புகழ்பெற்ற ஹொலிவுட் நட்சத்திரங்களின் தோல்வியடைந்த திருமணங்கள்

 

சில உறவுகள் வெளியில் பார்க்க பாலும் தேனும் போல தோன்றினாலும் காலப்போக்கில், அந்த உறவுகள் கீரியும் பாம்பும் போல சண்டையும் சச்சரவுகளையும் எந்த நேரமும் எதிர்கொள்ளும். அதுபோல இன்று நாம் பிரபல ஹொலிவுட் நட்சத்திரங்களின் தோல்வியுற்ற திருமணங்களைப் பற்றி பேசப்போகிறோம்.

 

ஆர்லாண்டோ டோ ப்ளூம் மற்றும் மிராண்டா கெர்

மிராண்டா ஒரு பிரபலமான மொடல் அழகி. ‘பைரேட்ஸ் ஒஃப் தி கரீபியன்’ போன்ற திரைப்படங்கள் மூலம் பார்வையாளர்களின் அன்பை வென்ற ஆர்லாண்டோ மிகவும் பிரபலமான நடிகர். 2005 ஆம் ஆண்டில் பிரபல ஹொலிவுட் நடிகையான கிறிஸ்டின் டன்ஸ்டுடனான அவரது உறவு பிரபல கிசுகிசு ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு ஆர்லாண்டோ ப்ளூம் மிராண்டாவை மணந்தார்.ஆனால் அவர்கள் இருவரும் இறுதியில் பிரிந்தனர். அவர் தற்போது கேட்டி பெர்ரி என்ற திறமையான பாடகியுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். மிராண்டா அமெரிக்க தொழிலதிபர் இவான் ஸ்பீகலை 2017 இல் திருமணம் செய்து கொண்டார்.

 

 ஜானி டெப் மற்றும் அம்பர் ஹியர்ட்

ஜானி டெப்பைப் பற்றி தெரியாதவர்கள் யாரும் இல்லை. ‘சார்லி அண்ட் தி சொக்லேட் ஃபேக்டரி’ மற்றும் ‘பைரேட்ஸ் ஒஃப் தி கரீபியன்’ போன்ற படங்கள் உலகைக் கவர்ந்தன. ஆனால் அவரது மூன்று திருமணங்களும் தோல்வியடைந்தன. 1982ஆம் ஆண்டில் லோரி அன்னே என்ற ஒப்பனைக் கலைஞரை மணந்தார். அந்த திருமணம் சில ஆண்டுகளுக்குப் பிறகு உடைந்து போனது. பின்னர் பிரபல நடிகை வினோனா ரைடரை மணந்தார். ஆனால் அதுவும் விவாகரத்தில் முடிந்தது. பின்னர் 2015இல் பிரபல ஹொலிவுட் நடிகையான அம்பர் ஹியர்டை மணந்தார். இந்த திருமணமும் விவாகரத்தில் முடிந்தது. அதே நேரத்தில், அம்பர் ஹியர்ட் மூலம் ஜானி டெப் மீது வீட்டு வன்முறை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடந்து வரும் விசாரணைகள் மற்றும் இன்னல்கள் இன்றும் தலைப்புச் செய்திகளாக இருக்கின்றன.

 

கில்லியன் ஆண்டர்சன் மற்றும் ஜூலியன் ஓசன்

இலங்கையில் பெரும்பாலான மக்கள் கில்லியனை எக்ஸ்-ஃபைல்களில் ஸ்கல்லி என்று சொன்னால் அறிவார்கள். அந்த கதாபாத்திரம் உலக நாடுகளை போலவே எமது நாட்டிலும் மிகவும் பிரபலமானது. சில ஆண்டுகளுக்கு முன்பு, இலங்கையில் உள்ள தனது வீட்டில் ஏற்பட்ட ஒரு பிரச்சினை காரணமாக அவர் பல சிரமங்களை எதிர்கொண்டார். கில்லியன் முதன்முதலில் கனேடிய கலை இயக்குனரான கிளைட் க்ளோட்ஸை மணந்தார். ஆனால் அவர்களது திருமணம் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு முடிவுக்கு வந்தது. அந்த திருமண உறவின் மூலம் அவருக்கு ஒரு மகள் இருக்கிறார். பின்னர் அவர் திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குநருமான ஜூலியன் ஓசனை குறுகிய காலத்திற்கு திருமணம் செய்து கொண்டார். அதுவும் மூன்று ஆண்டுகளில் பிரிந்து விடவே, பின்னர் அவர் தொழிலதிபர் மார்க் கிரிஃபித்ஸுடன் தொடர்பில் இருந்தார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஆனால் இந்த உறவும் துரதிஷ்டவசமாக இப்போது முறிந்துவிட்டது.

 

மடோனா மற்றும் ஷோன் பென்

பிரபல பொப் பாடகர் மடோனாவை அறியாதவர் யாரும் இல்லை எனலாம். 80களில் பொப்பிசை ராணியாக வலம்வந்த அவரது புகழ் இன்றும் அப்படியே உள்ளது. பல தசாப்தங்களுக்கு முன்னர் அவர் பாடிய பாடல்கள் இன்றும் பிரபலமாக உள்ளன. அவர் பிரபலத்தின் உச்சத்தில் இருந்தபோது 1985 இல் ஹொலிவுட் நடிகர் ஷோன் பென்னை மணந்தார். அவர்கள் மிகவும் அன்பான தம்பதியினர் என்றாலும் தவறான புரிதல்கள் மற்றும் சந்தேகங்கள் காரணமாக அவர்களது திருமணம் விரைவில் பிரிந்து போகத் தொடங்கியது. மடோனா மற்றும் ஷோன் பென்னின் விவாகரத்துடன் இந்த சண்டை 1989 இல் முடிவுக்கு வந்தது. மடோனா 2000 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் திரைப்பட இயக்குனரான கை ரிச்சியை மணந்தார். ஆனால் இந்த உறவும் 2008 இல் விவாகரத்தில் முடிந்தது. மடோனாவை மணந்த பிறகு ஷோன் பென் இரண்டு முறை மறுமணம் செய்து கொண்டார்.

 

டொம் குரூஸ் மற்றும் நிக்கோல் கிட்மேன்

மிஷன் இம்பாசிபிள் திரைப்படத் தொடரைப் பார்த்தவர்களுக்கு டொம் குரூஸ் மறக்க கூடிய ஒரு பெயராக இருக்க முடியாது. அவ்வளவுக்கு மிகவும் பிரபலமான ஹொலிவுட் நட்சத்திரம். டொம் குரூஸின் முதல் திருமணம் அமெரிக்க நடிகை மிமி ரோஜர்ஸ். 1987 இல் நடந்த அந்த திருமணம் 1990இல் முறிந்தது. பின்னர் பிரபல நடிகை நிக்கோல் கிட்மேனை சந்தித்தார். ‘டேஸ் ஒஃப் தண்டர்’ படப்பிடிப்பின் போதுதான் இருவரும் நெருக்கமாகிவிட்டனர். அவர்கள் 1990இல் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் இசபெல் மற்றும் கானர் என்ற இரண்டு குழந்தைகளை தத்தெடுத்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக, அவர்கள் 2001இல் பிரிந்தனர். பின்னர் இருவருக்கும் இடையிலான கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டதாக அவர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்தனர். இருப்பினும், நிக்கோலை மணந்த பிறகு டொம் குரூஸ் மற்றொரு இளம் நடிகை கேத்தி ஹோம்ஸை மணந்தார். ஆனால் அந்த திருமணமும் விவாகரத்தில் முடிந்தது.