உங்கள் வீட்டை அழகாக மாற்ற வேண்டுமா?

 

சொந்த வீடுகளில் வசிப்பதையே அனைவரும் மிகவும் வசதியாக உணர்கிறார்கள். நாள் முழுதும் எங்கு அலைந்தாலும், வீட்டிற்குச் செல்வதையே நாம் விரும்புகின்றோம். அங்குதான் நாம் நிம்மதியாக இருக்க முடியும். அதுவே வசிக்கும் வீடு நன்றாக அலங்கரிக்கப்பட்டு அழகாக இருக்கும்போது, அது வீட்டிலுள்ளவர்களுக்கு ஒரு சிறந்த உணர்வை தருகிறது. ஒரு அழகான வீடு சிறந்த மனநிலையை ஏற்படுத்தவதோடு வீட்டில் வசிப்பவர்களுக்கு இனிமையான உணர்வைத் தரும். உங்கள் வீட்டை அலங்கரிக்கும்போது எப்போதும் முதலில் திட்டமிடுங்கள். பெறுபேறு எப்படி இருக்க வேண்டுமென உங்கள் மனதில் திட்டமிட்டு கற்பனை செய்து பாருங்கள். அதற்கான சில உதவிக்குறிப்புகளை இன்று உங்களுக்குத் தருகின்றோம்.

 

நிறத்தை தேர்ந்தெடுத்தல்

உங்கள் வீட்டை அலங்கரிக்கும்போது அல்லது நிர்மாணிக்கும்போது சுவர்களுக்கு வர்ணங்களை தேர்ந்தெடுப்பது முக்கியமான விடயமாகும். ஒரு வீட்டில், சுவரின் நிறம் முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் உங்கள் மனநிலையையும் உணர்வுகளையும் பாதிக்கின்றது. கடையில் அது எப்படி இருக்கிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு வண்ணப்பூச்சு வாங்க வேண்டாம். ஏனெனில் அது நிச்சயமாக வீட்டில் பூசிய பின்னர் வித்தியாசமாக இருக்கும். உங்கள் சுவருக்கு வண்ணங்களைத் தேர்ந்தெடுக்கும்போது பின்வரும் உதவிக்குறிப்புகளை மனதிற்கொள்ளுங்கள். முழு அறையினதும் அடிப்படையாக நீங்கள் ஒரு பிரகாசமான வண்ணத்தைப் பயன்படுத்த வேண்டும். ஒரு நடுத்தர நிறத்தை மிதமாக பயன்படுத்த வேண்டும். மற்றும் ஒரு அறையை முன்னிலைப்படுத்த வேண்டுமானால் இருண்ட வண்ணங்களை பயன்படுத்த வேண்டும்.

 

வரவேற்பறையை அலங்கரிப்பது எப்படி?

 

விருந்தினர் ஒருவர் வீட்டிற்குள் நுழையும்போது அவரது முதல் பார்வை வரவேற்பறையில்தான் இருக்கும். வரவேற்பறையானது பார்ப்பவர்களுக்கு உங்கள் மீதான ஒரு நல்ல எண்ணத்தை உருவாக்க வேண்டும். மேலும் வரவேற்பறையே உரிமையாளர்களின் ஆளுமையை பிரதிபலிக்கிறது. நீங்கள் முறையான மற்றும் நேர்த்தியான அல்லது லேசான இதயமுள்ளவராக இருக்கின்றீர்களா என்பதை அதுவே சொல்கிறது.

உங்கள் டிவியை வரவேற்பறையில் வைத்திருந்தால், டிவியைச் சுற்றி இருக்கைகளை ஏற்பாடு செய்திருக்க வேண்டும். உங்கள் வரவேற்பறையில் சோபாவை வைத்திருந்தால், அதனோடு ஒருசில தளபாடங்களை வைத்திருப்பது நல்லது. அத்தோடு அவற்றை தெரிவுசெய்யும் போதும் கவனமாகவும் அறையின் அளவையும் சோபாவின் அளவையும் நினைவில் கொள்ளுங்கள்.  வரவேற்பறைக்கு மேலும் அழகு சேர்க்கக்கூடியதாக கம்பளம் அல்லது கார்பட் காணப்படுகின்றது. ஒரு கம்பளி உடனடியாக அறையின் தோற்றத்தை கவர்ச்சியாக மாற்றும். சதுர அல்லது செவ்வக வடிவில் பொதுவான வடிவங்களில் காணப்படும் விரிப்புகளை விட, ஒரு வட்ட வடிவ கம்பளியை விரிப்பது நல்லது. ஒரு வட்டவடிவ கம்பளி தனித்துவமான மற்றும் ஸ்டைலான தோற்றத்தை அளிக்கிறது.

 

குடும்பப் படம்

அறையில் உங்கள் அருகிலுள்ள மற்றும் அன்பானவர்களின் புகைப்படத்தை வைத்திருங்கள். உங்கள் முழு நெருங்கிய குடும்பம் மற்றும் தாத்தா பாட்டி உள்ளிட்ட உறவினர்களின் படத்தை போட்டோ பிரேமில் வைக்கலாம். மிக நெருங்கிய நண்பர்கள் குழு இருந்தால், அனைவரையும் ஒன்றாகக் காட்டும் போட்டோ பிரேமையும் வைத்திருக்கலாம். உங்கள் குடும்பத்தினருடனோ அல்லது நண்பர்களுடனோ நீங்கள் பயணங்கள் சென்றிருந்தால் அல்லது விடுமுறையை கழித்திருந்தால் நீங்கள் புகைப்படங்களை எடுத்துக்கொள்ளலாம். இந்த படங்களை பார்க்கும் ஒவ்வொரு முறையும் அன்பான நினைவுகள் உங்களிடம் திரும்பி வந்து உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். ஒரு அறைக்கு தேவையான துணைப் பொருளாகவும் சேர்க்கப்படுகிறது.

 

பசுமையான மலர்கள்

பசுமையான மலர்கள் கொண்ட ஒவ்வொரு வீடும் கலகலப்பாகவும் புதிதாகவும் தோற்றமளிக்கும். பச்சை நிறம் என்பது கண்களுக்கு இனிமையானது மற்றும் நிதானமான மனநிலையை கொடுக்கும். வீட்டைச் சுற்றி சில பச்சை தாவரங்களை வைத்து, அதற்கு ஒரு துடிப்பான தோற்றத்தைக் கொடுங்கள். செயற்கை பூக்களும் அழகாக இருக்கும். உண்மையான பூக்கள் இல்லையென்றால், வீட்டை அழகாக மாற்ற வண்ணமயமான மற்றும் செயற்கை பூச்சாடிகளை வாங்கவும். தினமும் தூசு இல்லாமல் அவற்றை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

 

சுவர்களுக்கான ஓவியம்

ஒரு அழகான ஓவியத்தை சுவரில் தொங்கவிடுவது உங்கள் வீட்டை கவர்ச்சியாக மாற்றுவதற்கான சிறந்த வழியாகும். இயற்கை சார்ந்த ஒரு அழகான ஓவியத்தை தொங்கவிடுவது சிறந்த யோசனையாகும். ஒரு கவர்ச்சியான ஓவியம் பெரும்பாலும் பார்வையாளர்களிடமிருந்து பாராட்டுகளை பெறுகின்றது. நீங்களே ஒரு நல்ல கலைஞராக இருந்தால் நீங்கள் வரைந்த சிறந்த ஓவியத்தை சுவரில் தொங்கவிடலாம். தனிப்பட்ட கலை தனித்துவமானது மற்றும் பிரத்தியேகமானது.

 

அறைக்கான திரைச்சீலைகள்

பொருத்தமான நேர்த்தியான திரைச்சீலைகள் ஒரு முழு அறையின் தோற்றத்தையும் மாற்றும். ஒரு ஜோடி திரைச்சீலைகள் அறையின் மற்ற வண்ணங்களுடன் நன்கு ஒருங்கிணைக்கப்பட்டு அதன் தோற்றத்தை நேர்மறையாக மேம்படுத்தலாம். திரைச்சீலைகள் மிகவும் விலை உயர்ந்தவை அல்ல. மேலும் திரைச்சீலைகள் ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகின்றன.

 

தரையையும் தீர்மானிக்கவும்

மக்கள் பெரும்பாலும் சுவர்கள் மற்றும் அறையை அலங்கரிப்பதைப் பற்றி மட்டுமே சிந்திக்கின்றனர். ஆனால் தரையையும் அலங்கரிக்க வேண்டும் என்பதை மறந்து விட வேண்டாம். உங்கள் வீட்டை அலங்கரிக்கும் போது, அதற்கு பொருத்தமான தரையையும் பெற முயற்சி செய்யுங்கள். இது அறையில் உள்ள மற்ற வண்ணங்கள் மற்றும் வடிவமைப்புகளுடன் பொருந்தும்.