ஆசிய தோற்றமுடைய பொலிவுட் நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு ஹொலிவுட்டிலும் அதிக வாய்ப்புள்ளது. பல பொலிவுட் நடிகர்கள் மற்றும் நடிகைகள் இப்போது ஹொலிவுட் தயாரிப்புகளில் கூட பங்களிக்க முடிந்துள்ளது. அதில் பலரும் பல்வேறு காரணங்களுக்காக ஹொலிவுட் திரைப்படங்களுக்கு பங்களிப்பதை தவிர்த்து வந்தனர். அதுபோன்ற ஹொலிவுட் கதாபாத்திரங்களை தவறவிட்ட 7 பொலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் அவர்கள் தவறவிட்ட திரைப்படங்கள் பற்றி இன்று நாம் பேசப்போகிறோம்.
இர்பான் கான் – இன்டெர்ஸ்டெல்லர் (Interstellar)
இர்ஃபான் கான் ஒரு காலத்தில் ஒரு சூப்பர் ஹொலிவுட் திரைப்படத்தின் மூலம் உலக கவனத்தை ஈர்த்திருந்தார். அது ‘லைஃப் ஒஃப் பை (Life of Pi)’ திரைப்படத்தின் மூலமாகும். ஆனால் இர்ஃபான் கான் தனது பிஸியான கால அட்டவணை காரணமாக பொலிவுட்டில் தனது பெயரை உருவாக்கும் மற்றொரு பெரிய வாய்ப்பை இழந்துள்ளார். அந்த வாய்ப்பு சூப்பர் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனிடம் இருந்து வந்துள்ளது. 2014ஆம் ஆண்டு பிளாக்பஸ்டர் படமான Interstellar-இல் மாட் டாமன் நடித்த வேடத்தில் இர்பான் நடிக்க அழைக்கப்பட்டுள்ளார். ஆனால் இர்பான் சில மாதங்கள் அமெரிக்காவில் தங்க வேண்டியிருந்தது. அந்த நேரத்தில் ‘டி-டே’ மற்றும் ‘லஞ்ச்பாக்ஸ்’ ஆகியவற்றில் பணிபுரிந்து கொண்டிருந்த இர்பான் இந்த அழைப்பை நிராகரிக்க வேண்டியிருந்தது.
நஸ்ருதீன் ஷா – ஹரி பொட்டர் (Harry Potter)
ஹரி பொட்டர் தொடரின் இரண்டாவது படமான ‘Chamber of secrets’ படத்தின் பின்னர் டம்பில்டோர் வேடத்தில் நடித்த ரிச்சர்ட் ஹாரிஸ் இறந்துவிட்டார். இந்தியாவின் நஸ்ருதீன் ஷாவிற்கு அடுத்தடுத்த படங்களில் டம்பில்டோர் வேடத்தில் நடிக்க அழைக்கப்பட்டுள்ளார். ஆனால் நஸ்ருதீனை அந்த கதாபாத்திரத்திற்கு நேரடியாக தேர்ந்தெடுக்கவில்லை. நஸ்ருதீன் இதற்கு தகுதியான சோதனை பரீட்சயங்களின் மூலம் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார். ஆனால் நஸ்ருதீன் அந்த அழைப்பை மறுத்துவிட்டார். அவர் டம்பில்டோர் வேடத்தில் நடிக்க விரும்பினாலும், பல்வேறு சோதனை பரீட்சைகளை எதிர்கொண்டு அங்கு செல்ல விரும்பவில்லை என்று அவர் கூறுகிறார். நஸ்ருதீன் முன்னதாக தி லீக் ஒஃப் எக்ஸ்ட்ரார்டினரி ஜென்டில்மேன் படத்தில் கேப்டன் நேமோவாக ஹொலிவுட்டில் அறிமுகமானார். ஆனால் படம் பெரிதாக வெற்றிபெறவில்லை.
ஷாருக் கான் – ஸ்லம்டொக் மில்லியனர் (Slumdog Millionaire)
ஷாருக்கான் பொலிவுட்டில் எவ்வளவு பிரபலமாக இருந்தாலும், அவரது இரசிகர்களால் ஹொலிவுட்டில் ஷாருக்கானைப் பார்க்க முடியவில்லை. இதற்குக் காரணம், ஷாருக்கானுக்கு ஹொலிவுட்டில் இருந்து அழைப்புகள் வரவில்லை என்பதல்ல, கிடைக்கப்பட்ட செய்திகளின்படி ஷாருக்கானுக்கு ஹொலிவுட்டில் இருந்து பல அழைப்புகள் வந்துள்ளன. இருப்பினும், ஷாருக்கான் அனைத்து அழைப்புகளையும் நிராகரித்துள்ளார். ஏனெனில் அவை அவருக்குப் பொருந்தாது என்றும், மேலும் அவரது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் நிராகரித்துள்ளாராம். ஷாருக் நிராகரித்த அத்தகைய ஒரு படம் ‘ஸ்லம்டொக் மில்லியனர்’. இந்த படத்தில் அனில் கபூர் நடித்த வினாடி வினா நிகழ்ச்சியின் இயக்குனர் வேடத்தை ஷாருக்கான் நிராகரித்துள்ளார்.
ஐஸ்வர்யா ராய் – டிராய் (Troy)
ஆசிய நடிகைக்கு எளிதில் கிடைக்காத ஒரு கதாபாத்திரத்தை ஐஸ்வர்யா ராய் நிராகரித்திருக்கிறார். 2004ஆம் ஆண்டு வரலாற்று திரைப்படமான வொல்ப்காங் பீட்டர்சனின் ட்ராய் படத்தில் ஐஸ்வர்யா பிராட் பிட்டுடன் இணைந்து நடிக்கவிருந்தார். இருப்பினும், ஐஸ்வர்யா பிராட் பிட்டைக் காதலிக்கும் பல காட்சிகளை எதிர்கொள்ளப் போவதால் படத்தை நிராகரித்ததாக அறியப்படுகிறது. இறுதியில் மற்றொரு அழகான ஹொலிவுட் நடிகை ரோஸ் பைர்ன் இந்த பாத்திரத்தை பெற்றார்.
ரித்திக் ரோஷன் – ரம்போ / பிங்க் பாந்தர் 2 / பியூரியஸ் 7 (Rambo / Pink Panther 2/ Furious 7)
பொலிவுட்டின் கனவு கண்ணனாக இருக்கும் ரித்திக், ஹொலிவுட்டில் நடிக்க பத்துப் பொருத்தமும் பக்காவாக இருக்கும் தோற்றத்தைக் கொண்டிருக்கிறார் என்று சொல்வது தவறல்ல. ஹொலிவுட் திரைப்படங்களுக்கு அவ்வப்போது பல அழைப்புகளையும் இந்த நடிகர் பெற்றுள்ளார். ஐஸ்வர்யா ராய் நடித்த ஹொலிவுட் படமான ‘பிங்க் பாந்தர்’ படத்தில் நடிக்க ரித்திக் ரோஷன் அழைக்கப்பட்டார். ஆனால் அவர் அதை நிராகரித்துள்ளார். அதே காரணத்திற்காக, சில்வெஸ்டர் ஸ்டாலோனின் ‘ராம்போ’ படத்தில் துணை கதாபாத்திரத்தை ரித்திக் நிராகரித்துள்ளார். பிரபலமான ஹொலிவுட் படங்களின் ஒன்றான ‘ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்’ தொடரின் 7ஆவது படத்தில் நடிக்க ரித்திக் ரோஷன் அழைக்கப்பட்டார். வின் டீசல், போல் வாக்கர் மற்றும் டுவைன் ஜோன்சன் போன்ற நடிகர்களுக்கு கீழுள்ள ஒரு கதாபாத்திரத்தில் அவர் நடிக்க வேண்டியிருப்பதால் அவர் அதையும் மறுத்தார். இதை இந்த வழியில் பார்க்கும்போது, ஹொலிவுட்டில் தனக்கென ஒரு பெயரை உருவாக்க விரும்பியதால் ரித்திக் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை பெறுவதற்காக ஏனையவற்றை நிராகரித்ததாக தெரிகின்றது.
தீபிகா படுகோன் – பியூரியஸ் 7 (Furious 7)
நாம் முன்னர் குறிப்பிட்ட ‘ஃபியூரியஸ் 7’ படத்திற்கு தீபிகா படுகோனும் அழைக்கப்பட்டுள்ளார். ஆனால் இந்த படத்தில் வரும் கதாபாத்திரத்தையும் அவர் நிராகரிக்கிறார். இதற்கு காரணம் இவரும் ரித்திக் போல முன்னணி கதாபாத்திரத்தை எதிர்பார்த்ததால் அல்ல. அதற்கு காரணம் அப்போது ஷாருக்கானுடன் ‘Happy New Year’ படத்தில் நடித்துக்கொண்டிருந்ததால் அதனை மறுத்துள்ளார். எனவே தீபிகா இந்த படத்தை நிராகரித்த போதிலும் ஹொலிவுட்டில் தனது அடையாளத்தை வெளிப்படுத்த அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளவில்லை. 2017ஆம் ஆண்டில், வின் டீசலுடன் XXX: Return of Xander Cage இல் நடித்து ஹொலிவுட்டில் தனக்கென ஒரு பெயரை உருவாக்கினார்.
பிரியங்கா சோப்ரா – இம்மோர்ட்டல்ஸ் (Immortals)
இப்போது பிரியங்கா சோப்ரா அமெரிக்க திரைப்படங்கள் மற்றும் டெலி தொடர்களில் நடிக்கின்றார். பொலிவுட்டை விட இப்போது பிரியங்கா ஹொலிவுட்டை நோக்கியே அதிகம் நகர்கிறார். இருப்பினும், ஒரு தசாப்தத்திற்கு முன்னர் பிரியங்கா ஒரு ஹொலிவுட் திரைப்படத்தை நிராகரிக்க வேண்டியிருந்தது. ஒரு கற்பனைக் கதையைக் கொண்ட படம் ‘எமோடெல்ஸ்’. பின்னர் இந்த படத்திற்கு ‘தி விட்சர்’ தொடரின் மூலம் பெரும் புகழ் பெற்று வந்த ஹென்றி கேவில் நடித்துள்ளார். இருப்பினும், பிரியங்காவுக்கு அழைப்பு வந்தபோது, ’சாத் கூன் மாஃப்’ படத்தில் பிஸியாக இருந்ததால் படத்தை நிராகரிக்க வேண்டியிருந்தது. மாறாக, மற்றொரு இந்திய நடிகை ஃபரிதா பிண்டோவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கிறது.