வயது அடிப்படையில் தாய்மைக்கு தயாராவது எப்படி?

 

தாய்மை குறித்த விழிப்புணர்வு,  20 வயதிற்கு மேல் எமது உடல் மாற்றமடையும் விதம், மனரீதியாக தாய்மையை எவ்வாறு எதிர்கொள்வது போன்ற விடயங்கள் தொடர்பாக அறிந்துகொள்வோம்.  தாய்மையடைவதற்கு உடல் வலிமை மட்டும் போதாது. கர்ப்பம் குறித்த விழிப்புணர்வு, உடலின் மாற்றம், மனரீதியாக தாய்மையை எதிர்கொள்ளும் விதம், ஆரோக்கியமான உணவுப் பழக்கம், அன்பான குடும்ப சூழல் என கர்ப்ப காலம் இனிமையாகவும்,  ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்கவும் இந்த அம்சங்களெல்லாம் அவசியமாகின்றது. இந்த தகவல்கள் மற்றும் ஆலோசனைகள் உங்களுக்கு உதவுமென நம்புகின்றோம்.

 

உங்கள் உடல் 2024 வயதில் எவ்வாறு இருக்கும் ?

 

இந்த காலகட்டங்களில் உடல் சீராக இருக்கும். மாதவிடாய் சுழற்சியில் பாரிய பிரச்சினைகள் ஏற்படாது. கரு உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். இந்த வயது வரம்பிற்குட்பட்டவர்கள் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 20 % கருத்தரிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் கர்ப்ப காலங்களில் உயர் இரத்த அழுத்தமும் கர்ப்பகால நீரிழிவு 20 – 24 வயதுள்ளவர்களுக்கு வருவது குறைவு.  பெரும்பாலும் இந்த வயதில் இருப்பவர்கள் குழந்தை பெற்றுக் கொள்வதற்கான கால அவகாசம் இன்னும் அதிகமாக இருக்கின்றதென எண்ணுகின்றனர். குழந்தை பிறந்த பிறகு தங்களுடைய வெளித்தோற்றத்தை பற்றி கவலை கொள்வார்கள். இந்த வயதில் பெண்கள் திருமணம், வேலை இதற்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை விட தாய்மை அடைவதற்கு குறைவாகவே கொடுக்கிறார்கள்.  இந்த காலங்களில் கருச்சிதைவு அடைவதற்கு வெறும் 9.5 % வாய்ப்புகளே உள்ளதென மருத்துவர்கள் கூறுகின்றனர். ஒப்பீட்டளவில் இந்த காலகட்டங்களில் கருமுட்டைகள் வளமாக இருப்பதால் குழந்தைகளுக்கு ஏற்படும் டவுண் சிண்ட்ரோம் எனப்படும் கிரோமோசோம் குறைபாட்டால் ஏற்படும் பிரச்சினைகள் வருவது மிகக் குறைவு. மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை புற்று நோய் வரும் வாய்ப்பும் குறைவாக இருக்கும்.

 

வயது 25 – 30

இந்த வயதுக்கு உட்பட்டவர்கள் ஆரோக்கியமான உணவும், சரியான உடற்பயிற்சியும் செய்தால் பிரசவத்தை எளிமையாக எதிர்கொள்ளலாம். மேலும் இதனால் பிரசவத்திற்கு பின்னும் உடலை பழைய மாதிரி திரும்ப கொண்டு வர முடியும். ஆனால் 30 வயதிற்கு பிறகு கருமுட்டைகளின் சக்தி கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும். உடலில் படிபடியாகவே இதன் மாற்றங்கள் நடைபெறும். குழந்தை பெறுவதில் பிரச்சினை ஏற்படும்போது செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை வெற்றிகரமாக முடிவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

 

30 – 34  வயது

34 வயது காலகட்டத்தில் கருச்சிதைவுக்கான வாய்ப்பு 10 % ஆக உள்ளது. மேலும் உங்களுடைய வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்களை கையாள்வதற்கான பக்குவம் இருக்கும். தாய்மையை சிறிது அனுபவத்தோடு எதிர்கொள்வீர்கள். பிரசவத்தின்போதும் குழந்தை வளர்ப்பிலும் மனதளவில் தெளிவுடன் செயற்படுவார்கள்.   30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் இடம்பெறுவதற்கான வாய்ப்பு 20-24 வயது உடையவர்களிவிட இரண்டு மடங்கு அதிகம் என்கின்றனர். 30 வயதிற்கு மேல் பிரசவத்தின்போது கருச்சிதைவு ஏற்பட 11.7 % வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்த வயது பெண்களுக்கு பிறக்கும் 952 குழந்தைகளில் 1 குழந்தை டவுன் சின்றோமால் பாதிப்படைகிறது.

 

35 வயதிற்கு மேல்

இந்த காலகட்டத்தில் கருமுட்டைகளின் சக்தி பெருமளவு குறைந்துவிடும். உடலிலும் சக்தி இழக்கின்றனர். மேலும் 10%  – 20% வரை உயர் இரத்த அழுத்தம் வர வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதன் காரணமாக வயிற்றிலிருக்கும் கருவின் மீது அழுத்தம் ஏற்பட்டு குழந்தை பெற்றுக்கொள்வதில் பிரச்சினைகள் உருவாகின்றன. இதனால் கருவை காப்பாற்ற வேறு வழியின்றி அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது கட்டாயமாகிறது. மேலும் 35 வயதிற்கு மேல் உள்ளவர்கள் கர்ப்பகால நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுவதும் அதிகமாகிறது. 35 வயதிற்கு மேல் கருச்சிதைவு ஏற்பட 18% வாய்ப்புகள் உள்ளது.

 

35- 40 வயது

35 – 40 வயதுள்ளவர்களுக்கு ஹோர்மோன் தூண்டுதலால் ஒன்றுக்கு மேற்பட்ட கருக்கள் உருவாக அதிக வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் இரட்டை குழந்தைகள்,  மூவர் மற்றும் அதற்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறக்க வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். 35 வயதை கடந்தவர்கள் கருத்தரிக்கும்போது தாயின் உடல் நலம், கருவின் வளர்ச்சி குறித்த மருத்துவ சோதனை செய்து பார்ப்பது அவசியம். அதன் பின்னர் அதற்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டால் தாய் சேய் இருவருக்கும் நல்லது.

 

வயது அதிகமாகும் போது வாழ்க்கையில் வசதி,  அனுபவம் பெருகுவது போல் உடலில் மாற்றங்களும், நோய்களும் வரத்தான் செய்யும். சரியான காரணம் இல்லாமல் தாய்மையை தள்ளிப்போடுவது எல்லா நேரங்களிலும் நன்மையாக அமையும் என்று சொல்ல முடியாது. எல்லா வயதிலும் உடல் மன ஆரோக்கியம்,  விழிப்புணர்வு,  சரியான ஆலோசனை என்பன எல்லா பெண்களுக்கும் அவசியம் தேவைப்படும்.