சோம்பேறிகள் தவறிழைப்பார்கள், சோம்பேறித்தனம் முன்னேற்றத்தைத் தடுக்கிறது போன்ற விடயங்களை பொதுவாக சிறு வயதிலிருந்தே அறிந்திருப்போம். நாங்கள் சிறியவர்களாக இருக்கும்போது சோம்பேறிகளாக இருப்பதில்லை. எப்போதும் அங்கும் இங்கும் ஓடுவதும் ஆடுவதுமாக துள்ளிக்குதித்த வண்ணமே இருந்திப்போம். ஆனால் நாம் வயதாகும்போது எவ்வளவு அதிகமாக உழைக்கின்றோமோ, அவ்வளவு பொறுப்புகளும் எமக்கு இருப்பதுண்டு. அந்த உழைப்பும் பொறுப்பும் எம்மை ஓரளவிற்கு மேல் சோம்பேறிகளாக்குகின்றது. அதேபோல அலட்சியம் என்பதும் ஒரு மோசமான விடயமல்ல. ஆனால் வாழ்க்கையின் பெரும்பகுதியை அலட்சியத்துடன் கழித்தால் அது தவிர்க்க முடியாமல் வாழ்க்கையில் ஒரு பிரச்சினையாக மாறும்.
கல்வி
சரியான முறையில் இடைநிலை கல்வியையும் உயர்நிலை கல்வியையும் நாம் முடிக்க முடியாமல் போவதற்கு பல காரணங்கள் உள்ளன. வசதிகள் மற்றும் திறன் பற்றாக்குறை, ஏனைய விடயங்களிலிருந்து கவனம் சிதறல், கல்விக்கான திறமை போதாமை ஆகியவை இதற்கு காரணமாக அமையலாம். மேலும், சோம்பேறித்தனமும் எமது கல்வியை பெரிதும் பாதிக்கும் ஒன்றாகும். சில சமயங்களில் கல்வியில் போதியளவு திறன் இல்லாதவர்கள்கூட கடினமாக உழைத்து நல்ல பலன்களைப் பெறுவார்கள். ஆனால் சோம்பேறியான ஒருவருக்கு கற்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்தாலும் அவரது அந்த சோம்பேறித்தனத்தால் அந்த தகுதியை இழந்து விடுவார். ஆனால் இதன் விளைவுகள் அந்த நேரத்தில் தெரியாவிட்டாலும் பிற்காலத்தில் தொழில், அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளின் போது இதன் விளைவுகள் தெரியும்.
வேலையில் நிரந்தரத்தன்மை
நாம் அடிக்கடி முகங்கொடுக்கும் பிரச்சினையில் இதுவும் ஒன்றாகும். இந்த வகை நபர்களுக்கு இரண்டு நாட்களில் செய்யக்கூடிய ஒரு வேலை வழங்கப்படும் போது, பல வாரங்களுக்கு அதை இழுத்துச் செல்வார்கள். இதுபோன்ற நபர்கள் மாத சம்பளத்தைப் பெறுவதற்கு மட்டுமே அந்த வேலையை செய்வார்கள். அத்தோடு வெளியில் எவ்வாறு முன்னேறுவது, எவ்வாறு வேலையை மேம்படுத்துவது என்பது குறித்தும் சிறிதும் கவனத்தை திருப்ப மாட்டார்கள். இவர்களை விட நல்ல முன்னேற்றத்துடன் வேலை செய்யும் நபர்களின் வேலையை பார்த்து பொறாமைப்பட்டு அவர்களுக்கு குழி தோண்டுவதிலேயே இவர்களது கவனம் இருக்கும்.
இதுபோல் சோம்பேறியாக வேலை செய்பவர்கள் அவர்களது தொழிலின் ஸ்திரத்தன்மையையும் முன்னேற்றத்தையும் இழக்கின்றனர்.
20 வயதுகளில் இருக்கவேண்டிய உற்சாகம்
சோம்பேறித்தனத்தால் உண்மையில் உங்களது 20 வயது காலத்தை வீணாக கழித்தீர்களா? அப்படியானால், அது மீண்டும் வராது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். அதாவது பலருக்கு, 20 என்பது வாழ்வின் ஒரு பெரிய இடைவெளியும் சந்தோஷமும் இருக்கக்கூடிய காலம். பெரும் பொறுப்புக்கள் அற்ற காலம், சம்பாதிக்க வெளியிறங்கக்கூடிய காலம். நிறைய விடயங்களை அனுபவிக்கக்கூடிய காலம். சிலருக்கு 20 வயதுக்கு இடைப்பட்ட காலம் என்பது கடுமையான பொறுப்புகள் இருக்கக்கூடிய காலம். ஆனால் பொதுவாக 20 வயது என்றாலே வாழ்க்கையை மிகவும் வேடிக்கையாக கழிக்கக்கூடிய காலம். அந்த நேரத்தில், நண்பர்களுடன் ட்ரிப் செல்வதும் வாழ்வை முழு சந்தோஷமாகவும் ஏதாவது புதிதாக கற்றுக் கொள்வதற்கும், ஒரு நல்ல வாழ்க்கைக்கு அடித்தளம் அமைப்பதற்கும் ஏற்ற நல்லதொரு பருவம் என்றே சொல்ல வேண்டும். 20 வயதுக்கிடைப்பட்ட காலத்தை வீணாக கழிக்கிறீர்கள் என்றால், அதன் விளைவுகள் உங்கள் 30, 40 வயதுகளிலேயே தெரியும்.
நண்பர்கள்
எமது வாழ்வில் எத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள்? பேஸ்புக்கில் உள்ள நண்பர்களைப் பற்றியதல்ல. உண்மையான நண்பர்களைப் பற்றியே கூறுகின்றோம். சிலர் பேஸ்புக்கில் தான் தனக்கு உண்மையான நண்பர்கள் இருப்பதாக கூறுகிறார்கள். நாம் ஏதாவது போஸ்ட் போடும் போது எத்தனை பேர் அதற்கு லைக்ஸ் கமெண்ட்ஸ் போடுகிறார்கள் என்றெல்லாம் கூறுவதும் உண்டு. இதுபோன்ற பேஸ்புக் போஸ்டிற்கு அநேகமாக எமது மக்களின் இயல்பான உதவி செய்யும் இயல்பு இதற்கு காரணமாக இருக்கலாம். ஆனால் அது எதுவாக இருந்தாலும், உண்மையான நண்பர்களின் அளவை பேஸ்புக்கால் அளவிட முடியாது. உங்களுக்கு இப்போதைய சைபர் உலகில் வெளி உலக நண்பர்களை விட இன்டர்நெட் நண்பர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தால் அதற்குக் காரணம் வெளி உலகத்தை கையாள்வதில் உங்களுக்கு இருக்கும் சோம்பேறித்தனமாகும்.
உடற்பயிற்சி
இதற்கு வேறு காரணங்கள் எதுவும் இல்லை. சோம்பேறித்தனம் காரணமாகவே மக்கள் உடற்பயிற்சி செய்ய பின்வாங்குகிறார்கள். ஆனால் பலவிதமான நோய்களாக அது வரும்போதே சோம்பலின் விளைவுகள் புரியும். உண்மையில், எம்மில் பெரும்பாலானோருக்கு இந்த நாட்களில் சோர்வை தரும் தொழில் இருப்பதில்லை. அத்தோடு எம்மில் பெரும்பாலானோருக்கு நல்ல உணவுப் பழக்கமும் வாழ்க்கை முறையும் இல்லை. அத்தகைய நிலை இருக்கும்போது உடற்பயிற்சி என்பது அவசியம். தினமும் நடைப்பயிற்சி செல்வதையோ அல்லது ஜிம்மிற்கு செல்வதையோ தவறவிடுவோருக்கு, சோம்பலின் விளைவுகள் நோயையும், கட்டுப்படுத்த முடியாத ஒரு உடலையும் கொண்டு வரலாம்.
வீட்டில் உள்ளவர்கள்
குறிப்பாக இப்போதெல்லாம் நாம் வீட்டில் உள்ளவர்களுடன் குறைந்தளவு நேரத்தையே செலவிடுகிறோம். இதற்கு காரணம் என்னவென்றால், நாம் கவனம் செலுத்த நிறைய விடயங்கள் உள்ளன. உதாரணமாக, இப்போதெல்லாம் பலர் தமது அறையிலிருந்துகூட வெளியே வராமல் வீட்டில் இருக்கும்போது லேப்டப் அல்லது மொபைலை ஏந்திய வண்ணம் வைத்திருக்கிறார்கள்? இதற்கு இன்னொரு காரணம் சோம்பேறித்தனம். இது குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் நேரத்தை செலவிடுவதை குறைக்கும். நேரம் காலம் சொல்ல முடியாத நேரத்தில் நமக்கு பிடித்த நம் உள்ளத்திற்கு நெருங்கிய ஒருவர் நம்மை விட்டு பிரிந்து செல்லக்கூடும் என்பதே இதிலுள்ள மோசமான விடயமாகும். யாருக்கும் இந்த பூமி நிரந்தரம் இல்லை. நாங்கள் சோம்பேறிகளாக இருந்தால் எம்முடைய அன்புக்குரியவர்களும் எதிர்பாராத நேரத்தில் எம்மை விட்டு பிரிந்து செல்லலாம். இருக்கும் போது அருமை தெரியாது. இறந்தபின் கண்ணீர் வடித்தும் பயனில்லை.