இலங்கையின் அமைவிட தன்மையைக் கருத்திற்கொண்டு பாலைவனங்களைப் பற்றி புவியியல் பாடங்களில் மட்டுமே நாங்கள் பெரும்பாலும் கற்றுக்கொள்கிறோம். ஆனால் பாலைவனத்தைப் பற்றி சாகச படங்கள் மூலமாகவும், மத்திய கிழக்கு நாடுகளில் வேலைக்குச் சென்ற எங்கள் நண்பர்களிடமிருந்தும் தான் கற்றுக்கொள்கிறோம். பெரும்பாலான மக்கள் பாலைவனத்தில் பயணிக்க உதவுவதால் ஒட்டகங்களை நேசிக்கிறார்கள். இன்று நாம் உலகின் சில முக்கிய பாலைவனங்களைப் பற்றி பேசப் போகிறோம். இந்த பட்டியலில் நாங்கள் சஹாரா பாலைவனத்தை சேர்க்கவில்லை. ஏனெனில் சஹாராவைப் பற்றி எம்மில் நிறைய பேருக்குத் தெரியும்.
கலஹாரி பாலைவனம்
சஹாராவுக்கு அடுத்தபடியாக உள்ள கலஹாரி பாலைவனத்தின் பெரும்பகுதியை போட்ஸ்வானா நாடு கொண்டுள்ளது. இந்த பாலைவனம் தென்னாபிரிக்கா மற்றும் நமீபியாவிலும் பரவியுள்ளது. கலஹாரி என்ற பெயர் பழங்குடி மொழிகளில் ‘அதிக தாகம்’ என்று பொருள்படும். இந்தப் பெயர் பாலைவனத்தில் நீரைக் கண்டுபிடிப்பதில் உள்ள பெரும் சிரமத்தைத் தெரிவிக்கிறது. இந்த பாலைவனத்தின் சில பகுதிகளில் உப்பு ஏரிகளிலும், வறண்ட காலநிலையிலும் கற்றாழை மற்றும் புதர்களை காணலாம். ஆனால் பெரும்பாலான பகுதிகளில் பாலைவனத்தின் மிகப் பிரதானமான அம்சங்கள் மட்டுமே காணப்படுகின்றன.
தக்லமாகன் பாலைவனம்
சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள இந்த பாலைவனத்திற்கு அதன் பெயர் எவ்வாறு வந்தது என்பது குறித்து பல்வேறு கருத்துக்கள் உள்ளன. சிலரின் கூற்றுப்படி, இது பாரசீக வம்சாவளியைக் கொண்ட பெயர் என்று கூறப்படுகிறது. ஆனால் எதிர்ப்பாளர்கள் இதன் அர்த்தம் ‘சென்றால் திரும்பி வராத இடம்’ என்பதாகும். ஜெர்மனியை விட சற்றே பெரிய அளவிலான இந்த தக்லமாகன் பாலைவனத்தில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவர்களை பொறுத்தவரை இந்த பாலைவனத்திற்கான மணல் மேற்கு அமெரிக்காவிலிருந்து வருகிறது.
நமீப் பாலைவனம்
பரந்த நிலப்பரப்பு கொண்ட நமீப் பாலைவனம் தென்னாபிரிக்காவின் கடற்கரையில் அமைந்துள்ளது. சுமார் 2,000 கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள இந்த பாலைவனம் அங்கோலா, நமீபியா மற்றும் தென்னாபிரிக்காவின் சில பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது. இந்த பாலைவனத்தில் பல வகையான தாவரங்கள் மற்றும் விலங்குகள் உள்ளன. அவை தம் வாழ்க்கைக்கே மிகக் குறைந்த அளவிலான நீரை உட்கொள்ளும் குணத்தைக் கொண்டவை.
அண்டார்டிகா
ஒருவேளை அண்டார்டிகா என்ற வார்த்தையைப் பார்த்தபோது லைபீ தமிழ் பிழையாக எழுதியுள்ளதா என்றும் எண்ணலாம். பாலைவனத்திற்கான வரையறையில் அடிப்படையில் பார்த்தால் அண்டார்டிகாவும் ஒரு பாலைவனம்தான். உலகின் 80% நன்னீர் அண்டார்டிகாவில் சேமிக்கப்பட்டிருந்தாலும் சுமார் இரண்டு மில்லியன் ஆண்டுகளாக போதுமான மழை அண்டார்டிகாவில் பெய்யவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கடுமையான காலநிலைகள் மற்றும் பனி மூடிய நிலப்பரப்புகளில் வாழக்கூடிய தாவரங்களும் விலங்குகளும் இருக்கின்றன.
படகோனியா பாலைவனம்
அர்ஜென்டினாவில் உள்ள இந்த பாலைவனம் மேற்கில் ஆண்டிஸ் மலைகள் மற்றும் கிழக்கில் அட்லாண்டிக் பெருங்கடலால் சூழப்பட்டுள்ளது. ஆனால் இந்த பாலைவனத்தில் சில பகுதிகளில் குளிர்ந்த காற்று மற்றும் அலைகள் உள்ளன. இதன் விளைவாக, பல்வேறு வகையான விலங்குகள் மற்றும் தாவர இனங்கள் இந்த பகுதியில் காணப்படுகின்றன. பண்டைய காலங்களிலிருந்து பாலைவனத்தில் உள்ள குகைகளில் பண்டைய மனிதர்கள் வசித்துள்ளனர். மற்றும் இன்றும் பாலைவனத்தில் பழங்குடியினர் வசிக்கின்றனர்.
அடகாமா பாலைவனம்
எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்தில் மனித ஆய்வுகளுக்கான ஆராய்ச்சி தளமாக இந்த பாலைவனம் பயன்படுத்தப்படுகிறது. ஏனென்றால், அண்டார்டிகாவுக்குப் பிறகு உலகின் மிக வறண்ட இடமாக அட்டகாமா பாலைவனம் உள்ளது. இருப்பினும், பல பாலைவனங்களை போலவே, இதன் காலநிலைக்கும் ஏற்ற பலவகையான தாவரங்கள் மற்றும் விலங்குகளும் உள்ளன. மேலும், செப்டெம்பர் முதல் நவம்பர் வரையான மழைக்காலங்களில் இந்த பாலைவனம் பூக்களால் நிறைந்திருக்கும்.
தார் பாலைவனம்
சுமார் 200,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட தார் பாலைவனத்தின் பெரும்பகுதியை இந்தியா கொண்டுள்ளது. மீதமுள்ளவை பாகிஸ்தானில் அமைந்துள்ளன. இரு நாடுகளும் பாலைவனத்தில் வசிக்கும் விலங்குகள் மற்றும் தாவரங்களின் பாதுகாப்பிற்காக சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்காக்களை அறிவித்துள்ளன. மேலும், தார் தொடர்பாக ஆண்டுதோறும் பல கலாச்சார விழாக்கள் நடத்தப்படுகின்றன. அவை ஒரு முக்கிய சுற்றுலா அம்சமாகும்.