மின் தடையா? – மின்சார சபையை கடிந்துகொள்ளாமல் இனி இதைச் செய்யுங்கள்

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு, மின்சார ஒழுக்கில் கோளாறு ஏற்பட்டு எங்கும் இருள் சூழ்ந்துகொண்டது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் தொடர்நதும் மின்சார சபைக்கு அழைப்பெடுத்து அவர்களது வேலையை சரியாக செய்ய விடாமல் நச்சரித்து கொண்டிருக்காமல், சார்ஜர், ஃபேன் போன்றவற்றை சார்ஜ் செய்து வைத்திருந்தால் அதை பயன்படுத்தி அட்ஜெஸ்ட் செய்துவிட்டு போகியிருக்கலாம். சிலருக்கு அந்த வசதியெல்லாம் இருக்காது. இனிமேல் மின்சார தடை ஏற்பட்டால் நீங்கள் செய்யவேண்டிய விடயங்களை இன்று தொகுத்து தருகின்றோம். முயற்சித்துப் பாருங்கள்.

 

புத்தகம் படிக்கலாம்

மின்சாரம் இருக்கும் போதே புத்தகம் வாசிக்கமாட்டோம். மின்சாரம் தடைப்பட்டிருக்கும் நேரத்தில் எப்படி வாசிப்பது என்று நினைக்கலாம். கடைசியாக ஒரு புத்தகத்தைப் படித்தது எப்போது? சிலருக்கு நினைவில்கூட இல்லை. நிச்சயமாக, எல்லோரும் புத்தகங்களைப் படிக்க விரும்பவில்லை என்றாலும், புத்தகத்தைப் படிப்பது நல்ல பழக்கம். தொலைக்காட்சிகள், ஸ்மார்ட் போன்கள் மற்றும் கணினிகள் காரணமாக பலர் புத்தகங்களைப் படிப்பதை அப்புறப்படுத்தி விட்டனர். ஆனால் மின்சாரம் இல்லாதபோது, ​​அதில் மூன்றில் ஒன்றுகூட உயிரோடு இருப்பதில்லை. ஒரு விளக்கை ஏற்றி புத்தகத்தைப் படிப்பதும் நன்றாக இருக்கும். ஆரம்பத்தில், எரியும் விளக்கில் படிப்பது கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் விரைவில் விளக்குகளின் ஒளியில் புத்தகங்களை படிக்க கண் பழகிக்கொள்ளும்.

 

டார்க் போட்டோகிராபி

இப்போது அனைவரிடமும் ஸ்மார்ட்போன் உள்ளது. அத்தோடு அந்த ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் நல்ல தரமான கேமராக்களைக் கொண்டுள்ளன. மேலும், போட்டோகிராபி செய்வோரிடம் இப்போது டி.எஸ்.எல்.ஆர் கேமராக்களும் உள்ளன. வெளிச்சத்தில் பிடிக்கும் படங்கள் எவ்வளவு அழகாகியிருக்குமோ அதேபோலதான், இருட்டில் பிடிக்கும் படங்களும் நல்ல ஈர்ப்பை இழுக்கக்கூடியவை. புகைப்படம் எடுப்பதற்கு நல்ல விளக்குகள் தேவை என்பதை நாங்கள் பொதுவாக அறிவோம். ஆனால் கரெண்ட் இல்லாத வேளையில் மெழுகுவர்த்தியை ஏற்றி, அந்த மெழுகுவர்த்தி சுடரில் புகைப்படங்களை எடுப்பதும் அழகாக இருக்கும்.

 

கூடி ஆடிப்பாடுதல்

நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது கொஞ்சம் கூட்டுறவாடல் கலாச்சாரத்தை கொண்டிருந்தோம். இப்போது யாரும் அப்படி பாட்டு படித்து கூட்டுறவாடும் முறையை வைத்திருக்க விரும்புவதில்லை. கரண்ட் இல்லாவிட்டால் முழு ஊரே மிகவும் அமைதியாக இருக்கும். குடும்பமே சூழ்ந்து பழைய பாடல்களை ஆடிப்பாடி சந்தோஷமாக இருப்பார்கள். அல்லது நண்பர்கள் சேர்ந்து புதிய பாடல்களை பாடுவார்கள். அதற்கென்று கத்தி கூச்சலிட்டுக்கொண்டு ஆடிப்பாட சொல்லவில்லை. அதற்கு பதிலாக இசையும் யாகத்தையும் இரசிக்கக்கூடிய அழகான இதமான பாடல்களை பாடுவது மிகவும் இனிமையாக இருக்கும்.

 

அமைதியான சூழலில் அழகான வானம்

நாம் இறுதியாக மௌனமாக வெளியே வந்து இரவு நேரத்தில் வானத்தை இரசித்து பார்த்தது நினைவிருக்கிறதா? ஒரு கதிரையில் அல்லது தரையில் உட்கார்ந்து விண்மீன்கள் நிறைந்த இரவுநேர வானத்தைப் பார்த்தது எப்போது என்று நினைவிருக்கிறதா? இவை உண்மையில் நம் வாழ்க்கையில் நாம் இழந்த சிறிய விடயங்கள். அந்த நேரத்தில் நீங்கள் உணரும் அமைதியை எந்த தியானத்திலிருந்தும் பெற முடியாது. அந்த நேரத்தில் நாம் வாழும் போட்டி உலகில் இருந்து முற்றிலும் விலகி அமைதியை காண்பதை உணரலாம். ஊரே அமைதி, அமைதி கலந்த வானம், மெல்லிசை என அந்த ரம்மியமான தருணத்தை இரசியுங்கள்.

 

பேய் கதைகள்

இதுவும் நாங்கள் சிறியவர்களாக இருந்தபோது செய்த ஒன்று. ஒரு அறையில் ஒன்று சேர்வது, அனைத்து விளக்குகளையும் அணைப்பது, ஒவ்வொருவரும் தங்களுக்குத் தெரிந்த பேய் கதைகளைச் சொல்வது பற்றிய அனுபவம் எங்களுக்கு இருக்கும். வேடிக்கையான விடயம் என்னவென்றால், முழு இருளிலிருந்து பேய் கதைகளைச் சொல்லும்போது, ​​அந்த பயங்கரமான உணர்வை பெறுவீர்கள். கரெண்ட் இல்லாத நேரத்தில் இதுபோல, நீங்கள் விரும்பினால் மற்றொரு பயங்கரமான உணர்வை பெற ஒரேயொரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்து பேய் கதைகளை சொல்லலாம்.

 

இருட்டு அறையில் முரட்டுக் குசும்பு

இருட்டில் நீங்கள் செய்யக்கூடிய மற்றொரு பெரிய விடயம் இதுதான். இதற்கு தேவையானது நீங்கள் 18 ப்ளஸ்ஸாக இருக்க வேண்டும். இது உடலில் தேவையற்ற கலோரிகளை எரிக்கிறது மற்றும் ஜிம்மிற்கு செல்லும் நேரத்தை மிச்சப்படுத்துகிறது. வீட்டில் கரெண்ட் போய் எல்லா மூலைகளும் இருட்டாக இருப்பதால், படுக்கையறைக்குத் தான் செல்லவேண்டும் என்றே இல்லை. எந்த இடத்திலும் அதனை செய்யலாம். என்ன நாம் என்ன கூறுகின்றோம் என தெரியும்தானே? ஆனால் நீங்கள் ஒரு விடயத்தில் கவனமாக இருக்க வேண்டும். அதாவது மின்சாரம் இல்லை என்பதால் எல்லா இடங்களிலும் மிகவும் அமைதியாக இருக்கும். அதனால் சிறிய சத்தத்தைக்கூட தூரத்தில் இருந்தும் கேட்க முடியும். கவனமாக நடந்துகொள்ளுங்கள்.