“படித்தால் மட்டும் போதாது- பணம் சம்பாதிக்க வேண்டும்” – இது உண்மையா?

 

இப்போதெல்லாம் திடீர் தொழிலதிபர்கள் அதிகமாக வளர்ந்து விட்டனர். “நான் கற்கவில்லை, ஆனால் பட்டம் பெற்றவர்களையும் விட அதிக பணம் சம்பாதிக்கிறேன்” இதுபோன்று கூறும் பல தொழிலதிபர்களையும் யூடியூப் இன்டர்வியூக்களில் காணலாம். எனவே, இதை பார்க்கும் கற்கும் இளைஞர்களும், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் கூட திரைப்பட கல்லூரியில் நிராகரிக்கப்பட்டாலும் உலக புகழ்பெற்ற திரைப்பட இயக்குனராக மாறினார் தானே, அப்படியிருக்க நாம் மட்டும் ஏன் புத்ததகப்பையை தூக்கிக்கொண்டு பாடசாலை சென்று காலத்தை வீணாக்குகிறோம் என்று எண்ணி பணம் சம்பாதிக்க வழி தேடக்கூடும். ஆனால் துரதிஷ்டவசமாக, அந்த யூடியூப் நேர்காணல்களில்  பேசும் இளம்தொழிலதிபர்களை உண்மையான உலகில் தேடிப்பிடிக்க மிகவும் கஷ்டம். அவர்கள் காட்டும் ஆடம்பரக் கார்கள் மீது கவனம் செலுத்தி பணம் சம்பாதிப்பதாக கல்வியை இடைநிறுத்துவோரது எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகும்.

எனவே கற்றலின் முக்கியத்துவத்தைப் பற்றி அறிந்துகொள்வோம்.

 

உண்மையில் பல்கலைக்கழகம் சென்றவர்கள் மூடர்களா?

இது பலரிடம் காணப்படும் ஒரு பிரபலமான கருத்து. அதாவது இந்த நாட்களில் பல்கலைக்கழகம் சென்று படிப்போர் அனைவரும் முட்டாள்கள், அதற்கு பதிலாக அந்த நாட்களில் ஏதாவது தொழில் செய்து பணம் சம்பாதிப்பவர்கள் தான் கெத்தானவர்கள் என்று கூறித்திரிகின்றனர். அப்படி சொன்னவன் ஒரு முட்டாளாகத்தான் இருக்கவேண்டும்.

எளிமையாகச் சொல்வதானால், பல்கலைக்கழகம் சென்று கல்வி கற்பது உங்களை மேதையாக்குவதில்லை. பல்கலைக்கழகம் செல்லாமல் பணம் சம்பாதித்தால் நீங்கள் பெரிய புத்திசாலியுமில்லை. இது எல்லாம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட கருத்து. இன்று, பல்கலைக்கழகம் சென்று படித்து மிகவும் வெற்றிகரமான மற்றும் உலகத்தை மாற்ற பங்களித்த அறிஞர்கள் பலர் உள்ளனர். மேலும், போதிய கற்றல் இல்லாமல் பணம் சம்பாதிக்கவும், வியாபாரம் செய்யவும் முடியாமல் பாதியில் நிறுத்தியவர்களும் ஏராளமாக உள்ளனர். சில சமயங்களில் பணம் சம்பாதிப்பதை ஓரளவிற்கு மேல் பராமரிப்பது எப்படி என்று தெரியாமல் பாதியில் நிலைதடுமாறியவர்களும் ஏராளம். மேலும், கற்றல் இல்லாமல் வியாபாரம் செய்ய தங்கள் பெற்றோரின் பணத்தை நாசமாக்கும் முட்டாள்களும் ஏராளம்.

எனவே அடிப்படை விடயம் என்னவென்றால், பல்கலைக்கழகம் சென்றவர்களையும் செல்லாதவர்களையும் விமர்சிப்பதை நிறுத்த வேண்டும்!

 

அப்படியென்றால் ஜாக் மா, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்?

பணத்தை சம்பாதிக்க பாதியில் பரமபிதாவை அண்டிய பலரின் கருத்துக்களில் இதுவும் ஒன்று. மார்க் ஸக்கர்பெர்க் தனது இரண்டு மேஜர்களில் ஒன்றை முடிக்காமல் பேஸ்புக்கைத் தொடங்கி இப்போது உலகத்தை உலுக்கும் மனிதராக இருப்பதாக இருந்தால், நாம் ஏன் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றனர். ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுடன் இந்த பட்டியலைத் தொடங்கி, ​​அலிபாபா சைட்டை உருவாக்கிய ஜாக் மா வரை உதாரணங்களைக் கொடுக்கும் பலருக்கும் கூறவேண்டியது பல உள்ளன. படிப்பை முடிக்காமல் பேஸ்புக் உருவாக்க மார்க் ஸக்கர்பெர்க் வெளியேறியது ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திலிருந்தாகும். அதேபோல பள்ளிக்குச் சென்று தோல்வியடைந்த ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அல்லது ஸ்பீல்பெர்க் போன்றவர்கள் தொடர்ந்து விடாமல் கற்றுக்கொள்வதால் வெற்றி பெற்றார்கள். ஏனெனில் அது எப்போதும் தனக்குத்தானே ஒரு சவால். பள்ளியில் தோல்வியுற்ற மற்றும் பின்னர் வாழ்க்கையில் வெற்றிபெறும் பலர் சிறு வயதிலிருந்தே மிகவும் சிறப்பு வாய்ந்தவர்கள். அவர்கள் கூர்மையான பார்வை கொண்ட விதிவிலக்கான மக்கள். ஆகவே ஒன்று அல்லது இரண்டு யூடியூப் வீடியோக்களைப் பார்த்து ஆட்ஸென்ஸிலிருந்து பணம் சம்பாதிக்க விரும்புவோர் மற்றும் உலகை உலுக்க விரும்புவோர், ஐன்ஸ்டீனுடன் தங்களை ஒப்பிடும்போது அவர்களே சிரிக்க வேண்டும்.

 

முறைசாரா கல்வி

அனைத்திற்கும் முன், முறைசாரா கல்வி என்றால் என்ன என்று பார்ப்போம். முறைசாரா கல்வி என்பது பள்ளி அல்லது பல்கலைக்கழக அமைப்புக்கு வெளியே அறிவைப் பெறுவதாகும். உதாரணமாக, பல்கலைக்கழக கல்வியை பெற முடியாத ஒருவர் சொந்தமாக ஒரு விடயத்தைப் படிக்கலாம். அல்லது நீங்களே ஏதாவது செய்வதன் மூலம் கற்றுக்கொள்ளலாம். ஆனால் முறைசாரா கல்வி என்பது யூடியூப் வீடியோக்களைப் பார்த்து தச்சுத் தொழிலை சொந்தமாகக் கற்றுக்கொள்வது போன்ற எளிய விடயங்கள் அல்ல. முறைசாரா கல்வியில் கூட, ஒருவர் நடைமுறை அறிவையும், தத்துவார்த்த அறிவையும் பெற முடியும். முறைசாரா கல்வி என்ற பெயரில் சில சமயங்களில் சரியான பாடத்திட்டத்தின்படி அறிவை முறையாகப் பெற முடியாது.

ஆனால் முறைசாரா கல்வி மூலம் கூட, ஒரு பாடத்தில் நிபுணராக அனைத்தையும் கற்றுக்கொள்ள அதை விட கவனம் செலுத்தி நீங்கள் ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டும்.

 

கற்காததால் ஏற்படும் தீமைகள்

கற்காததன் முக்கிய தீமை என்னவென்றால், நீங்கள் ஏதாவது செய்ய வேண்டுமானால் அதற்கான அறிவை இழக்கின்றீர்கள். உதாரணமாக, ஆங்கிலம் கற்காதது என்பது உங்கள் வாழ்க்கையையே இழக்க நேரிடும் என்று அர்த்தம் இல்லை. அல்லது வேலை பெறுவது கஷ்டம் என்றும் அர்த்தமல்ல, ஆனால் நீங்கள் வேலையில் எங்காவது மாட்டிக்கொள்ளலாம். பேசும்போது தொடர்பு குழப்பமானதாக இருக்கும்.

ஆனால் இதைக் கற்றுக்கொள்ளாததன் முக்கிய பிரச்சினை தான் அறிவு சார் பிரச்சினை. அது நுண்ணறிவின் குறைவு. இது தனிப்பட்ட மட்டத்தில் மட்டுமன்றி சமூக, உலக அளவில் ஒரு பிரச்சினையாக காணப்படுகின்றது. சரியான கற்றல் இல்லாதது தகவல்தொடர்பு மற்றும் அன்றாட நடவடிக்கைகளில் கூட ஒரு பிரச்சினையாகும்.

 

கற்றலின் நன்மைகள்

கற்றலில் பல நன்மைகள் உள்ளன. வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்கும். உதாரணத்திற்கு, ஒருவர் மார்கெட்டிங்கில் டிப்ளோமா பெற்றிருந்தால், அதை சரியாக பயன்படுத்த தெரிந்திருந்தால், தான் வேலை செய்யும் இடத்தில் மார்க்கெட்டிங் பற்றி எதுவும் கற்றிராத ஆனால் மார்க்கெட்டிங் பற்றி தெரிந்த ஒருவரை இலகுவாக கடந்து வேலையில் முன்னேறிச்செல்லலாம்.

மற்ற விடயம் என்னவென்றால், இது முறையான கல்வியின் மூலம் உண்மையில் வழங்கப்படும் தத்துவார்த்த அறிவு மட்டுமல்ல. சிக்கல் தீர்க்கும், விமர்சன சிந்தனை, பகுப்பாய்வு சிந்தனை போன்றவை தானாகவே அறிவோடு வருகின்றன. சிலர் பல்கலைக்கழகம் சென்றாலும் இவை ஒன்றும் பெற்றிராத ஜடங்களாகவும் இருப்பார்கள். இருப்பினும், முறையாக அல்லது முறைசாரா முறையில் கல்வியைப் பெற்றவர்களுக்கு இந்த குணங்கள் அதிகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

நடைமுறை கற்றல்

கற்றல் என்பது கிளிப்பிள்ளை போல புத்தகங்களை மனப்பாடம் செய்வது என்று அர்த்தமல்ல. இது உண்மையில் பல இடங்களில் பலரும் கூறும் ஒன்று. நீங்கள் அவ்வாறு நினைவில் வைத்துக் கொள்ள முடியுமானால், நீங்கள் பல்கலைக்கழகத்திற்கும் விண்ணப்பிக்கலாம். ஆனால் வாழ்க்கையில் மிகச்சிறந்த ஒன்றைப் பெற வேண்டுமானால் புத்தகக் கல்வியையும் தாண்டி நடைமுறை கல்வியும் நிச்சயம் வேண்டும். அதனால்தான் நடைமுறை கற்றல் உண்மையில் தேவைப்படுகிறது. இதன் பொருள் என்னவென்றால், நீங்கள் கற்றுக்கொண்டதை நடைமுறைக்குக் கொண்டுவருவதாகும். அதைப் பற்றி மற்றொரு தொகுப்பில் விரிவாக பேசுவோம்.