ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் அரசியல் குறித்து அதிக கவனம் செலுத்தும் நாம், எமது அண்டைய நாடான இந்தியாவின் அரசியலில் அந்தளவு அவதானம் செலுத்துவதில்லை. குறிப்பாக இந்திய அரசியலில் பெண்கள் எவ்வளவு சக்திவாய்ந்த பங்கை வகிக்கிறார்கள் என்பதும் பலருக்கு தெரியாது. இந்திரா காந்தி, சோனியா காந்தி, ஜெயலலிதா போன்ற ஒரு சில பெண் அரசியல்வாதிகளை பற்றி மட்டுமே எங்களுக்குத் தெரியும். எனவே இந்திய அரசியலில் மிகவும் சக்திவாய்ந்த பெண் பிரமுகர்களை லைஃபீ தமிழில் நாம் உங்களுக்கு அறியத்தருகின்றோம்.
வசுந்தரா ராஜே
பிறப்பில் குவாலியர் மகாராஜாவின் மகளாகப் பிறந்தாலும், பிற்காலத்தில் அவரோ அவரது குடும்பத்தினரோ அரியணையைப் பெற்று ஆட்சி செய்யவில்லை. ஏனென்றால், இந்தியா சுதந்திரமடைந்த பின்னர் மகாராஜாக்களின் அதிகாரத்தை அதன் சுதந்திரத்துடன் சேர்த்து ஒழிக்க இந்திய அரசு செயற்பட்டு வந்தது. பிற்காலத்தில் 1984ஆம் ஆண்டில் இந்திய அரசியல் உலகில் நுழைந்த அவர் பாரதிய ஜனதா கட்சியின் தீவிர உறுப்பினரானார். அவர் இரண்டு முறை ராஜஸ்தான் முதல்வராகவும் இருந்துள்ளார்.
மாயாவதி
உத்தர பிரதேச மாநிலத்திற்கு இத்தோடு நான்கு முறை முதல்வராக இருந்து வரும் மாயாவதி, தற்போது பஹுஜன் சமாஜக் கட்சியின் முன்னணி தலைவராக செயற்பட்டும் வருகிறார். இவர் அந்த ஊரில் ஒரு தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர். இவருடைய முக்கிய நோக்கம் அத்தகையவர்களை மேம்படுத்துவதும் அவர்களுக்கான அரசியல் தலைமையை வழங்குவதுமாகும். இதனால் அவர் தாழ்ந்த ஜாதியாக கருதப்படுபவர்களுக்கு கதாநாயகியாக திகழ்கின்றார். மேலும் சில அரசியல் விமர்சகர்கள் இவர் மீது பல ஊழல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.
சுஷ்மா ஸ்வராஜ்
கடந்த ஆண்டு இறந்த சுஷ்மா ஸ்வராஜ், இந்திரா காந்திக்கு பிறகு இந்தியாவின் வெளியுறவு அமைச்சராகிய இரண்டாவது பெண் ஆவார். அதுமட்டுமின்றி டெல்லிக்கு முதல்வரான முதலாவது பெண்மணியும் ஆவார். மக்களவையில் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரான இவர், பாரதிய ஜனதா கட்சியின் வெற்றியின் பின்னர் 2014இல் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவர் தனது சொற்பொழிவு மற்றும் எழுதும் திறனுக்காக பாராளுமன்றத்திலும் சமூக ஊடகங்களிலும் மிகவும் பிரபலமாகவும் இருந்தார்.
ஷீலா தீட்சித்
ஏறக்குறைய 15 ஆண்டுகள் டெல்லி முதல்வராக இருந்த அவர், இந்தியாவின் மிக நீண்ட காலம் முதல்வராக இருந்தவராகவும் கருதப்பட்டார். டெல்லியில் காங்கிரஸ் கட்சியை மூன்று முறை வெற்றிக்கு அழைத்துச் சென்ற அவர், 2013இல் ஆம் ஆத்மி கட்சியிடம் தோல்வியடைந்த பின்னர் கேரள ஆளுநராகவும் பணியாற்றினார்.
மம்தா பானர்ஜி
இவர் 2011 முதல் மேற்கு வங்க முதல்வராக செயற்படுகின்றார். மேலும் இந்திய காங்கிரஸ் கட்சியுடன் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். இருப்பினும், கட்சியின் தலைவர்களுடனான மோதலின் விளைவாக அவர் ஒரு புதிய கட்சியை தொடங்கினார். பின்னர் பாரதிய ஜனதா தலைமையிலான ஒரு பரந்த கூட்டணியில் சேர்ந்து ரயில்வே அமைச்சரானார்.
சுசிதா கிருப்லானி
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிரான “இந்தியாவை விட்டு வெளியேறு” இயக்கத்தில் மகாத்மா காந்தியுடன் தோளோடு தோள் கொடுத்து முக்கிய பங்கு வகித்த சுசிதா காந்தி, காந்தியை அனைத்து இந்திய பெண்களுக்கும் முன்மாதிரியாக கருதினார். அவர் உத்தரப்பிரதேசத்தின் முதலாவது முதல்வரானார் மற்றும் இந்திய மாநிலத்தில் இந்த பதவியை வகித்த முதல் பெண்மணி என்ற பெருமையையும் பெற்றார். இந்திய அரசியலமைப்பின் வரைவுக் குழுவிலும் அவர் தீவிரமாக பங்களித்தார். 1969இல் காங்கிரஸின் வீழ்ச்சிக்குப் பிறகு, அவர் மற்றொரு கட்சியை உருவாக்கி மக்களவையில் போட்டியிட முயன்றார். ஆனால் அது அவருக்கு பலனளிக்கவில்லை.
பிரதிபா பட்டேல்
இந்தியாவின் ஜனாதிபதி பதவியை வகித்த ஒரே பெண் இவர்தான். அதற்கு முன்பு, இவர் ராஜஸ்தான் ஆளுநராக இருந்தார். நேரு-காந்தி குடும்பத்தின் நெருங்கிய தொடர்பு இருந்தது என்பதால் மட்டுமே அவரது பெயர் இந்திய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியால் இந்த பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டது என்று சில அரசியல் வர்ணனையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சுமார் ஐந்து ஆண்டுகள் நீடித்த அவரது பதவிக்காலம் சற்றே சர்ச்சைக்குரியது. அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.