தடைசெய்யப்பட்ட நகரம் – சீனாவின் அற்புதமான அரண்மனை

 

சில வாரங்களுக்கு முன்பு ஐரோப்பிய நாடுகள் மற்றும் இந்தியாவின் அரண்மனைகள் பற்றிய பல தகவல்களை நாங்கள் உங்களிடம் கொண்டு வந்தோம். ஆனால் சீனாவில் ஒரு தனித்துவமான அரண்மனை உள்ளது, அது நம் நாட்டு மக்களுக்கும், உலகின் முன்னணி ஊடகங்களுக்கும் அவ்வளவாக அறிந்திடாத ஒரு அரண்மனை கட்டமைப்பாகும். இன்று நாம் அந்த அரண்மனையைப் பற்றி பேசப் போகிறோம்.

 

உலகின் மிகப்பெரிய அரண்மனை வளாகம்

பெய்ஜிங்கில் அமைந்துள்ள இந்த அரண்மனை வளாகம் தடைசெய்யப்பட்ட நகரம் என்று அழைக்கப்படுகிறது. பண்டைய சீனப் பேரரசர்களின் ஆட்சிக் காலத்தில், அரண்மனை பொது மக்களுக்கு உட்புக அனுமதி வழங்கப்படாததால் இது அன்று தொட்டு இன்று வரை தடைசெய்யப்பட்ட நகரம் என்று அழைக்கப்பட்டது. பிரான்சில் உள்ள லூவ்ரே அரண்மனையின் மூன்று மடங்கு அளவிலான பரப்பை கொண்ட இந்த தடைசெய்யப்பட்ட நகரம் 7,750,000 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்த அரண்மனையை உருவாக்க சுமார் ஒரு மில்லியன் தொழிலாளர்கள் பங்களித்ததாகவும் கூறப்படுகிறது. அரண்மனை வளாகத்தில் சுமார் எண்பது கட்டிடங்களும் எட்டாயிரத்து ஏழு நூறு அறைகளும் உள்ளன.

 

சீன கட்டிடக்கலையில் மிகச்சிறந்த வடிவமைப்பு

தடைசெய்யப்பட்ட நகரம் உலகின் சிறந்த பாதுகாக்கப்பட்ட இடைக்கால மர கட்டிடங்களில் ஒன்றாகும். இன்றுவரை, ஒவ்வொரு கட்டிடமும் சீன கட்டிடக்கலையின் சிறப்பை பிரதிபலிக்கும் வகையில், எவரதும் புணர்நிர்மாண ஆக்கங்களுக்கு உட்படுத்தப்படாமல் அப்படியே உள்ளது. அரண்மனைக்குள் நுழைய ஒன்பது தங்கமுலாம் பூசிய வாயில்கள் உள்ளன. சீன நம்பிக்கைகளின்படி, ஒன்பது எனும் எண் தனிப்பட்ட சிறப்பைக் குறிக்கிறது.

 

மரங்கள் இல்லாத இடத்தில் அரசசபை மண்டபம்

பிரதான அரண்மனை வளாகத்தின் முன் திறந்த வெளியில் வெளிப்புற அரச சபை மண்டபம் அமைந்துள்ளது. அக்காலத்தில் இந்த வெளி அரச அரண்மனையில்தான் சாதாரண மக்களுக்கு சடங்குகளின் போது பேரரசரைப் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. ஆச்சரியம் என்னவென்றால், இந்த வெளிப்புற பிரிவில் எந்த மரங்களும் நடப்படவில்லை. ஆனால் உள்ளக அரச பெவிலியனுக்குள் அழகிய தோட்டங்களைக் காணலாம். இதற்குக் காரணம், மரத்தின் உதவியுடன் ஒழிந்திருந்து அரச சக்கரவர்த்தி மீது தாக்குதல் நடத்தும் அபாயம் இருந்ததால், வெளி அரண்மனை மரம் இல்லாத மண்டலமாக மாற்றப்பட்டது என்று பலர் நம்புகிறார்கள்.

 

உலகின் மிகப்பெரிய கலாச்சார அருங்காட்சியகம்

தடைசெய்யப்பட்ட நகரத்தின் அருங்காட்சியகத்தில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக சீன அரசகுடும்பம் பயன்படுத்திய பல்வேறு வகையான கலைப்பொருட்கள் உள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் உலகின் மிகப்பெரிய வரலாற்று சீன கலைப் படைப்புகள் உள்ளன. இருப்பினும், இந்த அருங்காட்சியகத்திற்கு சொந்தமான ஏராளமான கலைப் படைப்புகளை மேற்கில் உள்ள அருங்காட்சியகங்களிலும், தாய்வானில் உள்ள அருங்காட்சியகங்களிலும் காணலாம். பெய்ஜிங்கை ஆக்கிரமித்து தடைசெய்யப்பட்ட நகரத்தை சூறையாடிய வெளிநாட்டினரால் இந்த கலைப்பொருட்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டன, அதே நேரத்தில் சீன அரசாங்கமே ஜப்பானிய படையெடுப்பின் போது பாதுகாப்புக்காக தாய்வானுக்கு பல கலைப்பொருட்களை எடுத்துச் சென்றது.

 

அரபு கட்டிடக்கலையால் தழுவப்பட்ட குளியலறை

யுவான் வம்சத்தின் மன்னர்கள் தடைசெய்யப்பட்ட நகரத்தின் தளத்தில் தங்கள் அரண்மனைகளைக் கட்டியிருந்தனர். இதற்கு பங்களித்த ஒரு பாரசீக கட்டிடக் கலைஞர் அரபு கட்டிடக்கலையால் ஈர்க்கப்பட்ட ஒரு குளியலறையை வடிவமைத்துள்ளார். முன்பிருந்த சிறிய அரண்மனையை அகற்றவும், தடைசெய்யப்பட்ட நகரத்தை உருவாக்கவும் உத்தரவிட்ட மிங் வம்சத்தின் யோங்ல் பேரரசர், தடைசெய்யப்பட்ட நகரத்தில் அரபு கட்டிடக்கலையால் தழுவப்பட்ட குளியலறையைச் சேர்த்தார்.

 

ஒரு பறவை கூட இறங்க முடியாத தடைசெய்யப்பட்ட நகரத்தின் கூரைகள்

அதன் கட்டடக் கலைஞர்கள் தடைசெய்யப்பட்ட நகரத்தின் கூரைகளை சுத்தமாக வைத்திருக்கவும், அவர்களின் சிறப்பைக் காட்டவும் ஒரு சிறப்பு மூலோபாயத்தை வகுத்துள்ளனர். கூரையின் சாய்வை மாற்றுவதன் மூலம், ஒரு பறவை கூட அதன் நகங்களை அந்த கூரைகளில் வைக்க முடியாதபடி ஒவ்வொரு கூரையும் சிறப்பாக அமைப்பதில் அவர்கள் உறுதி செய்துள்ளனர். இதன் விளைவாக, தடைசெய்யப்பட்ட நகர கட்டிடங்களின் கூரைகளில் பறவைகள் இன்றும் கால் வைக்க முடியாதபடி உள்ளது.

 

தடைசெய்யப்பட்ட நகரத்தின் காவலர்கள்

தடைசெய்யப்பட்ட நகரத்தை பாதுகாக்க ஒரு சிறப்பு குழு முன்வருகிறது. இன்றளவில் அந்த தடைசெய்யப்பட்ட நகரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பூனைகள் பல்வேறு காலங்களில் ஆட்சி செய்த பேரரசர்களின் மனைவிகளின் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்பட்ட பூனைகளிலிருந்து வந்தவை. இந்த செல்லப்பிராணிகளில் பலர் தங்கள் சொந்த பிரதேசத்தை அமைத்து, அப்பகுதியின் பாதுகாப்பிற்கும், அரண்மனையை கொறிக்கும் எலியின் மூலம் ஏற்படும் சேதத்தைத் தடுக்கவும் பங்களித்துள்ளனர்.