சொந்தமாக தொழில் செய்வதிலுள்ள நன்மைகள்

 

ஆண், பெண் என்ற பாகுபாடின்றி இன்றைய இளைஞர்களுக்கு தொழில் மிக முக்கியமானது. ஏனெனில் எதிர்காலத்தில் அதிகரித்து வரும் இந்த வாழ்க்கைச் செலவை சமாளிக்க, நல்ல வருமான ஆதாரம் இருக்க வேண்டும். ஆனால் ஒரு நல்ல வருமான ஆதாரமாக ஒருவருக்கு கீழ் செய்யும் வேலையை மாத்திரம் கூறமுடியாது. நீங்கள் உங்கள் சொந்த வியாபாரத்தை தொடங்கினாலும், அதிலிருந்தும் நல்ல வருமானத்தை ஈட்டலாம். இந்த வியாபாரம் என்பது இன்றைய பல இளைஞர்களிடையே பரவலாக பேசக்கூடிய விடயமாக இருந்து வருகின்றது. நீங்கள் ஒரு வியாபாரத்தை செய்கிறீர்களா அல்லது வேலை தேடுகிறீர்களா என்பது தனிப்பட்ட விருப்பம். எனவே உங்கள் வருமானத்தை வகுத்துக்கொள்ள வேறொருவரின் கீழ் பணியாற்றுவதை விட உங்கள் சொந்த வியாபாரத்தை நடத்துவதன் நன்மைகளைப் பற்றி இன்று உங்களுக்கு கூறுகின்றோம்.

 

சுதந்திரம்

இது முதல் மற்றும் மிகப்பெரிய நன்மை. சுதந்திரத்தை விரும்பாதவர்கள் யாரும் இல்லை. இந்த சுதந்திரம் தான் பலர் வணிகம் செய்யத் தேர்ந்தெடுப்பதற்கு மிகப்பெரிய காரணம். இங்கே சுதந்திரம் என்பது வேறு ஒருவரின் கீழ் வேலை செய்யாமல், தான் விரும்பியதை, தனது சொந்த வழியில் செய்யும்போது கிடைக்கும் மனதின் சுதந்திரமாகும். உங்கள் சொந்த வியாபாரத்தைச் செய்யும்போது உங்கள் தனிப்பட்ட விவகாரங்களுக்கு விடுமுறை எடுக்க நீங்கள் அத்தகைய முதலாளியிடம் சென்று கேட்டுக்கொண்டிருக்க தேவையில்லை.

 

வேலை செய்யுமளவிற்கு அதன் முடிவுகள்

அடுத்த பெரிய நன்மை என்னவென்றால், நீங்கள் எவ்வளவு அதிகமாக வேலை செய்கிறீர்களோ, அந்த அளவிற்கு சிறந்த முடிவுகள் கிடைக்கும். நாம் வேறொருவரின் கீழ் பணிபுரியும் போது, ​​நாம் எவ்வளவு கடினமாக முயற்சி செய்து உழைத்தாலும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நாம் செய்யும் வேலையைப் பாராட்டத் தவறிவிடுவதும் வழக்கமான விடயமாகும். எங்கள் கடின உழைப்பின் பலனை பெறுவதோ வேறொரு நபர். இதே உங்கள் சொந்த வியாபாரத்தை செய்யும்போது அது ஒரு பிரச்சினையாக இருக்காது. நீங்கள் தூங்காமல், சாப்பிடாமல், குடிக்காமல், கண்விழித்து கடினமாக உழைத்தாலும் எந்த இழப்புமின்றி, செய்த அனைத்திற்கும் பலனை தானே அனுபவிக்க முடியும்.

 

இலக்குகளுக்கான பயணம்

ஒருவரிற்கு கீழ் ஓரிடத்தில் வேலையைச் செய்யும்போது வாழ்க்கையின் இலக்குகளை நேராக அடைவது சிறிது கடினம். ஏனென்றால், ஒரு இலக்கை நோக்கி நாம் எவ்வளவு கடினமாக உழைத்தாலும், சம்பளம் என்பது நிறுவனம் விரும்பும் தொகையில்தான் அமையும். ஆனால் உங்கள் சொந்த வியாபாரத்தை செய்யும்போது, ​​ஒரு அழகான வீடு, வாகனம் ஆகிய கனவுகளை அந்த நேரத்தில் மனதில் வைத்து, அந்தக் கனவுகளை நனவாக்க கடுமையாக உழைக்க வாழ்க்கையின் குறிக்கோள்களாக எடுத்து செய்து கொண்டு போக முடியும்.

 

சுய திருப்தி

ஒரு இடத்தில் ஒருவருக்கு கீழ் வேலையை செய்து, ஒரு சிறிய சம்பளம் சம்பாதிப்பதை காட்டிலும் புதிதாக உங்கள் சொந்தத் தொழிலைத் தொடங்கி உங்கள் நிறுவனம் நாளுக்கு நாள் வளர்ந்து வருவதை பார்ப்பது அதை விட ஆயிரம் மடங்கு திருப்தி அளிக்கும். இறுதி முடிவு தங்கள் கைகளில் இருக்கும் என்பதை அவர்கள் ஆரம்பத்திலிருந்தே அறிவார்கள். நீங்கள் வேலையில் செய்ததைப் போல வெறுங்கையோடு கடைசியாக வீட்டிற்கு வர வேண்டியதில்லை. சுயதொழில் செய்து முன்னேறும் போது “ஆரம்பத்தில் இருந்தே இந்த விடயத்தை நான் தான் முன்னேற்றினேன் அல்லது உருவாக்கினேன் ” என்று மரண தருணத்தில் கூட மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

 

முதலாளிகள் இல்லை

முதலாளிகள் மற்றும் சூப்பர்வைசர்கள் இல்லாதது மற்றொரு பெரிய நன்மை. நாம்தான் முதலாளி. செய்தது தவறு என்றாலும் குற்றம் சொல்ல யாரும் இல்லை. ஆனால் செய்யும் தவறுகளின் விளைவுகளையும் தானே அனுபவிக்க வேண்டும். அப்படியிருந்தும், எவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்தும் சிறு சிறு தவறுகளுக்காக முதலாளியிடம் திட்டுவாங்குவதை விட இது சுதந்திரமாகும். முதலாளியும் இல்லை முதலாளியைப் போல நடித்து எரிச்சலை ஏற்படுத்துவோரும் இல்லை.

 

பெரிய தகுதிகளும் தேவையில்லை

பலர் வியாபாரம் செய்யத் தேர்ந்தெடுப்பதற்கு இதுவும் ஒரு பெரிய காரணம். இன்று தொழிற்சந்தையில் பெரும் போட்டி நிலவுகிறது. எனவே ஒழுங்கான வேலையைக் கண்டுபிடிப்பது எளிதல்ல. இதன் விளைவாக, பல இளைஞர்கள் இப்போது வணிகத்திற்குத் திரும்புகின்றனர். உண்மையில் கிடைக்காத வேலைக்காக அதன் பின் ஓடுவதை விட ஒரு தொழிலில் இறங்குவது ஒரு நல்ல மூளை உள்ள ஒருவர் செய்யும் வேலை. நீங்கள் வணிகம் ஒன்றை தொடங்குவதற்கான தகுதிகள் தேவையில்லை என்றாலும், சிறிது காலம் கழித்து வணிகம் ஒரு குறிப்பிட்ட நிலைக்கு வளர்ந்தாலும், கல்வி மற்றும் தொழில்முறை தகுதிகளையும் வளர்த்துக்கொள்வது, உரிமையாளரின் நற்பெயர் மற்றும் வணிகத்திற்கும் மதிப்புமிக்க ஒன்றாகும்.

 

ஓய்வு காலத்தில் ஆறுதல்

இது உங்கள் சொந்த தொழிலைத் தொடங்குவதிலும், இளம் வயதிலேயே அதை வளர்ப்பதிலும் உள்ள மற்றொரு பெரிய நன்மை. ஒரு வணிகத்தை ஒரு குறிப்பிட்ட நிலைக்கு உருவாக்குவது என்பது ஓய்வின் சுமையை தரையில் வைப்பது போன்றது. ஏனெனில் இது ஓய்வூதியம் வழங்கும் அரசாங்க வேலை அல்ல என்றால், அது உங்கள் ஓய்வூதிய வாழ்க்கையைத் திட்டமிடுவதற்கான தனி முயற்சியாக இருக்க வேண்டும். நீங்கள் வயதாகி வேலை செய்ய முடியாமல் இருக்கும்போது நிறுவனங்கள் சம்பளம் கொடுப்பதில்லை. ஆனால் ஒரு சொந்த வணிகம் என்பது ஒரு மேம்பட்ட மட்டத்தில் இருந்தால் நாம் வேலை செய்ய முடியாமல் போகும் வயதாக இருந்தாலும் சம்பாதிக்கக்கூடிய ஒன்றாக இருக்கும். எனவே, அதற்காக இளைஞர்களிடையே கடின உழைப்பு ஒரு இழப்பாக மாறிவிடாது.