மலம் கழிக்கவும் சிறுநீர் கழிக்கவும் ஒரு நாளைக்கு பல முறை கழிப்பறையைப் பயன்படுத்துகிறோம். அவசர தேவைகளின் போது எங்கள் வீட்டில் உள்ள கழிப்பறைகளை போலவே வெளியே உள்ள கழிப்பறைகளையும் பயன்படுத்த முற்படுகிறோம். கழிப்பறைகள் என்பது கிருமிகள் அதிகமாக தங்கக்கூடிய இடங்கள். எனவே, கழிப்பறைகளைப் பயன்படுத்தும்போது எமது சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்திற்காக சரியான கழிப்பறை பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். அதனால்தான் கழிப்பறைகளில் பெரும்பாலான மக்கள் பின்பற்றும் சில கெட்ட பழக்கங்களைப் பற்றி நாங்கள் உங்களுக்குச் சொல்வோம் என்று நினைத்தோம். இவ்வாறான சில பழக்கங்களை தவிர்த்துக்கொள்வது சிறந்தது.
அடக்கிக்கொண்டிருக்க வேண்டாம்
அலுவலக வேலைகளில் மிகவும் பிஸியாக இருக்கும்போது, விருப்பமான தொலைக்காட்சி தொடர்கள், கிரிக்கட் போட்டிகளை பார்க்கும்போது, மலம் கழிக்க கழிப்பறைக்குச் செல்ல வேண்டிய அவசியம் இருந்தும் அதை செய்யாமல் சிறிது நேரம் அடக்கிக்கொள்ள முடியும். இப்படி ஒருமுறை அல்லது இரு முறை என்றால் பரவாயில்லை, பெரிதாக ஏதும் ஆரோக்கியத்திற்கு கேடுவிளைவிக்காது. ஆனால் தொடர்ந்து இப்படி கழிப்பறை தேவை இருக்கும்போதெல்லாம் அடக்கி வைத்துக்கொண்டு இருப்பது சுகாதாரத்திற்கு உகந்ததல்ல. இந்த பழக்கம் மலச்சிக்கல் உட்பட பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
மூடியை மூடாமல் ஃபிளஷ் செய்ய வேண்டாம்
சில பொது கழிப்பறைகளில் “தயவுசெய்து ஃபிளஷ் செய்யவும்” என்று எழுதி தொங்கவிட்டிருப்பார்கள். அந்த அளவிற்கு நம் மக்களின் கழிப்பறை பழக்கவழக்கங்கள் மோசமடைந்துள்ளன. கழிப்பறைக்குச் சென்றபின் ஃபிளஷ் செய்வது நல்ல பழக்கம்தான். ஆனால் அதை ஒரு சுகாதாரமான பழக்கமாக மாற்ற, நீங்கள் இன்னும் ஒரு விடயத்தைச் செய்ய வேண்டும். அதாவது, கழிவறை இருக்கையின் மூடியை முழுவதுமாக மூடி ஃபிளஷ் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ஃபிளஷ் செய்யும்போது நீர் வேகமாக வரும்போது டப்பின் உள்ளே இருக்கும் கழிவுநீர் வெளியே சிந்துவதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளன. இதன்மூலம் கழிப்பறை டப்பின் உள்ளே இருக்கும் கிருமிகள் கழிப்பறையைச் சுற்றி பரவக்கூடும். இது கிருமிகளின் பரவலை அதிகரிக்கும் மற்றும் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
கழிப்பறையில் கழிவோடு சேர்த்து நேரத்தையும் அதிகமாக கழித்தல்
சிலர் மலம் கழிப்பதற்காக கழிப்பறைக்குச் செல்வது, விடுமுறைக்கு வீட்டிற்கு செல்வதை போல இருக்கும். அதாவது அங்கேயே அதிக நேரத்தை செலவு செய்வார்கள். சிலர் கழிப்பறைக்குப்போனாலும் அங்கேயே பாய் போட்டு படுத்துவிட்டார்களா என்று எண்ணத்தோன்றும். சிலர் அதிலும் மொபைல், படிக்க புத்தகம் என்பவற்றோடு செல்வார்கள். இன்னும் சிலர் அங்கு போய் தான் சிந்தனை கர்த்தாவாக மாறிவிடுவார்கள். இது ஒரு நல்ல பழக்கம் அல்ல என்று நம்மில் பலருக்கு தெரியாது. அத்தோடு இந்த பழக்கம் நல்லதல்ல என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக 5 நிமிடங்களுக்கு மேல் கழிப்பறைக்குள் இருக்க முயற்சிப்பது மலக்குடலில் தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்தும். இது மூல நோய் போன்ற நோய்களுக்கும் வழிவகுக்கும். நீங்கள் பல நிமிடங்கள் முயற்சி செய்தும், மலம் வெளியே வரவில்லை என்றால், அப்படியே எழுந்து வெளியே வந்துவிட்டு சிறிது நேரத்திற்கு பிறகு மீண்டும் முயற்சி செய்து பார்க்குமாறு மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.
மொபைல் மற்றும் டேப்லெட் பாவனை
சிலருக்கு மலம் கழிக்கச் செல்வது ஒரு வேடிக்கையான அனுபவம். சுற்றுலாவிற்கு செல்வது போல உணர்வார்கள். மொபைல், டேப்லட்ஸ் போன்றவற்றை எடுத்துக்கொண்டு முழு பொழுதுபோக்கு நேரமாக அங்கு கழிக்கின்றனர். மொபைல், டேப்லட்ஸ் போன்றவற்றை பயன்படுத்திக்கொண்டு அதில் அதிகமான நேரத்தை செலவு செய்யும்போது மலசலகூடத்தில் எவ்வளவு நேரம் செலவிடுகிறோம் என்பதை மறந்து விடுகிறோம். இது தேவையற்ற சுகாதார பிரச்சினைகளுக்கு உட்படுத்திவிடும். மற்ற தீவிரமான பிரச்சினை என்னவென்றால், மலசலகூடத்திற்குள் கொண்டு செல்லப்படும் இந்த மின்னணு சாதனங்களில் கிருமிகள் பரவிக்கொள்கிறது. பலர் மலம்கழித்துவிட்டு கைகளையே சரியாக கிருமித்தொற்று செய்வதில்லை. இதில் மொபைல்களை தொற்றுநீக்கம் செய்வார்களா? இதுவும் நோய்க்கிருமிகளை இலகுவாக பரவ அனுமதிக்கூடிய ஒரு செயல் என்பதால் இதுவும் சுகாதார பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
முறையற்று அமர்தல்
மலசலகூடத்தில் சரியாக அமர்வது எப்படி என்பது சற்று சர்ச்சைக்குரியது. இன்றும் இதற்கு பல்வேறு கருத்துக்கள் உள்ளன. சிலர் நாற்காலியில் உட்கார்ந்திருப்பது போல் தலை மற்றும் உடற்பகுதியை நேராக வைத்து அதில் அமர்ந்து கொள்கிறார்கள். ஆனால் இது மலக்குடலில் அதிக அழுத்தத்தையும் கொடுக்கலாம். மிகவும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கழிப்பறை முறை தான் குந்தி அமர்ந்து மலம் கழிப்பது. நவீன இருக்கை கழிப்பறைகள் வருவதற்கு முன்பு, எங்கள் பழைய கழிப்பறைகளில் நாம் அப்படித்தான் அமர்ந்தோம். ஆனால் நவீன கழிப்பறைகளைப் பயன்படுத்தும் போது, முழங்கைகள் முழங்கால்களில் படுமாறும், முடிந்தால் இடுப்பின் அளவிற்கும் சற்று மேலாக முழங்கால்களை உயர்த்தவும். முதுகெலும்பை நேராக ஆனால் சற்று முன்னோக்கி வைத்திருப்பது நல்லது. அதற்கு கீழே ஒரு உயரமான ஏதாவது வைத்துக்கொள்வது இலகுவாக இருக்கும்.
கழுவுவது எவ்வாறு?
எம்மில் பெரும்பாலானோர் மலம் கழித்த பின் பின்புறம் கழுவுவது வழக்கம். பொதுவாக அப்படித்தான் அனைவரும் செய்வார்கள். இன்னும் சிலர் டிஷூக்களால் துடைத்தெடுப்பார்கள். டிஷூக்களால் துடைத்தாலும், தண்ணீரால் கழுவினாலும் ஒரு குறிப்பிடத்தக்க விடயம் உண்டு. அவ்விடயம் பெண்களுக்கு மிகவும் முக்கியமானது. அதாவது, கழிப்பறைக்குச் சென்று அலசி கழுவும்போது, குதவழியில் இருந்து முதுகெலும்பின் வேர்வரை சரியாக கழுவ அல்லது துடைக்க வேண்டும். இல்லையெனில், பிறப்புறுப்பு பகுதி அமைந்துள்ள முன்தோல் மாத்திரம் துடைப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. ஏனென்றால், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் சிறுநீர் பாதையுடன் தொடர்பு கொண்டால் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் மற்றும் தடிப்புகளை ஏற்படுத்தும்.