கொரோனாவிலிருந்து வயதான பெற்றோரை பாதுகாப்பது எப்படி?

 

கொரோனா பற்றி அதிகளவான விடயங்களை பேசியுள்ளோம். ஆனால் இந்த விடயமும் மிகவும் முக்கியமானது. உயிருக்கு ஆபத்தான கொரோனா வைரஸ் அல்லது கொவிட் -19 வைரஸ் அபாயத்தில் உள்ளவர்கள் வீட்டில் இருக்கும் பெற்றோர்கள், வயதானவர்கள் மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதை நாம் அனைவரும் இப்போது அறிவோம். ஏனென்றால், வயதானவர்களே அதிகளவில்  கொரோனா வைரஸ் காரணமாக இறந்துள்ளனர் என்பதற்கு தினமும் வெளியாகும் அறிக்கைகள் சான்றாகும். குறிப்பாக பிற நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் இறந்துள்ளனர். எனவே இன்று நாம் இந்த ஆபத்திலிருந்து நமது பெற்றோரை எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றி பேசப்போகிறோம். ஏனென்றால் ஏதேனும் மோசமான காரியம் நடந்த பின் வருத்தப்படுவதற்கு பதிலாக, எல்லா பக்கங்களிலும் இருந்து ஆபத்தை தவிர்த்து வாழ வேண்டும்.

 

ஆரோக்கியமாக இருங்கள்

உங்கள் ஆரோக்கியத்திற்கு எப்போதும் முன்னுரிமை வழங்குங்கள். ஏனென்றால், நோயை வீட்டிற்கு கொண்டு வருபவர் நீங்களாகவும் இருக்கக்கூடும். பெரும்பாலும் வேலைக்காக வீட்டிற்கு வெளியே செல்வோருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம். எனவே உங்கள் கவனக்குறைவு உங்கள் வயதான பெற்றோருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். அரசாங்கமும் சுகாதாரத் துறையும் அறிவுறுத்தியபடி சமூக இடைவெளியை பேணுதல் மற்றும் தேவையற்ற பயணங்களைக் குறைத்தல் போன்ற பொறுப்பை நிறைவேற்றுங்கள். பின்னர் குடும்பம் தானாகவே பாதுகாப்பாக இருக்கும். அத்தோடு இவற்றையும் பின்பற்ற நினைவில் கொள்ளுங்கள்.

  • குறைந்தது 20 விநாடிகள் சோப்பு மற்றும் தண்ணீரில் உங்கள் கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்.
  • இருமல் மற்றும் தும்மும்போது, ​​முழங்கையின் உட்புறத்தைப் பயன்படுத்த பழக வேண்டும்.
  • அடிக்கடி முகத்தை தொடுவதைத் தவிர்க்கவும்.
  • வீட்டில் அடிக்கடி பொதுவான இடங்களில் மேற்பரப்புகளை கிருமி நீக்கம் செய்யுங்கள்.

 

இடைவெளியை பேணுங்கள்

எல்லோருடனும் நெருங்கிய உறவை பேணுங்கள் என்றே பாடசாலைகளில்படித்திருப்போம். ஆனால் கொவிட் கற்றுத்தந்த பாடத்தில் முயன்றவரை தூரத்தை பேணுங்கள் என்றே கூறுகின்றனர். இந்த நாட்களில் வீட்டிற்குள் கூட நெருங்கிய உறவுகளுடன் தொட்டு கதைத்து பேசுவது ஆரோக்கியமான பழக்கம் அல்ல. முன்பு போல பெற்றோரின் அன்பையும் பாசத்தையும் தழுவ நெருக்கத்திற்காக செல்ல வேண்டாம். விலகி இருங்கள். அதற்கென்று அவர்களை ஒதுக்கி வையுங்கள் என கூறவில்லை. அவர்களுடன் அடிக்கடி தொடர்பில் இருங்கள். அதாவது மனதளவில் ஒன்றாகவும் உடல் ரீதியாக தூரமாகவும் இருங்கள்.

 

 தொழிநுட்பத்துடன் சேர்ந்து நெருங்கிப் பழகுங்கள்

தொலைவில் வசிக்கும்/ ஊர்களில் வாழும் பெற்றோர், அதாவது தங்களோடு வீட்டில் ஒன்றாக தாங்காமல் வேறு வீட்டில் வசிக்கும் பெற்றோர்களை இந்த நாட்களில் அடிக்கடி பார்க்கச்செல்வதை தடுத்து இருப்பது நல்லது. ஏனெனில் வைரஸ் உங்களுடன் சேர்ந்து அவர்களது வீட்டிற்குள் நுழையக்கூடும். ஒருவேளை தனது பெற்றோரைப் பார்க்க செல்ல விரும்பினாலோ, பேச விரும்பினாலோ நேரடியாகச் செல்லாமல், அதற்கு பதிலாக நம் அன்றாட சந்தோஷங்களையும் துக்கங்களையும் அவர்களுடன் பகிர்ந்துகொள்ள தொழிநுட்பத்தை பயன்படுத்தலாம். எப்போதும் போல உணவு, மருந்து மாத்திரைகள், நலம் விசாரித்தல் போன்றவற்றை கேளுங்கள். ஆனால் தேவையற்ற சந்தர்ப்பங்களில் அடிக்கடி பார்க்கச் செல்வதை தவிர்த்திருங்கள். தயவுசெய்து அதை அவர்களுக்கு விளக்குங்கள்.

 

மன ஆரோக்கியத்தை பராமரிக்கவும்

வயோதிபர்களின் மன ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது. ஏனென்றால் வயதானவர்களுக்கு அதிக ஆபத்து இருப்பதாக உலகம் அறிந்திருக்கிறது. எனவே எதுவாக இருந்தாலும், அவர்களும் எம்மைப்போல வாழ்க்கையை பற்றி  பயப்படுவார்கள். எனவே அதைப் பற்றி சிந்திக்க விடாமல் அவர்களைக் கவனித்துக்கொள்வது பிள்ளைகளான நமது பொறுப்பு. ஏனெனில் மன ஆரோக்கியம் மோசமடைந்துவிட்டால், பிற நோய்கள் ஏற்படலாம். எனவே அந்த விஷயங்களை மறந்து அவர்களுக்கு புதிய வீட்டுவாழ்க்கையை ஒதுக்குங்கள். ஊரடங்கு சட்டம் காரணமாக எல்லோரும் வீட்டிலேயே இருந்தால், பிடித்த உணவை சமைத்து பரிமாறுங்கள். உண்மையில் பழைய நினைவுகளை புதுப்பிப்பதில் அவர்கள் ஆசைப்படுவார்கள்.

 

தேவையற்ற பயணத்தை தவிர்க்கவும்

சந்தைக்கு அல்லது கோயிலுக்குச் செல்வதாக இருந்தால் அவற்றை முற்றும் தவிர்ப்பது நல்லது. அத்தோடு தேவையற்ற நேரத்தில் மருத்துவமனைகளுக்கு மற்றும் மருத்துவரை பார்க்கச்செல்லும் பயணங்களையும் தவிர்க்கவும். இந்த இடையூறு காரணமாக, தொலைபேசி மூலம் மருத்துவர்களிடம் ஒன்லைனில் ஆலோசனை பெற அணுகும் முறைகள்கூட அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதுபோன்ற விடயங்களில் எப்போதும் கவனம் செலுத்துங்கள். மேலும், கிளினிக்குகளில் உள்ள மருந்துகளை இப்போது நேரடியாக வீட்டிற்கும் கொண்டு வரலாம். முடிந்தவரை இதுபோன்ற பயணங்களை குறைப்பதன் மூலம் அவர்களை ஆபத்திலிருந்து விடுவிக்கவும்.

 

சாதாரண நோயாக இருந்தாலும் விழிப்புடன் இருங்கள்

வயதான பெற்றோருக்கு இந்த நாட்களில் சிறு நோய் அறிகுறிகளைக்கூட காட்டும் அளவிற்கு வைக்க வேண்டாம். உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஏனெனில் கொரோனா என்பது மிகவும் எளிமையான அறிகுறிகளுடன் தொடங்கக்கூடிய ஒரு நோயாகும். அல்லது அறிகுறியற்றதாகவும் இருக்கக்கூடும். எனவே, ஒரு நோய் பெரிதாக உருவாகும் வரை காத்திருப்பது ஆபத்தானது. அதற்கான சிகிச்சையின் சிறிதளவு வாய்ப்பையும் இழக்காமல் விரைவில் மருத்துவ ஆலோசனையை பெறவும்.

 

அவசர நிலைகளுக்கும் தயாராக இருங்கள்

முன்னர் குறிப்பிட்டபடி, ஏதேனும் அறிகுறிகள் ஏற்பட்டால் முன்பே மருத்துவரை அணுகுவது முக்கியம். ஏனெனில் பிள்ளைகள் எப்போதும் வீட்டிலோ அல்லது அருகிலோ இருக்காமல் போகலாம். அத்தகைய அவசரநிலைக்கு உதவக்கூடிய நம்பகமான நபர்களை பெற்றோருடன் எப்போதும் தொடர்பில் வைத்திருக்கச் செய்யுங்கள். அவர்களின் தொலைபேசி எண்களையும், தொலைபேசி அழைப்புக்கு தேவையான வசதிகளையும் செய்து வைத்திருங்கள். அப்படி உங்கள் வீட்டில் வயதானோர் இல்லாமல், அண்டை வீடுகளில் வயதானோர் இருந்தால் அவர்களுக்கு இது போல சூழ்நிலை இருந்தால் தயவு செய்து உதவுங்கள்.