காகவும் பொதுச் சேவையைப் பற்றி பலர் கொண்டிருக்கும் தவறான எண்ணங்களை மாற்றுவதற்காகவும் தற்போதைய சூழ்நிலையில் முக்கிய பங்கு வகிக்கும் அரசு ஊழியர்களைப் பற்றி எழுத நாம் தீர்மானித்தோம்.

 

அரச புலனாய்வுத்துறை

யாருக்கும் தெரியாவிட்டாலும் கொவிட்-19 ஒழிப்பில் மிகப்பெரிய பங்களிப்பை அரச புலனாய்வு பிரிவினரே வழங்குகின்றனர். இந்த புலனாய்வு பிரிவுதான் நோயாளிகளின் தகவல்களைப் பதிவுசெய்து அவர்களுடன் தொடர்பு வைத்திருந்த பலரையும் அடையாளங்கண்டு, தொற்றுநோய் பரவலை தடுக்கவும் தேவையான செயற்பாடுகளைச் செய்யவும் பொதுச்சுகாதார அதிகாரிகளுக்கு தகவல்களை வழங்குகிறது. இவர்கள் செய்யும் இந்த பணி நாம் நினைப்பது போல் அவ்வளவு எளிதானது அல்ல. குறிப்பாக நோய்த்தொற்று ஏற்பட்டவர்கள் இரண்டு வார காலத்திற்குள் அவர்கள் சென்று வந்த இடங்களை தேடி அலசி ஆராய்வதே எவ்வளவு கடினமாக இருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். மற்றொன்று பதுங்கும் நோயாளிகளை தேடுவது உளவுத்துறை தகவல் மூலமாகவே மேற்கொள்ளப்படுகின்றது.

 

 இலங்கை பொலிஸ் மற்றும் ஆயுதப்படை

இந்த நாட்களில் மூன்று ஆயுதப் படைகளின் அதிகாரிகளும் நோயாளிகளின் இரண்டு வாரகால தகவல்களை கண்டுபிடிப்பதற்கும், புலனாய்வு பிரிவு வழங்கிய தகவல்களின் மூலம் வெளிநாட்டிலிருந்து வரும் மக்களை தனிமைப்படுத்துவதற்கும், கிருமி நீக்கம் செய்வதற்கும் முயற்சித்து வருகின்றனர். அவர்கள் எப்போதுமே நாட்டைக் காப்பாற்ற தம் உயிரையே துச்சமாக நினைத்தே முன்வந்துள்ளனர். இந்த முறையும் அவர்கள் கொரோனாவுக்கு முன்னால் நின்று நாட்டிற்காக போராடுகிறார்கள். சுருக்கமாக, இராணுவபடைகள் இப்போது அரிசி பருப்பு போன்ற அரசு வழங்கும் பொருட்களை சேகரித்து விநியோகித்து வருகிறது.

அடுத்த பெரும் பொறுப்பு காவல்துறையினரால் செய்யப்படுகிறது. இந்த காவல்துறை இல்லாவிட்டால் அங்கும் இங்கும் அலைந்து திரியக்கூடிய நபர்கள் சுதந்திரமாக ஒருவருக்கொருவர் நோயை பரப்பி விட்டு சென்றிடுவார்கள். அத்தோடு ஊரடங்கு உத்தரவும் முறையாக அமுல்படுத்தப்பட்டிருக்காது.

 

மருத்துவமனை ஊழியர்கள்

இது மிகவும் பாதிக்கப்படக்கூடிய பொது அதிகாரிகள் பிரிவாகும். கொவிட் நோயாளிகளை ஒவ்வொரு நாளும் சமாளிக்க வேண்டியது அவர்களே. டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் உட்பட முழு மருத்துவமனை ஊழியர்களது பங்களிப்பு இந்த ஆண்டு இவ்வளவு தான் என்று மதிப்பிடவே முடியாத அளவிற்கு உயர்வானது. வழக்கமான கனமான ஆடை, காலணிகள் மற்றும் முழு உடல் உறை போன்றவற்றிலும்கூட, இன்னும் நிறைய வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது. ஆனால் அவற்றை அவர்கள் பொருட்படுத்திடாமல் நாட்டிற்காக அயராது உழைக்கின்றனர்.

 

 மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்

தற்போதைய கொரோனவுக்கு எதிரான போரில், விழிம்புநிலையில் நின்று போரிடும் மற்றொரு குழு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊழியர்கள் ஆவர். பொரளையில் அமைந்துள்ள இந்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மூலம் பி.சி.ஆர் ஆராய்ச்சி நடத்தப்படுகிறது. அதுவே வைரஸ் பரவுவதற்கான அபாயத்தை கணிக்கும் காரணியாகும். எனவே இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அந்த அபாயத்தையும் கையில் எடுத்துக்கொண்டு, இரவிலும் பகலிலும் அர்ப்பணிப்புடன் அறிக்கை வழங்குவதில் கவனம் செலுத்துகிறார்கள்.

 

பொது சுகாதார ஆய்வாளர்கள் (PHI)

இதைப் பற்றி புதிதாக எதுவும் சொல்லத் தேவையில்லை. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் பொதுச் சுகாதார பணியாளர்களின் பங்கு அனைவருக்கும் தெரியும். இவர்களே கொரோனா பரவலால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் அனைத்து குடும்பங்களையும் தனிமைப்படுத்துகின்றனர். பாதிக்கப்படக்கூடிய நபர்களைப் பற்றி அவர்கள் பெறும் செய்திகளில் தொடர்ந்து கவனம் செலுத்துகின்றனர். மற்றும் சொல்லிற்கு அடங்காமலும் செவிசாய்க்காதவர்களுடன் மோதுகின்றவர்களும் இவர்கள் தான்.

 

கிராமசேவை அதிகாரிகள் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அதிகாரிகள்

 

கிராம சேவை அதிகாரிகள் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அதிகாரிகள் இந்த போராட்டத்தில் பாரிய பங்கை வகிக்கின்றனர். ஆனால் இவர்களும் அதிகம் கவனம் செலுத்தப்படாதவர்கள் என்றே சொல்லவேண்டும். இந்த இரண்டினூடாகவே மக்களுக்கு நிவாரணப் பணிகள் வழங்கப்படுகின்றன. கடைசி கொரோனாவின் முதல் அலையின் போது விநியோகிக்கப்பட்ட ரூபாய் 5,000 நிவாரணங்களுக்குப் பின்னால் இருந்தவர்களும், வழங்கப்பட்ட பொருட்களுக்கு பின்னால் இருந்தவர்களும் இவர்கள்தான். சந்தேகத்திற்கிடமான மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களைச் சமாளிக்க கிராம அதிகாரிகள், மருத்துவ அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.

 

அம்பியூலன்ஸ் (1990)

இந்த அம்பியூலன்ஸ் ஊழியர்கள்தான் கொரோனா தொற்றுநோய் இருப்பதாக கருதப்படும் சந்தேக நபர்கள் மற்றும் காய்ச்சல் நோயாளிகளை இரவும் பகலும் மருத்துவமனைகளுக்கு பெரும் ஆபத்தின் மத்தியில் அழைத்துச் செல்கின்றனர். இந்த கொரோனா காலத்தில் வைரஸ் பாதிப்புக்குள்ளான ஒருவருடன் ஒரே வாகனத்தில் பயணம் செய்யும் அபாயத்தில் இருக்கும் இந்த நபர்களை நாம் மறக்கக்கூடாது.

இந்த நபர்களைத் தவிர, மருத்துவமனை கிளினிக்குகளில் பதிவுசெய்யப்பட்ட நோயாளிகளின் வீடுகளுக்கு மருந்துகளை வழங்கிய அஞ்சல் சேவை, மின்சார சேவை ஊழியர்கள் மற்றும் ஊரடங்கு உத்தரவு இருந்தபோதிலும் மின் தடைகளை மீட்டெடுத்த மின்சார சபை ஊழியர்கள், லங்கா சதோசவின் பணியாளர்கள் ஆகியோரை மறக்க முடியாது.