எமக்கு உண்மையில் எத்தனை மொழிகள் தெரியும்? இந்த கட்டுரையைப் படிப்பதற்கு உங்களுக்கு தமிழ் தெரிந்திருக்கிறது. அதுபோல ஏனைய மொழிகளை பற்றிய உங்கள் கருத்து என்ன? லைஃபீ தமிழின் நோக்கம் என்னவென்றால் உலகில் பரந்து விரிந்து காணப்படும் பலவற்றையும் எமக்கு தெரிந்த தமிழ் மொழியில் தமிழ் வாசகர்களை சென்றடைய வேண்டும் என்பதாகும். அதேபோல ஆங்கிலமும் எமது நாட்டில் அதிகம் பேசப்படும் மொழிகளில் ஒன்றாகும். பெரிதாக பந்தி பந்தியாக ஆங்கில வசனங்களை எமது நாட்டில் பேசாவிட்டாலும் அன்றாட வாழ்வில் ஒரு சில வார்த்தைகளை பிரயோகிக்கும் நிலையில் நாம் உள்ளோம். இலங்கையில் அதிகமான மக்கள் பேசும் மொழியாக சிங்களம் உள்ளது. எமக்கு எந்தளவுக்கு சிங்களம் தெரியும்? இலங்கையில் இருக்கும் பெரும்பாலான தமிழ் பேசும் மக்களுக்கு சிங்களம் இன்றும் தட்டுத்தடுமாறுகிறது. இவை ஒவ்வொன்றும் ஒரு மொழி மட்டுமே. ஒரு மொழியைக் கற்க பயப்பட ஒன்றுமில்லை. எனவே நாம் ஆங்கிலம், ஜப்பானிஸ், இத்தாலியன், ஸ்பானிஷ், பிரஞ்சு அல்லது ஜெர்மன் மொழியைக் கற்றுக்கொள்ள முடியாதா? நீங்கள் ஒரு வகுப்பிற்குச் சென்று அந்த மொழிகளைக் கற்றுக்கொள்ளலாம். அல்லது ஒன்லைனில் அனைத்தையும் கற்றுக்கொள்ளலாம். அதற்கான வழிகள் சிலவற்றை இன்று கொண்டுவந்துள்ளோம்.
Englishclub.com
எமது பட்டியலில் உள்ள மற்ற அனைத்து வலைத்தள சேவைகள் மற்றும் அப்ஸ்களிலும் வெவ்வேறு மொழிகளைக் கற்பிக்கப் பயன்படுத்தப்படும் அடிப்படை மொழி ஆங்கிலம். கடினமான ஆங்கிலம் அல்ல, மிகவும் எளிமையான ஆங்கிலம். எனவே நீங்கள் ஆங்கிலம் கற்க விரும்பினால் englishclub.com தான் அதற்கு சரியான வலைத்தளம். இது ஒரு சிறிய குழந்தை கூட பயன்படுத்தக்கூடிய மிக எளிய முறையில் உள்ளது. இந்த வலைத்தளமானது ஆங்கில மொழியின் வரலாறு முதல் குழந்தைகளுக்கான ஆங்கில பாடங்கள், TOFEL அல்லது EILTS பரீட்சைகள் முதல் ஆங்கிலம் வரை பயனுள்ள வளங்களைக் கொண்டுள்ளது. உங்களுக்கு எவ்வகையான கல்வி அவசியமோ அதன்படி தெரிவுசெய்து கற்றுக்கொள்ளுங்கள்.
Duolingo
அண்ட்ரொய்ட் பயனர்களிடையே இதுபோன்ற மொழிகளைக் கற்க மிகவும் பிரபலமான அப்ளிகேஷன்களில் ஒன்றாக டியோலிங்கோ காணப்படுகின்றது. இதற்கும் ஒரு வலைத்தளம் உள்ளது. நீங்கள் விரும்பினால் முதலில் டியோலிங்கோவுடன் ஆங்கிலம் கற்கலாம். இதில் ஏழு படிநிலைகள் உள்ளன. டியோலிங்கோ இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளைக் கற்க உதவுகிறது. ஒரு மொழியைக் கற்பிப்பது மட்டுமல்லாமல் கற்றுக்கொள்வதற்கான உந்துதலையும் வழங்குகின்றது. ஏனென்றால், டியோலிங்கோவில் மொழியைக் கற்றுக்கொள்வது ஒரு விளையாட்டை விளையாடுவதை போன்றது. சவால்களை நிறைவுசெய்து முன்னேற தூண்டப்படுவோம் அத்தோடு எளிமையானது. ஆனால் டியோலிங்கோவில் இலக்கணத்தைக் கற்றுக்கொள்வதைத் தவிர ஒரு மொழியைக் கற்றுக்கொள்வதற்கு பெரிதாக முன்னுரிமை வழங்கப்படுவதில்லை.
Memrise
இது மொழி கற்பித்தல் கருவியாகும். இதனை ஒரு வலைத்தளமாகவும் Android அல்லது iOS அப்ளிகேஷனாகவும் பெற்றுக்கொள்ளலாம். ஒரு மொழியைக் கற்பிக்கப் பயன்படுத்தப்படும் முக்கிய முறையாக விளையாட்டு அடிப்படையிலான நுட்பம் காணப்படுகின்றது. மெமரைஸ் முதலில் உங்களுக்கு மொழியில் ஏதாவது கற்பிக்கிறது மற்றும் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரியப்படுத்த பல சவால்களை தருகின்றது. இலவச எடிஷனும் உள்ளது மற்றும் கட்டணம் கட்டி விளையாடும் புரோ எடிஷனும் உள்ளது. கேம்களின் புரோ எடிஷனில் இருந்து கற்றுக்கொள்ள இன்னும் பல பாடங்கள் உள்ளன. மேலும், புரோ பதிப்பில் உள்ள இந்த மொழி சார்ந்த கற்கைகளை இணையம் இல்லாமல் பயன்படுத்த டவுன்லோட் செய்யலாம். ப்ரோ வெர்ஷன் இல்லையென்றாலும் நல்ல இலவச பதிப்பைக் கொண்ட ஒருவருக்கு மொழியைக் கற்றுக்கொள்ள முடியும். மொழிகளையும் ஏனைய விடயங்களையும் கற்க உண்மையில் இதில் பல கற்கைகள் உள்ளன. மற்றும் இருநூறுக்கும் மேற்பட்ட மொழி சார்ந்த கற்கைகள் உள்ளன.
Polyglot Club
மொழியைப் பேச நாம் கற்றுக் கொள்ளக்கூடிய சிறந்த வழி, அந்த மொழியை அறிந்த ஒருவருடன் பேசுவதாகும். நீங்கள் ஆங்கிலம் பேசாவிட்டாலும் ஆங்கில மொழி பயன்பாட்டில் உள்ள அலுவலகத்தில் பணிபுரியும் போது சிறிது காலத்தில் நீங்களும் ஆங்கிலம் பேசுவீர்கள். ஆனால் அத்தகைய மொழியை அறிந்த மற்றும் அதை எங்களுடன் பேச விரும்பும் ஒருவரைக் கண்டுபிடிப்பது கடினம். அதற்கு பாலிக்லோட் கிளப் உதவி செய்யும். இது உண்மையில் மொழி கற்கைக்கான இடம் மாத்திரம் அல்ல. அதற்கும் மேலாக, பேஸ்புக் போல ஒரு சமூக ஊடக வலைத்தளம். நீங்கள் முற்றிலும் இலவசமாக இதனை பதிவுசெய்யலாம். இப்போது நாம் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களுடன் பேசலாம். அங்கும் இங்கும் நாம் கற்றுக்கொண்ட அடிப்படையில் ஒரு மொழியைப் பயிற்சி செய்யலாம். முதற்கட்டமாக செல்லும்போது சில சிக்கல்களை பெற்றுக்கொள்ளலாம். எனவே, ஒரு மொழியை கற்க மேற்கூறிய சேவையைப் பயன்படுத்துவது சிறந்தது. பின்னர் பாலிக்லோட் கிளப்பை ஒரு பயிற்சி களமாகப் பயன்படுத்துங்கள். இது 150 நாடுகளில் 600,000க்கும் மேற்பட்ட ரெஜிஸ்டர் செய்யப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. அதாவது சுமார் 150 மொழிகளில் பாலிக்லோட் கிளப்பை அணுகலாம்.
Anki
உண்மையில், நாம் ஒரு மொழியைக் கற்கும்போது ஒன்லைன் கருவியொன்றை பயன்படுத்தத் தேவையில்லை. இதற்கு சிறந்த உதாரணம் anki. இது அண்ட்ராய்ட், iOS, லினக்ஸ், விண்டோஸ் மற்றும் இன்டர்நெட்டிலிருந்து நேரடியாகவும் பயன்படுத்தக்கூடிய அப்ளிகேஷனாகும். அதில் உள்ள மொழிகளுக்கு மேலதிகமாக மனப்பாடம் செய்யவும் கற்பிக்கப்படுகின்றன. ஒரு மொழியைக் கற்றுக்கொள்வதும் இதில் முக்கியம். தற்போது அரபு, சீன, ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மன், ஜப்பானிய, ஹீப்ரு, கொரிய, ரஷ்ய மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் மட்டுமே கிடைக்கிறது. மற்றொரு விடயம் என்னவென்றால் ஒரு மொழியை மட்டும் கற்றுக்கொள்ள அன்கியை மட்டும் பயன்படுத்துவது போதாது. ஏனென்றால், பெரும்பாலான நேரங்களில் அன்கி ஒரு மொழியில் சொல் தொகுப்புகளைக் கற்பிப்பதோடு அவற்றை நினைவில் வைக்க உதவுகிறது. எனவே மிகச் சிறந்த விடயம் என்னவென்றால், ஏனைய மொழிகளைக் கற்க ஒன்லைன் சேவையுடன் ஒரு கருவியாக அங்கியைப் பயன்படுத்துவதாகும்.
Clozemaster
இது Android மற்றும் iOS க்கான அப்ளிகேஷனாக அல்லது வலைத்தள சேவையாக பயன்படுத்தப்படலாம். இதன் இலவச பதிப்பிலும் குறிப்பிடத்தக்க மதிப்பு உள்ளது. எனவே இதை எமது பட்டியலிலும் சேர்க்கின்றோம். க்ளோஸ்மாஸ்டரை பற்றி முதலில் சொல்ல வேண்டியது என்னவென்றால் ஒரு மொழியை ஆரம்பத்திலிருந்து கற்க இது பொருந்தாது. ஏனெனில், இதில் உள்ள கருவிகள் ஒரு குறிப்பிட்ட மொழியைப் பற்றிய பொதுவான அறிவைக் கொண்ட ஒருவருக்கே பொருத்தமாக இருக்கும். எனவே மேலே குறிப்பிட்ட பிற மொழிகளைக் கற்க ஒரு கருவியைப் பயன்படுத்தும் போது க்ளோஸ்மாஸ்டரை பயன்படுத்துவது மிகச் சிறந்த விடயம். இது 100இற்கும் மேற்பட்ட மொழிகளைக் கற்கும் திறனை கொண்டுள்ளது.