வயதானாலும் இளமையானவர்களைப் போல தோன்றும் அரசியல்வாதிகள்

 

எவ்வளவு தான் ஒருவருக்கொருவர் குறை கூறினாலும் தேர்தல் நெருங்கும் போது மீண்டும் கட்சிகள் மாறி, அதில் 225 மக்கள் பிரதிநிதிகள் பாராளுமன்றத்திற்குச் சென்று தமக்குள் சண்டையிட்டுக்கொள்ளும் நாடுதான் இது. சண்டையின் போது பாராளுமன்றத்திலும் சரி வீட்டிலும் சரி பொதுவாக ஒன்றை குறிப்பிடுவார்கள். அதாவது “சாகவேண்டிய வயதில் கிளட்டுக்கட்டைகளை பாராளுமன்றத்திற்கு அனுப்புகின்றனர்” என கூறுவார்கள். அது ஒருபுறம் இருக்கட்டும். படையப்பா படத்தில் நீலாம்பரி “வயசானாலும் உன் அழகும் ஸ்டைலும் மாறவே இல்ல” என்று ரஜினியை பார்த்து சொல்வதை போல எவ்வளவு வயசானாலும் வயது போனது போல தெரியாமல் அப்படியே இருக்கும் சில அரசியல்வாதிகளும் எமது இலங்கை நாட்டில் உள்ளனர். அவர்கள் பற்றி இன்று பார்ப்போம்.

 

மஹிந்த ராஜபக்ஷ

தலைப்பை கேட்டவுடன் இவரது பெயர் உங்கள் கபாலத்திற்கு பளீர் என்று தோன்றாவிட்டால்தான் ஆச்சரியம். ஜனாதிபதி சிறிசேன ஜனாதிபதி அரியணைக்கு வருவதற்கு முன்பு எம் நாட்டினை 10 வருடங்களாக ஆட்சி செய்த ஜனாதிபதியை சிறுபிள்ளைகூட அறியும். 1945இல் கிருவப்பட்டையில் பிறந்த இவருக்கு இப்போது 75 வயது. சாதாரணமாக இந்த வயதானது, எமது வீடுகளில் தாத்தா பாட்டிக்களின் வயதாகத்தான் இருக்கும். ஆனால் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை பார்த்தால் எவரும் இவருக்கு 50 வயதை தாண்டி இருக்காது என்றுதான் சொல்வார்கள். உடற்தகுதி பற்றி அதிகம் கவனமாக இருக்கும் நபர் மஹிந்த ராஜபக்ஷ என்பது இரகசியமல்ல. அவர் யோகா பயிற்சி பெரும் ஒரு புகைப்படம்கூட மிகவும் பிரபலமானது என்பது நினைவிருக்கிறதா? அவர் உடற்பயிற்சி செய்வதில் மட்டுமல்ல, உணவு முறையிலும் சிறப்பு கவனம் செலுத்துகிறார். விளையாட்டு சீருடையில் அவரது புகைப்படங்களும் சோஷியல் மீடியாக்களில் வைரலாகியது. இவரது பிள்ளைகளுடன் ரக்பி விளையாடுவதாகவும் கூறப்படுகிறது. இதன் விளைவாகவோ என்னவோ அவ்வளவு வயதாகியும் வயதுக்குரிய தோற்றம் அவரிடத்தில் இல்லை.

 

சஜித் பிரேமதாச

 

சஜித் பிரேமதாச தனது தந்தையின் வழியிலும் அரசியல் கூட்டங்களிலும் தொடர்ந்து தனது தந்தையை நினைவுபடுத்துவதால் அவர் வயதாகிவிட்டதாகத் தெரியவில்லை. இவருக்கு இப்போது 54 வயது. ஆனால் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நாம் பார்த்த சஜித் போலவே இன்றும் உள்ளார். தோற்றம் மட்டுமல்ல, இவரது செயல்களும் முன்பை போலவே மாற்றங்கள் ஏதும் இன்றி இருக்கின்றது. அவர் ஒரு இசை நிகழ்ச்சிக்குச் சென்று காவடியின் இசைக்கு டிரம்ஸ் வாசித்துள்ளார். தற்போது அவர் எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார். அவரது சமூக திட்டங்களில் ஒன்று ‘தருண சவிய’ என்று அழைக்கப்படுகிறது. இளைஞனைப் போன்ற ஒருவரிடமிருந்து இளைஞர்களை ஆதரிக்கும் ஒரு திட்டமாக இது காணப்படுகின்றது.

 

தயசிறி யசேகர

அரசியல்வாதியின் கட்டமைப்பிற்குள் வரையறுக்க முடியாத மற்றொரு கலைஞர் என்றும் இவரைக் கூறலாம். இவரும் தனது உண்மையான வயதை விட இளமையாக இருக்கிறார். இவருக்கு இப்போது 51 வயது. அரை நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்தபோதிலும், அவ்வளவு வயதாகத் தெரியவில்லை. பாடகர் கித்சிரி ஜயசேகர இவரது சகோதரர் ஆவார். இவரது அண்ணனும் இவரை போலவே அவ்வளவு வயதான ஒருவராக தெரிவதில்லை. ஒருவேளை குடும்ப இலட்சணமாக இருக்குமோ தெரியவில்லை. தற்போதைய அரசாங்கத்தில் இவர் இராஜாங்க அமைச்சராக உள்ளார்.

 

ரஞ்ன் ராமநாயக்க

இலங்கை அரசியலில் நுழைவதற்கு முன்பு சிங்கள சினிமாவின் கனவு நாயகனை பற்றி தெரியுமா? பெயர் தான் ரஞ்ஜன் ராமநாயக்க. நடிகர்கள் எப்படியும் தாமதமாகத்தான் முதுமையடைவார்கள் என்ற ஒரு கருத்தும் உள்ளது. காரணம் அவர்கள் தமது தோற்றத்தில் அதிக அக்கறை செலுத்துவார்கள். எமது வன்ஷொட் ரஞ்ஜன் ராமநாயக்க வயது போனது தெரியாமல் இருப்பதற்கு சிலவேளை அதுவும் காரணமாக இருக்கலாம். இவரது வயது 55. ஆனால் இன்றும்கூட இவரை பார்த்து ரஞ்ஜன் மாமா என்று கூப்பிட நினைக்காத அளவிற்கு இளமை தோற்றம் காணப்படுகின்றது. தேவை வந்தால் எவரையும் போட்டு அடிக்கும் அளவிற்கு சக்தி இந்த ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு உள்ளது. துணிச்சலாக கருத்துத் தெரிவிப்பவர் என்பதையும் மறுக்க முடியாது. ஆனால், அதே பாணியில் நீதித்துறையை விமர்சித்த காரணத்தால் கடந்த மாதம் இவருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

 

சுஜீவ சேனசிங்க

இவரை பார்த்த எவரும் இவருக்கு 30 வயதை விட அதிகம் இருக்கும் என்று சொல்ல மாட்டார்கள். பார்ப்பதற்கு பளபளவென்று ஒரு வாழைப்பழத்தோலின் நிறத்தில் இருக்கும் ஒரு இளைஞனைப் போல தோற்றமளிக்கிறார். ஒரு கணிப்பில் சொல்லப்போனால் இவருக்கு கிடைக்கும் வாக்குகளில் பெண்களின் வாக்குகள் அதிகம் இருந்தாலும் சந்தேகமில்லை. உண்மையில் இவருக்கு 49 வயது என்றாலும், 30 முதல் 32 வயது வரை இருப்பவர்களின் தோற்றமே காணப்படுகின்றது. சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் துணைத்தலைவர்களில் ஒருவராக தற்போது உள்ளார்.