குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்த பொலிவூட் பிரபலங்கள்

 

பொலிவூட் திரைப்படங்களை பார்ப்பது இப்போது அதிகரித்துவிட்டது. அத்தோடு மட்டுமல்லாமல் சுஷாந்தின் மரணத்திற்கும் பிறகு பல பொலிவூட் பிரபலங்களின் முகத்திரைகளும் கிழிக்கப்பட்டு வருவதால் பொலிவூட் வட்டாரங்களை பற்றிய பல திடுக்கிடும் கதைகளையும் கேள்விப்படுகின்றோம். எல்லோரும் அப்படியானவர்கள் அல்லர். அவர்களில் பலரும் சமுதாயத்திற்கு பல நல்ல விடயங்களை செய்வதோடு தைரியமான பல தனிப்பட்ட முடிவுகளையும் தங்கள் வாழ்க்கையில் எடுத்து சந்தோசமாக வாழ்கின்றனர். பொதுவாக அனைவரும் செய்யும் தானதர்ம வேலைகளுக்கு  மட்டும் செல்வதை விட குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்த 10 பொலிவுட் பிரபலங்கள் உள்ளனர். அவர்களைப் பற்றி இன்று பார்ப்போம்.

 

சுஷ்மிதா சென்

தத்தெடுப்புகளைப் பற்றி பேசும்போது பொலிவுட் பிரபலங்களின் பட்டியலில் இவர் எப்போதும் முதல் நபராக இருப்பார். இவர் மட்டும் தனி ஒற்றை தாயாக இருப்பதற்காக அவர் அனுபவித்த சட்ட மற்றும் சமூக தடைகள் இருந்தபோதிலும், ரெனீ மற்றும் அலிசா என்ற இரண்டு பெண் குழந்தைகளையும் அவர் தத்தெடுத்துள்ளார்.

 

ரவீனா டாண்டன்

சாயா மற்றும் பூஜா என்ற இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்தபோது இவருக்கு வெறும் 21 வயது. ஒற்றை தாயாக அவர்களை வளர்த்த பிறகு, ரவீனா திரைப்பட விநியோகஸ்தரான அனில் ததானியை மணந்தார். இவர்கள் இருவருக்கும் ராஷா மற்றும் ரன்பீர் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். சாயா மற்றும் பூஜா இருவரும் தற்போது மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையில் இணைந்துள்ளனர்.

 

சலீம் கான்

புகழ்பெற்ற திரைக்கதை எழுத்தாளர் சலீம் கான் தனது விதிமுறைகளை மீறி ஹெலனை மணந்த பிறகு அர்பிதாவை தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்தார். சலீம் கானின் குடும்பத்தில் மிகவும் விரும்பப்பட்ட மகளான அர்பிதாவுக்கு அண்மையில் திருமணம் இடம்பெற்றது. இப்போது ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

 

மிதுன் சக்ரவர்த்தி

மிதுன் சக்ரவர்த்தி ஒரு இந்திய திரைப்பட நடிகர், பாடகர், தயாரிப்பாளர், எழுத்தாளர், சமூக சேவகர், தொழில்முனைவர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் முன்னாள் மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். பொலிவுட் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான நடிகர்களில் ஒருவர்.  தெரு குப்பைத் தொட்டியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பெண் குழந்தையை மிதுன் சக்கரவர்த்தி தத்தெடுத்துள்ளார். திஷானி என்ற அந்த குழந்தையை தத்தெடுத்தபோது மிதுனுக்கு நமஷி, ரிமோ மற்றும் மிமோஹ் என்று ஏற்கனவே மூன்று மகன்மார் இருந்தனர்.

 

சமீர் சோனி மற்றும் நீலம் கோத்தாரி

நீலம் கோத்தாரி சோனி ஒரு இந்திய நகை வடிவமைப்பாளர் மற்றும் முன்னாள் நடிகை. அறிமுக வீரரான கரண் ஷா ஜோடியாக ஜவானி மூலம் நடிப்பில் அறிமுகமானார். 2013 ஆம் ஆண்டில் திருமணம் இடம்பெற்றது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு இந்த ஜோடி அஹானா என்ற குழந்தையை தத்தெடுத்தது.

 

குணால் கோஹ்லி

குணால் கோஹ்லி ஒரு இந்திய திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். ஹம் தும் மற்றும் ஃபனாவின் இயக்குனராக அவர் மிகவும் பிரபலமானவர். குணால் கோஹ்லி மற்றும் அவரது மனைவி ரவீனா ஆகியோர் ராதா என்ற குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர்.

 

சுபாஷ் காய்

சுபாஷ் காய் ஒரு இந்திய திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். ஹிந்தி சினிமாவில் முக்கியமாக தனது படைப்புகளுக்கு பெயர் பெற்றவர். சுபாஷ் காய் மற்றும் அவரது மனைவி ரெஹானா ஆகியோர் அவரது மருமகளான மேக்னா காயை தத்தெடுத்து வளர்த்தனர். அவர் தனது தம்பியின் சொந்த மகள். தற்போது, மேக்னா தயாரிப்பு நிறுவனம் மற்றும் நடிப்புக்கலை பயிற்சி பாடசாலையை நடத்தி வருகின்றனர்.

 

நிகில் அத்வானி

நிகில் அத்வானி இந்திய திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர். மோஷன் பிக்சர் தயாரிப்பு நிறுவனமான எம்மே என்டர்டெயின்மென்ட்டின் இணை நிறுவனர்களில் இவரும் ஒருவர். நிக்கில் புகழ்பெற்ற சூழலியல் நிபுணர் பிட்டு செகலுடன் பணிபுரிந்தார். மேலும் அவர் சேவ் தி டைகரின் காரணத்தின் ஆலோசனைக் குழுவில் பணியாற்றுகிறார். ‘கல் ஹோ நா ஹோ’ படத்தை இயக்கிய இந்த இயக்குனர் தனது மகள் கெயாவை நான்கு வயதில் தத்தெடுத்தார்.

 

திபக்கர் பானர்ஜி

திபாகர் பானர்ஜி இந்திய திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர் மற்றும் விளம்பர-திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். பானர்ஜி விளம்பரத் தொழிலில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஒரு திரைப்படத் தயாரிப்பாளராக இருந்த அவர், மீண்டும் ஒரு விளம்பரத் திரைப்படத் தயாரிப்பாளராக தொடர்ந்து வருகிறார். அவர் தனது சொந்த திரைப்பட தயாரிப்பு நிறுவனமான திபக்கர் பானர்ஜி புரொடக்ஷன்ஸையும் நடத்தி வருகிறார். திபாகர் பானர்ஜியும் மும்பையில் உள்ள அனாதை இல்லத்தைச் சேர்ந்த ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்து தனது மகளாக தனது மனைவி ரிச்சாவுடன் வளர்த்து வருகிறார்.

 

ஷோபனா

ஷோபனா என பலராலும் அறியப்பட்ட ஷோபனா சந்திரகுமார் பிள்ளை ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் பரதநாட்டிய நடனக் கலைஞர் ஆவார். தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் ஆங்கில மொழி படங்களுக்கு மேலதிகமாக மலையாள மொழியில் அவர் முக்கியமாக நடிக்கிறார். பிரபல பரதநாட்டிய நடனக் கலைஞரான ‘மித்ர்’ நடிகை 2010 இல் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்தார். கேரளாவின் புகழ்பெற்ற குருவாயூர் கோயிலில் அவருக்காக அங்க பிரதட்சணமும் செய்தார்.