குளிர்சாதனப் பெட்டியை சரியாக பயன்படுத்துவது எப்படி?

 

இப்போதெல்லாம் குளிர்சாதனப் பெட்டி இல்லாத வீடுகளே இல்லை. முன்பெல்லாம் அப்போதைய தேவைக்கு காய்கறிகளை வாங்கி அவற்றை அன்றே சமைத்து சாப்பிட்டு கொண்டிருந்த நாம், குளிர்சாதனப் பெட்டி பயன்பாட்டிற்கு பின்னர் ஒரு கிழமைக்கு தேவையான காய்கறிகளை வாங்கி வைத்துக்கொள்கின்றோம். ஆனால் இவ்வளவு வேலைகளைச் செய்யும் இந்த குளிர்சாதன பெட்டியை சரியாகப் பயன்படுத்துவது எப்படி என்று மிகச் சிலருக்கு மட்டுமே சரியாக தெரியும். சில வீட்டு குளிர்சாதன பெட்டியை திறக்கும்போது ஒரு கிழமையாக குளிக்காதவர்களிடம் இருந்து வரும் மணம் போல வரும். இப்படி தூய்மை மற்றும் சரியான பராமரிப்பு குறைவான குளிர்சாதனப் பெட்டிகளில் உணவுப்பொருட்களை வைத்து சாப்பிடுவதும் உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடியதாகும். அதுமட்டுமல்லாமல், மின்சார கட்டணத்தையும் உயர்த்துகிறது. இனி கவலை வேண்டாம். இன்றைய லைஃபீ தமிழ், நேரம், பணம் மற்றும் ஆரோக்கியத்தை சரியாக நிர்வகிக்க ஒரு குளிர்சாதன பெட்டியை எவ்வாறு வைத்திருக்கலாம் என்ற தகவலை உங்களுக்காக கொண்டுவந்துள்ளது.

 

சுத்தம் செய்யுங்கள்

முதலில் குளிர்சாதனப் பெட்டியை நிறுத்திவிட்டு, உள்ளே இருக்கும் பொருட்களை எடுங்கள். டிரேக்களையும் அகற்றி அதனை தனியாக கழுவி குளிர்சாதனப் பெட்டிக்கு சேதம் விளைவிக்காத வகையில் சரியாக சுத்தமாக துடைக்கவும்.

இதனை சுத்தம் செய்தாலும் அடிக்கடி குளிர்சாதனப் பெட்டியை திறக்கும்பொது, ஒரு ஜாடி கிரேவியை கவிழ்க்கும் சிறு குழந்தைகளினால் அடிக்கடி மீண்டும் முழு குளிர்சாதனப் பெட்டியையுமே கழுவ நேரிடும். அதனால் குளிர்சாதனப் பெட்டியில் ஒவ்வொரு ட்ரேயிற்கும் கீழ் க்ளிங் ரெப் அல்லது பிளாஸ்டிக் மெட் வைப்பதே மிகச் சிறந்த விடயம். அப்படி ஏதாவது நடந்தால், நீங்கள் செய்ய வேண்டியது கிளிங்கிராப்பை அகற்றுவது மட்டுமே. அது ஒரு மெட்டாக இருந்தால், அதை எடுத்து கழுவுவதும் எளிதானது. வாரத்திற்கு இரண்டு முறை இப்படி செய்வது எளிதானது மற்றும் முழு குளிர்சாதன பெட்டியை சுத்தம் செய்வதை விட நேரத்தையும் மிச்சப்படுத்துகிறது.

 

பிளாஸ்டிக் கொள்கலன்கள்

சாப்பிட்டு எஞ்சியவற்றை அடுத்த நாளைக்கு சாப்பிடுவதற்காக சேமித்து வைக்க பிளாஸ்டிக் பக்கட்டுகள் மிகவும் உதவியாக இருக்கும். நன்கு மூடக்கூடிய சில பிளாஸ்டிக் பக்கட்டுகளை எடுத்துக் கொள்ளுங்கள். ஐஸ்கிரீம் பெட்டிகளைப் போல இருப்பது இன்னும் எளிது. நீங்கள் ஒரு வாரத்திற்கே சமைப்பவராக இருந்தால், மைக்ரோவேவ் ஓவன் செப்டி போக்ஸ்களாக இருந்தால் மிகவும் நல்லது. அதை அப்படியே சூடாக்கி சாப்பிடவும் எடுக்கலாம். நன்கு மூடிய ஜாடிகளில் கிரேவியை வைப்பது, குளிர்சாதன பெட்டியில் கிரேவி வாசனையை வெளிவிடாது. மேலும் மின்சார கட்டணத்தையும் சேமித்து, கிரேவியையும் புதியதாக வைத்திருக்கும்.

 

 பிரிட்ஜா அல்லது பிணவறையா?

பல வீடுகளில், ஐஸ் க்யூப்ஸ் போட்டு தண்ணீர் அல்லது ட்ரிங்க்ஸ் குடித்தால் ஒரு துர்நாற்றம் வீசுகிறது. குளிர்சாதன பெட்டியில் உள்ள டீப் பிரீசர் அல்லது பிரீசர் ஒழுங்கற்ற நிலையில் இருப்பதே இதற்குக் காரணம். பிரீசரை திறக்கும் போது வரக்கூடிய வாசனை பெரும்பாலான வீட்டு பிரீஸர்களுக்கு பொதுவானது.

முன்பு கூறியதை போல, இதற்காக சில பிளாஸ்டிக் பெட்டிகளையும் வைத்திருங்கள். அல்லது சில ஜிப் லாக் பைகளை எடுத்துக் கொள்ளுங்கள். சரியான அளவு இறைச்சி அல்லது மீனை கழுவி பிரித்து ஒரு பெட்டி அல்லது பையில் அடைக்கவும். பெட்டியை அல்லது பையை பிரீசரில் வைக்கவும். சரியான முறையில் இவற்றை செய்யாவிட்டால் உங்கள் பிரீசருக்கும் பிணவறைக்கும் பெரிய வித்தியாசம் இருக்காது.

 

வாரத்திற்கு ஒரு முறை குப்பைகளை அகற்றவும்

குளிர்சாதன பெட்டியில் அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே உள்ளன என்று நீங்கள் எவ்வளவு நினைத்தாலும், ஒரு வாரம் அல்லது இரண்டு நாட்களுக்குப் பிறகு, பெரும்பாலும் பழைய தேங்காய் தூள், உப்பு மிளகு மற்றும் மீதமுள்ள கிரேவி போன்றவையே எஞ்சக்கூடியவையாகும். அது மட்டுமல்லாமல், குளிர்சாதன பெட்டியில் காலாவதியான சோஸ் போத்தல்கள் போன்றவையும் இருக்கத்தானே செய்கின்றன. இந்த குப்பை குவியல் குளிர்சாதன பெட்டியில் உள்ள இடத்தை குறைப்பது மட்டுமல்லாமல் அதிக மின்சாரத்தையும் உறிஞ்சுகின்றது. நறுக்கிய தக்காளி, பழைய குடைமிளகாய், உலர்ந்த மற்றும் காய்ந்த கறிவேப்பிலைகள் போன்ற தேவையற்ற பொருட்களை குளிர்சாதன பெட்டியில் இருந்து வாரத்திற்கு ஒரு முறையாவது அகற்றவும்.

 

 இப்போது எப்படி பெக்கிங் செய்வதென பார்ப்போம்

  • பிரிட்ஜ் டோர்

குளிர்சாதன பெட்டியின் கதவிலிருந்து ஆரம்பிக்கலாம். இப்போது குளிர்சாதன பெட்டியின் கதவில் முட்டைகள் வைத்திருப்பது முட்டைகளின் நீண்ட ஆயுளுக்கு ஏற்றதல்ல என்று கூறப்படுகிறது. பிரஷ் மில்க், சீஸ், பால் பானங்கள் மற்றும் தயிரை ஃப்ரிட்ஜில் நீண்ட நேரம் வைத்திருக்கவும் முடியாது. இந்த விஷயங்களை குளிர்சாதன பெட்டியின் உள்ளே தட்டில் வைக்கவும். சோஸ்கள், பானங்கள், தண்ணீர் போத்தல்கள் போன்றவற்றை குளிர்சாதன பெட்டியின் கதவில் வைக்கலாம்.

 

  • காய்கறிகளையும் பழங்களையும் ஒன்றாக வைக்க வேண்டாம்

காய்கறி வாளியில் பழங்களை வைக்க வேண்டாம். பழத்தை காய்கறிவாளியின் மேல் உள்ள தட்டில் வைக்கவும். காய்கறிகளை தனி ஜிப் லாக் பைகள் அல்லது பொலித்தீன் பைகளில் அடைக்கவும். அனைத்து காய்கறிகளையும் ஒரே குவியலில் வைப்பதால் காய்கறிகள் நசுங்கி விரைவாக கெட்டுவிடும்.

 

  • ஒரு குளிர்சாதனப் பெட்டியா அல்லது பேருந்தா?

தனியார் பேருந்துகளில் ஏறும் கூட்டத்தைப் போல பெக் செய்ய வேண்டாம். அதாவது பொருட்களை மிக நெருக்கமாக குவித்து விடாதீர்கள். பெக்கேஜிங் இடையே குளிர்ந்த காற்று செல்ல இடம் வைக்கவும். அல்லது நீங்கள் அதை குளிர்சாதனப் பெட்டியில் வைத்தாலும் காய்கறிகள் விரைவாக நாசமடைகின்றன.

 

  • பொருட்களை வேகமாக எடுத்து பயன்படுத்த அதிக கவனம் செலுத்த முயற்சி செய்யுங்கள்.

விரைவாகப் பயன்படுத்த வேண்டிய பால் பொருட்கள், கிரேவி போன்றவற்றை குளிர்சாதன பெட்டியில் வைத்தவுடன் அவை குளிர்சாதன பெட்டியில் இலகுவாக தோன்றும் இடத்தில் வைக்கவும். அது பின்னால் எங்காவது தள்ளி வைத்து விட்டால் அப்படியே மறந்து போய்விடக்கூடும். இது தேவையற்ற சுமைகளையும் ஏற்படுத்துகிறது.

 

குளிர்சாதனப் பெட்டியை எவ்வளவு சுத்தம் செய்தாலும் நாற்றம் வருகிறதா?

அதை தவறாமல் சுத்தமாக வைத்திருந்தாலும், குளிர்சாதன பெட்டியில் உள்ள புதிய வாசனையை சில நேரங்களில் இழக்க நேரிடும். இதை சரிசெய்ய, பேக்கிங் சோடா அல்லது கோப்பி பவுடரை ஒரு சிறிய தட்டில் வைத்து குளிர்சாதனப் பெட்டியின் ஒரு மூலையில் திறந்தவாறு வைக்கவும். இதனால் குளிர்சாதன பெட்டியின் புத்துணர்வை எல்லா நேரத்திலும் பராமரிக்க முடியும். பிரிஸரில் இருக்கும் துர்நாற்றத்திற்கும் இது ஒரு நல்ல தீர்வு.

 

இவற்றை குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டாம்

 

இவற்றில் எத்தனை விடயங்கள் இப்போது உங்கள் குளிர்சாதன பெட்டியில் உள்ளன என்று பாருங்கள். இவை குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டியவை அல்ல.

  • தக்காளி

நீங்கள் காய்கறிகளைக் கொண்டு வரும்போது, ​​அவை அனைத்தையும் குளிர்சாதன பெட்டியில் அப்படியே எடுத்து வைக்கிறீர்கள். ஆனால் தக்காளியின் உண்மையான சுவையை பெற விரும்பினால், தக்காளியை குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டாம். சாதாரண அறை வெப்பநிலையில் வைக்கவும்.

 

  • வாழைப்பழங்கள்

வாழைப்பழங்கள் விரைவாக கறுப்பு நிறமாக மாறும் என்பதால் சிலர் வாழைப்பழங்களை குளிர்சாதன பெட்டியில் வைக்கின்றனர். அப்படி செய்தால் அது வாழைப்பழத்தில் உள்ள போஷாக்கிற்கு சேதத்தை ஏற்படுத்துகிறது. அது மட்டுமல்லாமல் பழுக்காத வாழைப்பழமாக இருந்தால் பழுக்கும் தன்மையையும் இழக்கச் செய்கிறது

 

  • இந்த பழத்தை குளிரூட்ட வேண்டாம்

வாழைப்பழங்கள், மாம்பழம், ஆப்பிள், பீச், கிவிஸ் மற்றும் முலாம்பழம் போன்ற பழங்களை அவற்றின் ஊட்டச்சத்துக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால் அவற்றை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கக்கூடாது. சுவை மற்றும் ஊட்டச்சத்துக்காக சாப்பிடுவதால் இந்த வகையான பழங்களை குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டாம். நீங்கள் அரை துண்டு ஆப்பிளை குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால், நன்கு மூடிய கொள்கலனில் போட்டு வைக்கவும் அல்லது பொலித்தீனில் போர்த்தி வைக்கவும்.

 

  • உருளைக்கிழங்கு

சிலர் அதைப் பாதுகாக்க மற்ற காய்கறிகளுடன் சேர்த்து குளிர்சாதனப் பெட்டியில் வைக்கிறார்கள். குளிரில், உருளைக்கிழங்கில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் விரைவாக குளுக்கோஸாக மாற்றப்படுகின்றன. இது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

 

  • தேன்

எறும்புகள் தேன் போத்தலை மொய்த்துவிடும் என்பதால் அதை குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டாம். தேன் என்பது இயற்கையாகவே உருவாகும் பொருள். சிறந்த தேன் ஒருபோதும் கெட்டுவிடாது என்று கூறப்படுகிறது. குளிர்சாதனப் பெட்டியில் தேனை வைப்பது தேனில் உள்ள குளுக்கோஸை கட்டியாக்குகின்றது.