காதலனுடன் முதற்தடவையாக படம் பார்க்கும் பெண்ணின் எண்ணங்கள்

 

காதலிக்க ஆரம்பித்த சில நாட்களிலேயே காதலர்கள் ஜோடியாக தியேட்டருக்கு செல்லாமல் இருந்திருந்தால் அது மிகவும் சலிப்பு மிக்க காதல் கதை என்றே சொல்ல வேண்டும். அப்படி திரைப்படம் பார்க்க தியேட்டருக்கு தனது காதலனுடன் செல்லும் காதலிகள் நினைக்கக்கூடிய விடயங்கள் என்னவென்று இன்று லைபீ தமிழ் தனது வாசகர்களுக்கு சொல்லப்போகிறது.

 

நேரங்காலத்துடன் செல்ல வேண்டும் 

காதலனுடன் படம் பார்க்க செல்வது பெண்களுக்கு ஏதோ கல்யாணத்துக்கு செல்வதைப்போல் தான் காணப்படும். தேவைக்கு அதிகமாகவே முன்னதாகாக செல்ல நினைப்பார்கள். ஏனென்றால் செல்வதற்கு தாமதமாகிவிட்டால் காதலனுக்கு சற்று மனவருத்தம் ஏற்பட்டுவிடுமோ என்ற எண்ணத்திலாகும். எனவே ஒரு பெண் நேரத்தைப் பற்றி அதிகம் எண்ணுவாள். படம் சரியாக ஆரம்பிக்கும் நேரத்தில் அங்கு செல்வதைவிட காதலனுடன் முன்னைய நாள் பேசி தீர்மானித்து, சற்று நேரங்காலத்துடன் சென்று அங்கு இருப்பது நல்லது என்றும் நினைப்பார்கள். உண்மையில் இதுபோன்ற நேரத்தைப் பற்றி தேவையில்லாமல் கவலைப்படும்போது ​​மிகவும் தாமதமாகிவிடும்.

 

சொல்ல முடியாத அளவிற்கு சந்தோஷம் 

முதன்முறையாக காதலனோடு திரைப்படம் பார்க்க செல்லும் பெண்களுக்கு இது மிகவும் சந்தோஷத்தை தரக்கூடிய விடயமாகவே இருக்கும். தியேட்டரில் படம் போடுவதற்கு முன்னரே மனதில் ஒரு திரைப்படத்தை ஓட்டி முடித்திருப்பார்கள். சரியாக சொல்வதென்றால் சந்தோஷம் கலந்த உற்சாகம். கஷ்டப்பட்டு தான் விரும்பும் காதலனோடு கைகோர்த்த பெண்களுக்கு இது மிகவும் அதிகமாக இருப்பதாக காதல் சித்தர்கள் கூறுகிறார்கள்.

 

யாராவது தெரிந்தவர்கள் இருந்துவிட்டால்?

வீட்டில் சுபமங்களம் பார்த்து பேசி வைத்த காதல் ஜோடிகளாக இருந்தாலும் கூட இந்த பயம் இருக்கத்தான் செய்யுமாம். எப்படியிருந்தாலும் யாராவது ஒரு இளம் ஜோடியை தியேட்டரில் பார்த்தால், அடடே காதல் ஜோடி போல என்று கலாய்த்து தள்ளுவதும், புற முதுகில் கதைப்பதும்  எமது சமூகத்திற்கு வழக்கமாயிற்று. இதனாலேயே எமது பெண்களுக்கும் தியேட்டர்களில் படம் பார்க்கப்போவது என்பது ஒருபுறம் சந்தோஷம் என்றாலும் மறுபுறம் யாராவது தெரிந்தவர்கள் கண்டு வீட்டில் மாட்டிக்கொடுத்து விடுவார்களா என்ற பயம் இருக்கத்தான் செய்யும்.

 

எதை அணிவது?

அந்த தியேட்டர் இருட்டில் எதை அணிந்தாலும் பெரிதாக தெரியப்போவதில்லை. ஆனாலும் வெறுமனே ஏதாவதொன்றை அணிந்து செல்வது நல்லதல்ல என பெண்கள் எண்ணுவார்கள். முன்பே சொன்னது போல பெண்கள் இதையும் ஒரு சுபமங்கலமாகவே நினைக்கிறார்கள். செல்லும்போது டொப்பும் டெனிமும் அணிவதா அல்லது சல்வார் அணிவதா அல்லது ஏதாவது சுடிதார் அணிவதா என்றெல்லாம் விசேடமாக யோசிப்பார்கள். அணியும் ஆடை மட்டுமல்ல, முகத்திற்கு மேக்கப் போடுவதா அல்லது வெறுமனே செல்வதா? மேக்கப் போடாமல் போனால் என்னை தெரியுமா? மேக்கப் போட்டு போனால் ஏதாவது சொல்லி விடுவானா என்றும் எமது  பெண்கள் நினைப்பார்கள் என்று காதல் சித்தர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

 

எல்லா செலவையும் அவரது தலையில் கட்டுவது சரியல்ல!

ஒரு திரைப்படத்தைப் பார்ப்பது இந்த காலத்தில் எளிதானது அல்ல. இப்போதெல்லாம் காதலியுடன் காதலன் படம் பார்க்கச் செல்வதுகூட நல்ல ஹை-பை யான இடத்திற்கு தானே ? அப்படி செல்லும் இடத்தில் டிக்கெட் செலவு மட்டுமா, ஏதாவது நொறுக்குத்தீனி வாங்குவது என்றாலும் செலவாகும். அதற்கென்று எல்லா செலவையும் அவரது தலையிலேயே கட்டிவிடுவது நல்லதல்ல. அதற்கான செலவை நாம் கொடுத்தால் ஏதாவது தப்பாக நினைத்து விடுவானா? காதல் தொடங்கிய அந்த இடத்திலேயே முடிந்து விடுமா? அப்படி இப்படி என்று இதற்கும் பெண்கள் யோசிப்பது சகஜம்தான். ஆனால் சரியாக ஆணை புரிந்து கொண்டவள் என்றால் அந்த இடத்தில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று தெரிந்து வைத்திருப்பாள்.

 

படத்தின் போது அவருடன் எப்படி நடந்து கொள்வது?

 

காதல் ஜோடிகள் அந்த இருந்த தியேட்டருக்கு செல்வது வெறுமனே தனக்கு பிடித்த நடிகரின் திரைப்படத்தை பார்த்துவிட்டு பொப்கோனை சாப்பிட்டுவிட்டு வருவதற்கு படங்களை பார்க்கப் போவதில்லை. தான் விரும்பும் ஆணுடன் சிறிது நேரம் ஓய்வெடுக்கவும் தான் செல்கிறார்கள். எனவே இதுபோன்ற ஏதாவது முதல் முறையாக நடக்கும்போது, ​​எப்படி இருக்க வேண்டும் என்றும் தெரியாது. படம் தியேட்டரில் போகும் போது, தான் எப்படி தன் காதலனுக்கு படம் காட்டுவது என்றும் யோசிப்பார்கள். படம் போகும் நேரத்தில் அவருடன் பேசினால், அவருக்கு அது தொந்தரவாக இருக்குமா ? அவர் எதிர்பார்ப்பது என்னவாக இருக்கும்? நான் முதலில் முத்தமிடவா அல்லது அவர் தரும் வரை காத்திருக்க வேண்டுமா? இதெல்லாம் படம் போகும் போது பெண்கள் நினைக்கக்கூடிய விடயங்கள்.அதனால் இன்று இவற்றை அறிந்த ஆண்கள் தங்கள் பெண்கள் தியேட்டரில் என்ன நினைப்பார்கள் என்று அறிந்திருப்பீர்கள். சரி, இதன் பின்னராவது புரிந்து சரியாக நடந்துகொள்ளுங்கள்.