உலகையே வியப்பில் ஆழ்த்திய இந்திய அரச சிம்மாசனங்கள்

 

அரசின் அடையாளங்களில் ஒன்றாக சிம்மாசனத்தை கருதலாம். கண்டி இராச்சியத்தின் சிம்மாசனத்தை இன்று எமது நாட்டின் அருங்காட்சியகத்தில் காணலாம். மேலும், சீகிரியா, பொலன்னறுவை ராஜசபா மண்டபம் போன்ற இடங்களில் கற்களினால் ஆன சிம்மாசனங்களைக் காணலாம். இன்று நாம் எமது அண்டை நாடான இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் இருந்த சிம்மாசனங்களைப் பற்றி பேசப் போகிறோம். பெரும்பாலும் பௌத்த மத வருகைக்கு பின்னர் இலங்கை அரசாட்சியில் இந்திய படைப்புகளும் செல்வாக்கு செலுத்த ஆரம்பித்தது.

 

மயில் சிம்மாசனம்

முகலாய பேரரசர் ஷாஜகான் வடிவமைத்த இந்த கம்பீரமான மயில் வடிவ சிம்மாசனத்தை செய்வதற்கு தாஜ்மஹாலை விட இரண்டு மடங்கு அதிகமாக செலவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக சுமார் 1150 கிலோகிராம் தங்கமும் 230 கிலோகிராம் பல்வேறு வகையான இரத்தினங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. டெல்லி மீது படையெடுத்த நதீர் ஷா, சிம்மாசனத்தை பெர்சியாவுக்கு எடுத்துச் சென்று, அதை பல பகுதிகளாகப் பிரித்து, புதிய மயில் சிம்மாசனத்தைக் கட்டினார். இன்று இது ஈரான் மத்திய வங்கியின் சொத்தாக பாதுகாக்கப்படுகிறது.

 

மைசூர் தங்க சிம்மாசனம்

மைசூர் அரண்மனையின் பிரதான அரச பெவிலியனில் இன்று இந்த அற்புதமான அமைப்பு அமைந்துள்ளது. இது மரம், தந்தம் மற்றும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த அரியணையைச் சுற்றி பல்வேறு புராணக்கதைகள் பிண்ணப்பட்டிருக்கின்றன. ஒரு புராணக்கதையின் படி இது மகாபாரதத்தில் வந்த பாண்டவ மன்னர்களின் பிள்ளைகளின் சிம்மாசனம். பல நூற்றாண்டுகளாக மறைக்கப்பட்ட இந்த சிம்மாசனம், விஜயநகரப் பேரரசின் நிறுவனர் முதலாம் ஹரிஹராவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

 

டக்ட் – ஈ – நிஷான்

ஹைதராபாத்தின் நிஜாம்கள் பயன்படுத்திய இந்த சிம்மாசனத்தை சௌமஹல்லா அரண்மனையில் இன்னும் காணலாம். பொதுவாக விலையுயர்ந்த நகைகளை அணிய விரும்பிய நிஜாம்களின் சிம்மாசனம் எளிமையானது என்பது சற்றே ஆச்சரியமாக இருக்கிறது. இந்த சிம்மாசனம் முற்றிலும் பளிங்குகளால் ஆனது. அத்தோடு விலையுயர்ந்த கற்கள் அல்லது தங்கத்தால் இது அலங்கரிக்கப்படவில்லை.

 

மகாராஜா ரஞ்சித் சிங்கின் சிம்மாசனம்

சீக்கிய பேரரசின் வெல்ல முடியாத ஆட்சியாளரான ரஞ்சித் சிங் மகாராஜாவின் சிம்மாசனத்தை இன்று இங்கிலாந்தின் விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் காணலாம். ரஞ்சித் சிங்கின் ஆட்சியின் பின்னர், ஆங்கிலேயர்கள் பஞ்சாப் மீது படையெடுத்து, கோஹினூர் வைரம் உட்பட பஞ்சாப் மன்னர்களின் அனைத்து பொக்கிஷங்களையும் கொள்ளையடித்தனர். அவர்கள் சில நகைகளை ஏலம் விட முயற்சித்த போதிலும், அரியணையின் மதிப்பின் சிறப்பால் அதை இங்கிலாந்துக்கு அனுப்ப முடிவு செய்தனர்.

 

டக்ட் – இ – ஜஹாங்கிர்

ஜஹாங்கிர் பேரரசர் பயன்படுத்திய சிம்மாசனத்தை இன்றும் இந்தியாவின் செங்கோட்டையில் காணலாம். பொதுவாக நாம் சிம்மாசனம் என்று சொல்லும்போது, ​​தங்கம் மற்றும் முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு இருக்கை எமது நினைவுக்கு வருகிறது. ஆனால் இந்த சிம்மாசனம் கல்லால் ஆன பலகை போன்றது. முதலில் அலகாபாத்தில் நிறுவப்பட்ட இந்த சிம்மாசனம் முகலாயப் பேரரசின் தலைநகரான ஆக்ராவில் யமுனா நதியை எதிர்கொண்டவாறு அமைக்கப்பட்டது. சிம்மாசனத்தில் பொறிக்கப்பட்ட ஒரு கடிதத்தின்படி, அதைச் சுற்றி அறுபது மணிகள் தொங்கவிடப்பட்டுள்ளன. மேலும் அரச நீதிமன்றத்தில் இருந்து நீதி பெற எவரும் அந்த மணியை ஒலிக்கவைக்க முடியும்.

 

 புலி சிம்மாசனம்

மைசூரின் திப்பு சுல்தானின் எண்கோண சிம்மாசனத்தின் அழகு சமகால பதிவுகளில் மிகவும் பாராட்டப்பட்டது. இந்த மர சிம்மாசனம் தங்கம் மற்றும் பல்வேறு இரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பிரித்தானியர்களுடனான தோல்விக்குப் பிறகு, வீரர்கள் திப்புவின் அரண்மனையை கொள்ளையடிக்கத் தொடங்கினர். இந்த கலைப்படைப்பை அவர்கள் பல பகுதிகளாக விற்றுள்ளனர்.

 

திருவிதாங்கூரின் தந்தத்தால் அமைக்கப்பட்ட சிம்மாசனம்

திருவாங்கூருக்கு தந்த வர்த்தகம் ஒரு முக்கிய வருமான ஆதாரமாக மாறியது. இதன் காரணமாக, மன்னர் மார்த்தாண்ட வர்மா தனது பயன்பாட்டிற்காக தந்தத்தால் ஆன சிம்மாசனத்தை உருவாக்கினார். சிம்மாசனத்தை உருவாக்க ஐரோப்பிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டாலும், சமகால மற்றும் பாரம்பரிய இந்திய கலை வெளிப்புற அலங்காரத்திற்கு பயன்படுத்தப்பட்டது. இருப்பினும், 1851ஆம் ஆண்டில், வர்மா விக்டோரியா மகாராணிக்கு இந்த அரியணையை பரிசாக வழங்கினார். இதன் விளைவாக, சிம்மாசனம் பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் மரபு இன்றுவரை உள்ளது.