காதல் உறவு என்பது எந்நேரமும் புதுப்பாவை போல பளபளவென்று இருக்குமென்று நினைத்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் அது தவறாகும். ஏனென்றால் அதுவும் ஒரு நாள் புளித்து போகக்கூடும். பொதுவாக நாம் ஒருவர்மீது காதல் வசப்பட்டால் அல்லது ஈர்க்கப்பட்டால் பெரும்பாலும் எமது காதல் ஏற்றுக்கொள்ளப்படும் என்றுதான் எதிர்பார்ப்போம். ஆனால் அது எந்நேரமும் சாத்தியமாகாது என்பதையும் நாம் அறிந்திருக்க வேண்டும். ஒருவரால் நிராகரிக்கப்படுவது பெரும்பாலும் எம்மை ஏமாற்றத்திற்குள் தள்ளிவிடக்கூடியதுதான். எப்போது எமது கவலைகள் மற்றும் பிரச்சினைகள் தற்காலிகமானது என்று அறிந்துகொள்கிறீர்களோ அப்போதிருந்து உங்கள் வாழ்க்கையை விட்டும் அவற்றை தூக்கி எறிந்துவிடுவது அல்லது அவற்றை ஒதுக்கி வைப்பது இலகுவாகி விடும்.
உங்கள் உணர்வை ஏற்றுக்கொள்ளுங்கள்
உங்கள் நண்பர்களும் குடும்ப உறுப்பினர்களும் உங்களை ஆறுதல்படுத்தி ஊக்குவிக்க முடியும். ஆனால் என்ன நடந்தது என்பதை நீங்கள் தான் சரிபார்க்க வேண்டும். அசௌகரியம், சங்கடம் மற்றும் வெட்கம் உள்ளிட்ட பலவிதமான உணர்ச்சிகளை நீங்கள் சந்திக்க நேரிடும். இந்த உணர்ச்சிகளை கையாள்வதற்கான சிறந்த வழி அவற்றை ஒப்புக்கொள்வதாகும். உண்மையை ஏற்றுக்கொண்டால் நிராகரிப்பை எதிர்கொண்டு பிறகு உங்களை மீட்டி ஈடுபதற்கான முதல் படியை நீங்கள் எடுத்து வைக்க முடியும்.
உங்களை நீங்களே குற்றம் சொல்ல வேண்டாம்
நீங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்பதை நினைவில் கொள்ளவேண்டும். ஒரு ஈர்ப்பு அல்லது காதல் வசப்படுவது இதயத்திலிருந்து வரும் ஒரு இயற்கையான உணர்வு. ஒருவரைப் பற்றி நீங்கள் உணர்வதை தான் நீங்கள் வெளிப்படுத்தினீர்கள் என மனதில் கொள்ளுங்கள். எனவே, நிராகரிக்கப்பட்ட பிறகு உங்கள் உணர்வுகளின் மீது நீங்களே வருத்தம் தெரிவிக்க வேண்டாம். மட்டந்தட்டிக் கொள்ளவும் வேண்டாம். அதற்கு பதிலாக, அதை ஏற்றுக்கொண்டு நேர்மறையான மனதுடன் செல்லுங்கள்.
ஆதரவானவர்களுடன் நேரத்தை செலவிடுங்கள்
உங்களை நிபந்தனையின்றி நேசிக்கும் பல குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் உள்ளனர். அவர்கள் உங்களை கவனித்துக்கொள்கிறார்கள், உங்களை ஒருபோதும் நிராகரிக்க மாட்டார்கள். அத்தகையவர்களுடன் நேரத்தை செலவழிக்கவும். வாழ்க்கையை அவர்களின் கண்ணோட்டத்தில் பார்க்கவும். எப்போதும் உங்களை நேசிக்கும் நபர்களுடன் இருப்பது ஆறுதல் தரக்கூடியது மற்றும் வாழ்க்கைக்கான உந்துதல் ஆகியவற்றையும் அளிக்கும்.
உங்கள் அச்சங்களை மறைக்க வேண்டாம்
ஒருவர் உம்மை நிராகரித்த பிறகு நீங்கள் பயப்படலாம் மற்றும் பாதுகாப்பின்மையாக உணரலாம். வாழ்க்கையில் இதை விட பல ஏமாற்றங்கள் நிராகரிப்புக்கள் இருக்குமோ என்று பயப்பட வேண்டாம். பயம் உங்களுக்கு அழிவுகரமான எண்ணங்களாக வெளிப்படும் வாய்ப்புகள் அதிகம். அதனை முறையாக எதிர்கொண்டு பயப்படத் தேவையில்லை என்று நீங்களே உங்கள் மனதிற்கு சொல்லுங்கள். நீங்கள் நிராகரிக்கப்பட்டாலும் பரவாயில்லை, உங்களுக்காக ஒரு அழகான வாழ்க்கை பின்னால் காத்திருக்கிறது.
இலக்குகளை உருவாக்கவும்
இலக்குகளை நிர்ணயிப்பதன் மூலம் உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் குணங்களைப் பயிற்சி செய்து, அவற்றை நேரத்துடன் மேம்படுத்துங்கள். உதாரணமாக, நீங்கள் சமைப்பதில் திறமையானவர் என்று நினைத்தால், பல்வேறு வகையான இனிப்புகளை செய்து உங்கள் திறமைகளை வெளிப்படுத்துங்கள். உங்கள் திறமைகளை மென்மேலும் வலுப்படுத்துவது இயற்கையான மனவலி நிவாரணியாக செயற்படும் மற்றும் எதிர்மறை உணர்வுகளிலிருந்து உங்களை விலக்கி வைக்கும்.
புதிய பிணைப்புக்களை உருவாக்கவும்
ஒருவரது நிராகரிப்பைக் கையாள்வதற்கான வழிகளில் ஒன்று வேறு பிற இணைப்புகளை உருவாக்குவதாகும். இது உங்கள் கவனத்தை பழைய நினைவுகளில் இருந்து திசை திருப்பும். உள்ளூர் சமூக அமைப்புகள், புத்தகக் கழகங்கள் அல்லது தொண்டு நிறுவனங்களைப் பார்வையிட முயற்சி செய்யலாம் மற்றும் புதிய நண்பர்களையும் அறிமுகமானவர்களையும் உருவாக்கலாம். புதிய நட்பை வளர்ப்பது ஒருவரது நிராகரிப்பை எதிர்கொள்ளும் மற்றும் வலியிலிருந்து உங்கள் மனதை கணிசமாக திசை திருப்பும்.
உங்களை நேசிக்கவும்
சுய இணக்கப்பாடு மிகவும் முக்கியமானது. உங்களை நீங்களே மதிக்கும்போது, நேசிக்கும்போது, நிராகரிப்புக்கு எதிரான விடயங்களை நீங்கள் இலகுவாக கட்டுப்படுத்தலாம். நீங்கள் இதனை சரியாக உணர்ந்தவுடன், உங்கள் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மீண்டும் திரும்பலாம். உங்களிடம் உள்ள பெறுமதியான விடயங்களில் கவனம் செலுத்த முயற்சி செய்யுங்கள். அது உங்கள் குடும்பமாக, செய்யும் தொழிலாக அல்லது வேறு ஏதேனும் நல்ல விடயங்களாக இருக்கலாம். நல்ல விடயங்களை தொடர்ந்து செய்யுங்கள். உங்கள் வாழ்க்கையை மீண்டும் மனதிருப்தியுடன் வாழப்பழகுங்கள்.
“உங்களை நீங்கள் முதலில் மதிக்கவும், நேசிக்கவும், ஏனென்றால் உங்களைப் போன்ற ஒரு நபர் வேறெங்கும் இருக்க முடியாது, மீண்டும் ஒருபோதும் இருக்க மாட்டார்.” – ஓஷோ