குழந்தை திருமணத்தால் பாதிக்கப்படுகின்ற மலாவிய சிறுவர்கள்

 

மலாவியர்களில் 42 வீதமான சிறுமிகள் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து கொள்கின்றனர். 10 சிறுமிகளில் ஒருவர் 15 வயதுக்கு முன்பே திருமணம் செய்து கொள்கிறார். மலாவி சிறுவர்களில் 7 வீதமான ஆண் சிறுவர்கள் 18ஆவது பிறந்தநாளுக்கு முன்பே திருமணம் செய்து கொள்கிறார்கள். இதனால் குழந்தை திருமணத்தில் முன்னணி நாடுகளில் ஒன்றாக மலாவி மாறிவிட்டது. இந்த குழந்தை திருமண சூழ்நிலைகள் மலாவியில் பழங்குடி குழுக்களிடையே அதிகம் காணப்படுகின்றன. தெற்கு மலாவியில் குழந்தைத் திருமணங்கள் அதிகரித்துள்ளதாக உலக வங்கி மற்றும் தொடர்புடைய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

 

வறுமை

மலாவி 1964இல் சுதந்திர நாடாக விடுவிக்கப்பட்டது. ஆனால் மலாவியை இவ்வளவு காலமாக ஆட்சி செய்த கொடுங்கோன்மை ஆட்சியாளர்களால் அந்த நாடு எந்த விதத்திலும் முன்னேற்றம் பெறவில்லை. இதன் விளைவாக, அந்த நாட்டில் பெரும்பாலான மக்கள் இன்னும் தீவிர வறுமையில் பாதிக்கப்பட்டு வாழ்கின்றனர். மலாவியில் உள்ள ஏழைக் குடும்பங்கள் தங்கள் குடும்பச் சுமையைக் குறைப்பதற்காக தங்கள் மகள்மாரை சிறுவயதிலேயே திருமணம் செய்து வைக்கின்றனர். சில நேரங்களில் சில சிறுமிகள் வறுமையின் கொடுமையில் உள்ள குடும்பக் கடன்களை அடைப்பதற்காக காரணம் அறியாமல் திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர். பணம் மற்றும் உணவு கிடைத்தால் ஓரளவு செல்வம் உள்ள ஒருவருடன் உடலுறவு கொள்ள தங்கள் குழந்தைகளை அனுப்பி வைக்கும் மலாவிய ஏழைகளின் பின்தங்கிய தன்மையும் உள்ளது.

 

 பழங்குடி பழக்க வழக்கங்கள்

2014 பிபிசி அறிக்கையின்படி வடக்கு மலாவியில் உள்ள பெண்கள் வயதுக்கு வரும்போது ஒரு வயதான மனிதருடன் உடலுறவு கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். குடும்ப வாழ்க்கையில் ஆண்களை சந்தோஷப்படுத்த பெண்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. மேலும், இதில் உள்ள இடைத்தரகர்கள் குழந்தைகளை திருமணம் செய்து கொள்ள முயற்சிக்கின்றனர். நவீன சமுதாயத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள இத்தகைய பழங்குடி பழக்கவழக்கங்கள் கிடைத்திருப்பது அதிஷ்டம் என்று அத்தகைய பழங்குடியினர் நம்புகிறார்கள்.

 

குழந்தைகளின் தாய்மை நிலைமைகள்

அந்த நாட்டில் சிறு குழந்தைகளை உடலுறவு கொள்ள ஊக்குவிக்கும் மரபுகள் காரணமாக சிறு வயதிலேயே சிறுமிகள் தாய்மை அடைகின்றனர். 2017ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, நாட்டில் பல குழந்தை திருமணங்கள் குழந்தை கர்ப்பத்தால் ஏற்படுகின்றன. நாட்டின் கலாச்சார சித்தாந்தத்தின்படி, திருமணம் செய்யாமல் குழந்தைகளைப் பெறுவது ஒரு மோசமான காரியமாகக் கருதப்படுகிறது. எனவே பெற்றோர் தங்கள் குழந்தைகள் படித்துக்கொண்டிருக்கும் போதே திருமணம் செய்து வைக்க முயற்சிக்கின்றனர். பழங்குடி நம்பிக்கைகளின்படி, திருமணமாகாத மற்றும் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சமுதாயத்தால் ஊனமுற்றவர்களாக கருதப்படுகிறார்கள்.

 

கல்வி மற்றும் சட்ட நிலை

குழந்தைத் திருமணம் சட்டத்தால் தடைசெய்யப்பட்டாலும், பல சிறுமிகளுக்கும் மக்களுக்கும் சட்டம் பற்றி அதிகம் தெரியாது. மலாவியும் மிகக் குறைந்த அளவிலான கல்வி அறிவை மாத்திரமே கொண்ட நாடு. அதனால்தான் பெண்கள் மற்றும் சிறுவர்கள் அந்த நாட்டில் அறிவைப் பெறுவது கடினம். வேலைகளையும் கண்டுபிடிப்பது கடினம். பின்னர் அவர்கள் வாழ்க்கையில் இருக்கும் ஒரே கடமையாக திருமணம் செய்து கொள்கிறார்கள்.

 

தங்குமிட வசதிகள்

குழந்தைகள் கல்விக்காக நகர்ப்புறங்களுக்குச் செல்கின்றனர். ஆனால் அந்த நகர்ப்புற பாடசாலைகளில் தங்குமிட வசதி குறைவாகவே உள்ளது. எனவே, குழந்தைகள் விடுதிகளில் ஹவுஸில் தங்குகின்றனர். குடியிருப்பாளர்கள் அங்குள்ள குழந்தைகளை திருமணம் செய்து கொள்வதன் மூலம் தனி வருமானம் ஈட்டுவது நாட்டில் பிரபலமாகியுள்ளது. எனவே, குழந்தைகள் ஆரம்பத்திலேயே திருமணம் செய்து கொள்வதைக் காணலாம்.

 

பெண்களுக்கு கிடைக்கும் மிகக்குறைந்த மதிப்பு

அந்த நாட்டில் அதிகளவான பெண் குழந்தைகளைப் பெற்றெடுப்பவர் ஒரு மோசமான தாயாகக் கருதப்படுகிறார். அதன்படி, அத்தகைய குடும்பங்களின் கணவர்மார் விவாகரத்து கோரும் நிலைக்கும் வந்துள்ளனர். அதிகமான பெண் பிள்ளைகளை பெற்ற குடும்பங்களுக்கும் குறைந்த சமூக அந்தஸ்தே கிடைக்கும். இப்படி பெண்களுக்கு குறைந்த அந்தஸ்து வழங்குவதால் பெற்றோர் விரைவில் தங்கள் மகள்மாருக்கு திருமணம் செய்துவைத்து அந்தஸ்த்தை திரும்ப பெற முயற்சிக்கின்றனர்.

 

 குழந்தை திருமணத்தை ஒழித்தல்

மலாவி போன்ற ஆபிரிக்க நாடுகளுக்கு குழந்தை திருமணம் என்பது புதிதல்ல. அவர்கள் நீண்ட காலமாக பராமரித்து வரும் கலாச்சார கூறுகளின் மற்றொரு பகுதியாக இதை அவர்கள் பராமரிக்கிறார்கள். நவீன உலகத்துடன் தொடர்புடைய கல்வி, வேலை வாய்ப்புகள் மற்றும் அறிவு இல்லாமை மலாவி கிராமங்களில் இந்த நிலைமை மோசமடைய வழிவகுத்தது. மலாவியில் குழந்தை திருமணத்தை குறைப்பதில் ஏராளமான தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. ஆனாலும் அதன் வாழ்க்கை முறை மெதுவாகவே மாறுகிறது.

ஒரு நாட்டின் கலாச்சார மற்றும் சமூக பின்னணியில் நல்ல மற்றும் தீய விடயங்கள் உள்ளன. இலங்கையில் காலனித்துவ காலத்தில் எழுதப்பட்ட புத்தகங்களில் அக்கால சமுதாயத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் இடம் குறித்து குறிப்பிடப்படவில்லை. ஆனால் காலப்போக்கில் உலகிற்கு ஏற்றவாறு எமது கலாச்சாரத்தையும் நாங்கள் புதுப்பித்துள்ளோம். மலாவி போன்ற நாடுகளுக்கு கல்வியறிவு கிடைத்தால், “எங்கள் கலாச்சாரம் எங்கள் பண்பாடு” என்று அழைக்கும் பழங்குடி பழக்கவழக்கங்கள் காலத்திற்கு ஏற்ப புதுப்பிக்கப்படும்.