பெற்றோரை நச்சரிக்கும் குழந்தைகளின் சுபாவங்கள்

 

குழந்தைகள் என்றாலே மிகவும் சுட்டித்தனமாகவும் துருதுருவென்றும் இருக்கூடியவர்கள். அவர்கள் இருக்கும் இடத்தில் ஒருபோதும் அமைதியாக இருப்பதில்லை. இவற்றை ஒரு சில நேரங்களில் முகங்கொடுக்கும் வெளியாட்களுக்கு மிகவும் வேடிக்கையாகத் தோன்றினாலும், சிறு குழந்தைகளின் இந்த குறும்புப் பழக்கங்களில் சில பெற்றோருக்கு அந்த பழக்கவழக்கங்கள் சங்கடமாகவும் எரிச்சலையும் ஏற்படுத்தும். வெளியாட்களுக்கு இது புதியது என்றாலும் பெற்றோர்கள் தினமும் பார்க்கும் செயலாக இருப்பதே இதற்கு காரணம். ஆகவே இதுபோன்ற சிறு குழந்தைகளைக் கொண்ட பெற்றோர் தொடர்ந்தும் எதிர்கொள்ளும், அவர்களை சலிப்படையச்செய்யும் குழந்தைகளின் பழக்கங்களையும் அவற்றை எப்படி கையாள்வது என்பது பற்றியும் இன்று பார்ப்போம்.

 

ஒரே கேள்வியை மீண்டும் கேட்டுக்கொண்டிருத்தல்

சிறு குழந்தைகள் உள்ள பெற்றோர்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் விடயமாக இது உள்ளது. அதுவும் தாய்மார்களுக்கு இதில் நன்கு அனுபவம் இருக்கும். ஒரே கேள்விக்கு பல முறை நீங்கள் பதில் சொன்னாலும், குழந்தை அதில் திருப்தி அடையாத நேரங்கள் ஏராளம். ஒரே பதிலை பலமுறை கொடுப்பதில் சோர்வாக இருப்பதால் தாய்மார் அமைதியாக இருந்தால், நிலைமை இன்னும் கடுமையாகிவிடும். இந்த விடயம் எம்மை தொந்தரவு செய்தாலும், குழந்தைகள் அவற்றை இரசிக்கிறார்கள். அதில் இருந்து குழந்தைகள் தங்கள் பேச்சுத்திறனை சரியாக கற்றுக்கொள்கிறார்கள். கல்வியை பெறுகிறார்கள். வெவ்வேறு இடங்களில் சொற்கள் எவ்வாறு உச்சரிக்கப்படுகின்றன என்பதை மனப்பாடம் செய்வது, வெவ்வேறு முறையில் கேள்விகளைக் கேட்பது எப்படி என்பவற்றை கற்றுக்கொள்கிறார்கள். ஆனால் இதைப் பற்றி அவர்களுக்கும் சரியாக தெரியாது. ஆனால் பள்ளிப்பருவ காலத்தில் இது மிகவும் உபயோகமாகவும் கற்றல் செயற்பாடுகளில் தெளிவு பெறவும் வழிவகுக்கும். எனவே நீங்கள் கோபமாக இருந்தாலும், இந்த நேரத்தில் நீங்கள் மிகவும் பொறுமையாக பதிலளிக்க வேண்டும். குழந்தையின் பேச்சை மேம்படுத்த இந்த நடவடிக்கை மிகவும் முக்கியமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

 

ஒரு இடத்தில் இருக்காமல் அலைந்து திரிதல்

சிறு குழந்தைகளது மனதிற்கு ஒரு நிமிடம்கூட ஒரு இடத்தில் இருப்பது பிடிக்காது. இது அவர்களுக்கு வேடிக்கையாக தெரிந்தாலும், அவர்களுக்காக காத்திருக்கும் எங்களுக்கு தலைவலியாக இருக்கும். குறிப்பாக குழந்தையின் பெற்றோருக்கு பெரும் தலையிடியாக இருக்கும். ஏனென்றால், அவர்கள் செய்யும் எல்லா செயல்களிலும் பெற்றோர் விழிப்புடன் இருக்க வேண்டும். ஆனால் இது ஆரம்பத்தில் இருந்தே ஆரோக்கியமான வாழ்க்கையை உருவாக்க அவர்களுக்கு உதவும். ஒரு குழந்தை இப்படி ஓடித் திரிந்து விளையாடுவதால், அவர்கள் சிறு வயதிலேயே அதிக எடை கொண்டவர்களாக இருப்பதற்கான ஆபத்தை குறைக்கிறது மற்றும் அவர்களின் வாழ்நாள் முழுவதும் நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது என்றும் கூறப்படுகிறது.

 

எல்லாவற்றையும் வேண்டாம் என்று கூறுதல்

எல்லாவற்றிற்கும் வேண்டாம், இல்லை, முடியாது என்று சொல்வது சுட்டிக்குழந்தைகளின் மற்றொரு கெட்ட பழக்கம். ஆனால் இது எங்களுக்கு ஒரு கெட்ட பழக்கம் போல் தெரிந்தாலும், இதன் பின்னணியில் உள்ள உண்மையான கதை இதுதான். வழக்கமாக ஒரு குழந்தை 2.5 முதல் 3 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கும் போது தான் அனைத்தையும் வேண்டாம் என்று சொல்லத் தொடங்குகிறது. அந்த நேரத்தில் தான் அவர்கள் படிப்படியாக, நான் எனது பெற்றோரின் ஒரு பகுதி இல்லை, ஆனால் குடும்பத்தில் ஒரு தனி அடையாளத்தைக் கொண்ட ஒருவன் என்பதை உணர்கிறார்கள். இதன் மூலம், மேலும் அவர்களுக்கு குடும்பத்தில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்க முடியும். அதன்மூலம் அவர்கள் விடயங்களை மறுக்க முடியும். எனவே இது எங்களுக்கு ஒரு கெட்ட பழக்கமாக தோன்றலாம். ஆனால் அது அவர்களின் வளர்ச்சியின் ஒரு கட்டமாகும். அதனால் இவற்றை கவனமாக கையாள வேண்டும்.

 

நள்ளிரவில் எழுந்திருத்தல்!

புதிதாக பிறந்த குழந்தைகள் எப்படியும் பால் குடிக்க நள்ளிரவில் அடிக்கடி எழுந்திருப்பார்கள். ஆனால் குழந்தை வளரும்போது நள்ளிரவில் எழுந்தால், அதற்கு காரணம் குழந்தைக்கு நோய் என அர்த்தமாகாது. அவர்கள் புதிய விடயங்களை கற்றுக்கொள்ளும்போது, ​​புதிய உணர்ச்சிகளை அனுபவிக்கும் போது இது போன்ற தூக்கப் பிரச்சினைகள் ஏற்படலாம். பகலில் மாலையில் நடந்த ஒரு விரும்பத்தகாத நிகழ்வு, அதாவது சோகம் அல்லது கோபம் போன்ற ஒன்று திடீரென்று குழந்தையை தூக்கத்தில் இருந்து எழுப்பக்கூடும். மேலும், புதிய விடயங்களை கற்றுக்கொள்வதில் வரும் ஆர்வத்தால் குழந்தை தூக்கத்தில் இருந்து விழித்திருக்க அதிக வாய்ப்புள்ளது. மீண்டும் அவர்களை தட்டித்தழுவி தூங்கச்செய்ய வேண்டும்.

 

சொல்வதைக் கேட்காமல் இருத்தல்

இதுவும் அதிகமான சிறு குழந்தைகள் செய்யும் செயலாகும். எல்லா நேரத்திலும் சொல்வதைக் கேட்காமல் சுயமாக ஏதாவது ஒன்றை செய்ய விரும்பும் ஒரு காலம் ஏற்படும். இதுவும் பெற்றோருக்கு ஒரு தலைவலியாகும்.ஆனால் இதுவும் குழந்தையின் வளர்ச்சி நிலையில் தங்கிய விடயம் என்பதை மனதில் கொள்ளுங்கள். முன்பு குறிப்பிட்டது போல, குழந்தை தான் ஒரு தனிமனிதன் என்பதை உணர்ந்து கொள்வதற்கான அறிகுறியாகும். அவர்கள் தனிப்பட்ட முடிவுகளை எடுக்கவும், அவர்கள் விரும்பியதைச் செய்யவும் ஆசைப்படுகிறார்கள். எனவே இந்த பழக்கத்தை பொறுமையுடன் எதிர்கொள்ள வேண்டும்.

 

உடனடி கோபம் / திடீர் கோபம்

பெற்றோருக்கு அலுப்படையச் செய்யும் மற்றொரு பிரச்சினை என்னவென்றால், குழந்தைகள் எந்த காரணமும் இல்லாமல் கோபமாக இருக்கும்போது, எழுந்து ஊரைக்கூட்டுவதாகும். இவ்வாறான நேரங்களில், குழந்தைகள் ஏன் கோபப்படுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிவதில்லை. அதேபோல அழுவதையும் நிறுத்துவது மிகவும் கடினம். இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அவர்கள் விரும்புவது கிடைக்காமல் போகும்போது, பசி, துக்கம், போன்றவை அவர்களை கோபமடையச்செய்யும். எனவே இந்த நேரத்தில் குழந்தையின் மீது நீங்கள் கோபப்படவோ குழந்தையை திட்டவோ செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை. அதற்கு பதிலாக அவர்களை தவிர்ப்பதே மிகச் சிறந்த விடயம். நீங்கள் குழந்தையின் கவனத்தை திசை திருப்பலாம் அல்லது அழுவதை புறக்கணிக்கலாம்.

 

உணவை மறுத்தல்

 

நன்றாக சாப்பிட்டுக் கொண்டிருந்த குழந்தை, திடீரென்று சாப்பிட மறுத்துவிடலாம். இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். உடல்நலக் காரணங்கள், பற்கள் வளரும்போது, ​​அத்துடன் சாப்பிடுவதை தவிர்த்து விளையாடுவதற்கான விருப்பம் போன்றவற்றில் உணவில் குறைந்த கவனம் செலுத்தலாம். இந்த நேரத்தில் சாப்பிட கட்டாயப்படுத்துவது புத்திசாலித்தனம் அல்ல. இது குழந்தைக்கு உணவின் மீதான ஆர்வத்தை மேலும் இழக்கச் செய்யும். எனவே உணவின் மீது மெதுவாக கவனத்தை ஈர்க்கக்கூடிய விடயங்களைச் செய்ய வேண்டும். அதாவது வெவ்வேறு உணவுகளையும் அழகான உணவுகளையும் செய்து கொடுக்க வேண்டும்.