என்னதான் அசைவ உணவுகளை சாப்பிட்டாலும் அதன் பின்னர் ஒரு இனிப்பு சாப்பிடுவதில் காணப்படும் திருப்தி மிகவும் அலாதியானது. சிலர் சைவ உணவை மட்டுமே உண்பார்கள். சைவத்திலும் வகை வகையாக சமைக்கலாம். அதிலும், இனிப்பு வகைகள் விதவிதமாக உண்டு. அவ்வாறான சில தகவல்களை இன்று சுமந்து வந்துள்ளோம்.
கஜூ பட்டர் புடிங்
தேவையான பொருட்கள்
- சர்க்கரை – 1 கப்
- கோர்ன்ஃப்லா – 4 மேசைக்கரண்டி
- கோகோ பவுடர் – 6 மேசைக்கரண்டி
- பால் – 3 கப்
- பிரஷ் கிரீம் – 1 கப்
- சொக்கலேட் சிப்ஸ் – 1 கப்
- பட்டர் – 4 மேசைக்கரண்டி
- கஜூ – 4 மேசைக்கரண்டி
- வறுத்த கஜூ – 1/4 கப்
- ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, கோகோ பவுடர் மற்றும் கோர்ன்ஃப்லா சேர்த்து கிளறவும். அதில் சிறிது பால் மற்றும் பிரஷ் கிரீம் சேர்க்கவும். இதை அடுப்பில் வைத்து குறைந்த வெப்பத்தில் வைக்கவும். குமிழ்கள் வரும்போது இறக்கி வைக்கவும்.
- பட்டர் மற்றும் முந்திரி சேர்த்து நன்றாக கலக்கவும். இதை புடிங் கலவையில் சேர்த்து சில சொக்கலேட் சிப்ஸ் சேர்க்கவும். நன்றாக விஸ்க் செய்து கலக்கவும்.
- இதை டெஸெர்ட் கப்களில் போட்டு 3 மணி நேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். சாப்பிடுவதற்கு முன் வறுத்த முந்திரிகளை தூவவும்.
எக்லஸ் ப்ரவ்னி
தேவையான பொருட்கள்
- கோதுமை மா – 1 கோப்பை
- கொக்கோ தூள் – 1/2 கப்
- பேக்கிங்சோடா – 1 தேக்கரண்டி
- சிவப்பு சர்க்கரை – 1 கப்
- பால் – 1 கப்
- மரக்கறி எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
- நெஸ்கொஃபி தேக்கரண்டி – 1
- உப்பு
- எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி
- நெஸ்கொஃபியில் 1 மேசைக்கரண்டி சூடான நீரைச் சேர்த்து கரைக்கவும். அடுப்பை 180 சி வரை சூடாக்கவும்.
- ஒரு பேக்கிங் தட்டில் வெண்ணெய் தடவி தயாராக்குங்கள்.
- ஒரு பாத்திரத்தில் சிறிது வெண்ணெய் போட்டு சூடாக்கவும். வெண்ணெய் உருகும்போது, அதில் சிறிது எண்ணெய் சேர்க்கவும். இப்போது பால், கரைத்த நெஸ்கொஃபி, எலுமிச்சை சாறு, சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து நன்கு விஸ்க் செய்யவும்.
- மாவில் பேக்கிங் பவுடர் மற்றும் கொக்கோ பவுடர் சேர்த்து மூன்று முறை சளித்து எடுக்கவும். இப்போது இதை வெண்ணெயில் சேர்த்து கிளறவும். பிறகு ஒரு பேக்கிங் தட்டில் போட்டு, 180 செல்ஷியஸிற்கு 30 நிமிடங்கள் சுடவும்.
மேங்கோ மூஸ் புடிங்
தேவையான பொருட்கள்
- மாம்பழ ப்யூரி – 1 கப்
- விப்பிங் கிரீம் – 1 கப்
- சர்க்கரை – 6 மேசைக்கரண்டி
- வெணிலா
- நறுக்கிய முந்திரி அல்லது பாதாம்
- மாம்பழ ப்யூரி செய்யும்போது, நன்கு பழுத்த மாம்பழத்தை தேர்ந்தெடுக்கவும். இல்லையெனில் அது நன்றாக கலக்கி வராது. இதை செய்யும்போது ஒரு மேசைக்கரண்டி நீர் சேர்த்து கலந்தாலும் பரவாயில்லை.
- இந்த ப்யூரியின் 1 கப் எடுத்து, ஒரு பாத்திரத்தில் சேர்த்து வெணிலா சேர்க்கவும்.
- இன்னும் சிறிது பியூரியில் விப் கிரீம் போட்டு, அதோடு சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும்.
- இப்போது இந்த விப்பிங் கிரீம் கலவை மற்றும் மாம்பழ ப்யூரி ஆகியவற்றை பிளெண்டரில் சேர்த்து கலக்கவும்.
- இந்த கலவையை டெஸெர்ட் கப்பில் போட்டு, மீதமுள்ள மாம்பழ ப்யூரி, நறுக்கிய முந்திரி அல்லது பாதாம் சேர்த்து சிறிது நேரம் குளிரூட்டவும்.
எக்லஸ் கேரமல் புடிங்
தேவையான பொருட்கள்
- பிரஷ் கிரீம் – 1 கப்
- பிரஷ் பால் – 3 கோப்பைகள்
- சர்க்கரை – 1/2 கப்
- வெணிலா
- ஜெலட்டின் – 15 கிராம்
கேரமலுக்கு
- சர்க்கரை – 5 மேசைக்கரண்டி
- நீர் – 1 மேசைக்கரண்டி
- கடாயை அடுப்பில் வைத்து அது சூடாகும்போது சிறிது சர்க்கரை சேர்க்கவும். அத்தோடு சிறிது நீர் சேர்த்து கேரமல் செய்ய கிளறவும். இந்த கேரமலை ஒரு பேக்கிங் தட்டில் வைத்து கிளறவும்.
- ஜெலட்டினிற்கு சிறிது சூடான நீரை சேர்த்து ஊற விடவும்.
- ஒரு தனி கிண்ணத்தில் பாலை சூடாக்கவும். பிரஷ் கிரீம் மற்றும் வெணிலா சேர்க்கவும். சிறிது ஜெலட்டின் அதில் சேர்க்கவும். சுமார் 10 நிமிடங்கள் இதைக் கிளறி, கலவை கெட்டியாகும்போது பேக்கிங் தட்டில் வைக்கவும். இதை ஒரு ஃபொயில் ஒன்றால் மூடி 45 நிமிடங்கள் வைக்கவும்.
எக்லஸ் ப்ரெட் புடிங்
தேவையான பொருட்கள்
- பாண் துண்டுகள் – 10
- பிரஷ் பால் – 1 1/2 கப்
- சர்க்கரை – 3/4 கப்
- வெணிலா
- நறுக்கப்பட்ட முந்திரிகள் சில
கேரமலுக்கு
- சர்க்கரை – 5 தேக்கரண்டி
- நீர் – 1 தேக்கரண்டி
- வாணலியை அடுப்பில் வைக்கவும். அது சூடாகும்போது சிறிது சர்க்கரை சேர்க்கவும். சிறிது நீர் சேர்த்து கேரமல் செய்ய கிளறவும். இந்த கேரமல் ஒரு பேக்கிங் தட்டில் வைத்து கிளறவும்.
- பாணை சிறிய துண்டுகளாக பிரித்து, இதில் பால் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் சர்க்கரை மற்றும் வெணிலா சேர்த்து நன்கு கலக்கவும். சர்க்கரை நன்கு கரையும் வரை கிளறவும்.
- புடிங் கலவையை கேரமல் தட்டில் வைத்து 180 செல்ஷியஸிற்கு 40 நிமிடங்கள் சுட வேண்டும்.