முகக்கவசத்தால் தவறவிட்ட விடயங்களும் வாழ்வின் மாற்றங்களும்

 

வைரஸ் கார்ட், த்ரீ லேயர்ஸ், புள் fபேஸ் கவர் போன்று விதவிதமாக முகக்கவசத்திற்கு விளம்பரங்கள் வந்துவிட்டன. ஒரு கடைக்கு சென்று மாஸ்க் என்று வாய்த்திறந்து கேட்டால், க்ளோகார்ட் பற்பசைக்கு டிவி விளம்பரங்களில் வரும் போலி மருத்துவர்களை போல கடைக்காரர் காது வலிக்க கதை சொல்லி மாஸ்க்கை பிரெண்டிங் செய்வார். வீதிக்கு ஒரு மாஸ்க் விற்பனையாளரும் உருவாகியுள்ளனர். அதிலும் இந்த நாட்களில் மாஸ்க் கைமாற்ற வியாபாரம் செய்தே பலரும் பல இலட்சங்கள் சம்பாதிக்கின்றனர். எப்படி இருந்தும் பல நாடுகளில் கொரோனாவிற்கு மருந்தை செய்து கொண்டு இருந்தாலும் மாஸ்க் அணிவதை மருத்துவர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்துகின்றனர். இந்த மாஸ்க் எமது வாழ்வை எவ்வாறு மாற்றியமைத்துள்ளதென பார்ப்போம்.

 

சமூக தொடர்பு குறைந்தது

மேற்கத்தேய நாடுகளை விட ஆசியாவில் நாம் கொவிட் நிலைமை காரணமாக ஒரு பெரிய அபாயத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. நீங்கள் ஒரு மாஸ்க்கை அணிவது மட்டுமல்லாமல், முன்பை விட கைகளை பிடிப்பதும் குறைவு. ஒரு காலத்தில், நாங்கள் எங்கள் பெற்றோர்களையும் உறவினர்களையும் சந்திக்க கிராமப்புறங்களுக்குச் சென்றபோது, ​​எங்கள் தாத்தா பாட்டி சிறியவர்களை கட்டியணைத்து, “ஓ, என் பையன் இப்போது எவ்வளவு உயரமாக வளந்துட்டான், சிறுவயதில் பாக்கும்போது இவை எவ்வளவு வாலாக இருந்தான்?” என்று எல்லாம் சொல்வார்கள். ஆனால் புதிய சூழ்நிலையுடன் அந்த உறவுகளை நாம் தயக்கத்துடன் மெதுவாக குறைக்க வேண்டும். மாஸ்க் அணிவது, ஒரு மீட்டரில் உட்கார்ந்து உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் உறவாடுவது மிகவும் எரிச்சலையும் அத்தோடு தண்டனையை போலவும் உள்ளது.

 

முகபாவனைகளை அறிய முடியாது

நாம் ஒருவரை பார்க்கும்போது ​​நேரடி முகபாவனைகள் மூலம் அந்த நபரைப் பற்றி விரைவான தீர்ப்புக்கு வர முடிகிறது. இது கற்காலம் முதல் மனிதன் கடைப்பிடித்து வரும் ஒரு பொதுவான விடயம்தான். அதுமட்டுமன்றி எங்களுக்கு முன்னால் இருக்கும் நபர் எங்களுடன் பேசத் தயாரா? அல்லது அவர் கோபமாக இருக்கிறாரா என்பதை அவரது முகபாவனைகளை வைத்து காலங்காலமாக நாம் பார்த்து தெரிந்து வந்தோம். ஆனால் கொரோனாவினால் முகத்தை மறைத்து மாஸ்க்கினால் மூடிக்கொண்டிருக்கும் போது அந்த நபரின் வார்த்தைகளை மாத்திரம் நாம் கேட்கும்போது, ​​அவர் இருக்கும் மனநிலையை நாம் பிடிக்க முடியாதது ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது.

 

பாதுகாப்பு சிக்கல்கள்

கொரோனாவால் முகத்தை மூடுவதால் தனிநபர்களை நாம் வேறுபடுத்தி பார்க்க முடியாது. ஒரு மருத்துவமனையில் முழு கொரோனா பாதுகாப்பு உடையை அணிந்திருப்பது மருத்துவரா அல்லது தாதியா என்றுகூட சொல்வது கடினம். எனவே இந்த நிலைமை பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும். சமீபத்தில், கொரோனா காலத்தில் நோயாளிகளை விட தங்க சங்கிலிகள் மற்றும் பணப்பை திருட்டுக்கள் அதிகரித்துள்ளன. முகத்தின் பாதியை மறைக்க மாஸ்க்கை அணிந்து, மற்றொரு கவசத்தை அணிந்த பிறகு, நமக்கு நன்கு தெரிந்த ஒருவரைக்கூட அடையாளம் காண முன்பை விட அதிக நேரம் எடுக்கும். இது பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு சமீப காலமாக ஏற்பட்டுள்ள சவாலாகும்.

 

முகத்தில் காற்று வீசுதல்

நோயின் தீவிரத்தை கருத்திற்கொண்டால் மூச்சு கொஞ்சம் எடுக்க கஷ்டமாக இருப்பது அவ்வளவு ஒரு பெரிய பிரச்சினை அல்ல. ஆனால் சிலருக்கு மூச்சு விடும் போது மீண்டும் வரும் CO2 மற்றும் முகமூடியில் உள்ள சில கெமிக்கல்ஸ் முகத்தை மோசமாக பாதிக்கும். சிலருக்கு, முகமூடி அணிவதால் முகம் சிவத்தல், வியர்வை, நிறமாற்றம் கூட ஏற்படலாம். முகத்தை விட்டு மாஸ்க்கை கீழே இறக்கும் பழக்கம் நமக்கு இருந்தாலும் எமது வாய், முகம், மூக்கு போன்றவை நாம் பழகிய அளவுக்கு காற்றை பெறுவதில்லை என்று இன்னும் உணர்கிறோம்.

 

காதலர்களின் பிரச்சினைகள்

பொதுவாக நிறைய மாஸ்க் போட்ட காதலன் மற்றும் காதலியை அடையாளம் காண்பது மற்ற பார்ட்னருக்கு கடினமாக இருக்காது. ஏனென்றால் பழக்கமான இரண்டு கண்கள் காதலர்களின் முதன்மையான ஈர்ப்புகளில் ஒன்றாகும். ஆனால் முகமூடி மற்றும் கொவிட் விதிமுறைகள் காரணமாக, பேருந்திலும் பொது இடங்களிலும் காதலிக்கும் தம்பதிகள் விலகி இருக்க வேண்டியிருக்கிறது. ரயில் மற்றும் பஸ்ஸில் உட்கார்ந்து ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருந்த தம்பதிகள் இப்போது அரிதாகவே காணப்படுகிறார்கள். முகமூடி நெருக்கத்தை தொந்தரவு செய்யவில்லை என்றாலும் வாய், மூச்சு மற்றும் கண்களை அருகருகில் நெருக்கமாக வைத்திருந்த காதலர்கள் இப்போது டூ லேயர் மாஸ்க் போட்டு தொலைவில் இருப்பதாக அவர்கள் பொதுவாக உணரலாம்.

 

சந்திக்கு சந்தி மலிவான மாஸ்க்

கொரோனா ஆரம்பத்தில் விலையுயர்ந்த பொருளாக மாஸ்க் காணப்பட்டது. 2020 மார்ச் மாதமளவில் இலங்கை மருந்தகங்களில் ஒரு சர்ஜிக்கல் மாஸ்க் 100 ரூபாய்க்கு மேல் விற்பனையானது ஆனால் இப்போது 100 ரூபாய்க்கு 5-6 மாஸ்க் வாங்கக்கூடிய நிலையை எட்டியுள்ளது. ஏப்ரல் 2020இல் பெண்களுக்கு ஏற்ற மாஸ்க் டிசைன் டிசைனாக வந்தது. முகத்தை மிகவும் மென்மையாகவும் அழகாகவும் மாற்றும் என்று பல்வேறு வகையான மாஸ்க்குகள் வந்தன. ஆனால் இலங்கையில் மீண்டும் கொரோனா வருகையுடன் பெண்கள்கூட சர்ஜிக்கல் மற்றும் கே.என் 95 மாஸ்களை பயன்படுத்த முற்பட்டனர். இது பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றது. பேமண்ட்டுகளில் உள்ளாடைகள், பொம்மைகள் மற்றும் வீட்டு கேஜெட்டுகளுக்காக விற்ற பல தட்டுக்களில் கூட பலவிதமான சர்ஜிக்கல் மற்றும் கே.என் 95 மாஸ்க்குகள் விற்பனையாகின்றன.