கர்ப்பத்தின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து நாங்கள் முன்பு பேசியுள்ளோம். ஆனால் இது விலங்குகளின் கர்ப்ப காலம் பற்றியது. நம்மைச் சுற்றியுள்ள விலங்குகள் மற்றும் விலங்குகளின் உலகில் நாம் அடிக்கடி காணாத விலங்குகள் பற்றிய அற்புதமான கதைகள் உள்ளன. சில விலங்குகளுக்கு நீண்ட கர்ப்ப காலம் இருக்கும், சில விலங்குகளுக்கு மிகக் குறுகிய கர்ப்ப காலம் மாத்திரமே இருக்கும். ஒரு நேரத்தில் அவை பெற்றெடுக்கும் குட்டிகளின் எண்ணிக்கையும் அவை கர்ப்பம் தரிக்கும் காலங்களும் வேறுபடுகின்றன. எனவே இந்த ஒவ்வொரு விலங்குகளின் கர்ப்ப காலத்திலும் உள்ள வேறுபாடுகளைப் பற்றி படிப்போம்.
யானை
உலகில் மிக நீண்ட காலம் கர்ப்பத்தை சுமக்கும் விலங்காக யானை கருதப்படுகிறது. சராசரியாக, ஒரு பெண் யானை பிரசவத்திற்கு முன்பு சுமார் 660 நாட்கள் அதாவது 95 வாரங்கள் கருவுற்றிருக்கும். அது இரண்டு வருடங்களுக்கும் சற்று குறைவு. ஒப்பீட்டளவில் ஒரு பெண்ணின் கர்ப்பத்தை விட இரண்டு மடங்கு அதிகம். யானை உருவில் பெரியது மற்றும் கருப்பையில் உருவாக அதிக நேரம் எடுக்கும். அத்தோடு, யானை மிகவும் புத்திசாலித்தனமான விலங்கு என்பதால், கருவின் மூளை உருவாக அதிக நேரம் எடுப்பது இந்த நீண்ட கர்ப்ப காலத்திற்கு காரணமாகும். இருப்பினும், மனிதர்களை போலவே யானையும் ஒரு நேரத்தில் ஒரு குட்டியை மட்டுமே பிரசவிக்கிறது. அரிதாக இரட்டை யானைக்குட்டிகள் பிறக்கின்றன. ஒவ்வொரு 4-5 வருடங்களுக்கும் சராசரியாக யானைக்குட்டி பிறக்கிறது. மேலும், அவற்றின் மொத்த ஆயுட்காலம் சுமார் 60-70 ஆண்டுகளாகும். அதற்குள் 4-5 குட்டிகளுக்கு உயிர் கொடுக்கும்.
Frilled Shark
பிரில்ட் ஷார்க் உலகின் மிக நீண்ட காலம் வாழும் சுறாவாக கருதப்படுகிறது. இந்த சுறா 390-4000 அடி ஆழத்தில் கடலில் வாழ்கிறது மற்றும் சராசரியாக 3.5 ஆண்டுகள் கர்ப்ப காலத்தை கொண்டுள்ளது. ஆனால் இந்த ஃபிரில்ட் ஷார்க்குக்கு முன்னர் குறிப்பிட்ட மனித அல்லது யானை போன்ற தொப்புள்கொடியுடன் தாயுடன் இணைக்கப்பட்ட கருப்பை இல்லை. இந்த விலங்கின் உடலுக்குள் முட்டைகள் 3.5 ஆண்டுகள் உருவாகி தாயின் வயிற்றில் இருந்து நேரடி குட்டிகளாக வெளிப்படுகின்றன.
Virginian Opposum
இது அமெரிக்காவில் காணப்படும் ஒரு எலிக்கு ஒத்ததாக இருக்கக்கூடிய, ஆனால் ஒரு எலியை விட சற்று பெரிய, ஒரு சாதாரண பூனையின் அளவு கொண்ட ஒரு விலங்காகும். Opposum உலகின் மிகக் குறுகிய கர்ப்ப காலம் கொண்ட விலங்காக கருதப்படுகிறது. சரியாக 13 நாட்கள்தான் அதன் கர்ப்ப காலமாகும். அரை மாதத்திற்கும் குறைவான நேரம். இது ஆச்சரியமல்ல, ஏனெனில் இந்த விலங்கின் ஆயுட்காலம் சுமார் இரண்டு ஆண்டுகள் மாத்திரமே. இந்த விலங்குகள் வருடத்திற்கு இரண்டு முறை பிறக்கின்றன. இனச்சேர்க்கைக்குப் பிறகு ஆண் மீண்டும் திரும்புவதில்லை. சுமார் 13 நாட்கள் கர்ப்பமாக இருக்கும் பெண், ஒரே நேரத்தில் சுமார் 20 குட்டிகளைப் பெற்றெடுக்கிறது. ஆனால் அதில் பாதிக்கும் குறைவானவை நீண்ட காலம் வாழ்கின்றன.
கடல் குதிரை
உலகில் உள்ள அனைத்து உயிரினங்களிலும் இந்த கடல் குதிரையில் மட்டுமே ஆண் இனம் குட்டி ஈனுகின்றது. ஆணின் வயிற்றில் ஒரு துளைக்குள் பெண் விதைகளை பொருத்திய பிறகு, ஆண் அவ்விதைகளை உரமாக்கி 10 முதல் 25 நாட்கள் வரை பாதுகாக்கும். அதன் பிறகு ஒரு நேரத்தில் சுமார் 2000 குட்டிகள் வரை பிறக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கு இடையில் அவை மாதத்திற்கு இரண்டு முறை இனப்பெருக்கம் செய்கின்றன.
ஒட்டகச்சிவிங்கி
ஒட்டகச்சிவிங்கியும் நம்மை விட நீண்ட கர்ப்ப காலத்தை செலவிடுகிறது. ஒட்டகச்சிவிங்கியின் கர்ப்ப காலம் 57-65 வாரங்கள் ஆகும். அதாவது சுமார் 15 மாதங்கள். கருப்பையில் இவ்வளவு காலம் வளர காரணம், இந்த சூழலில் தனியாக வாழவும், பிறந்தவுடன் எழுந்து நடக்கும் அளவிற்கும் வளர வேண்டும். கர்ப்பமான ஒட்டகச்சிவிங்கி நின்ற நிலையிலேயே தனது குட்டியைப் பெற்றெடுக்கிறது. 6 அடி உயரத்தில் இருந்து குட்டி தரையில் விழும்போது, அதன் நீண்ட கழுத்து சேதமடையாது இருப்பதற்காகவே இது இவ்வாறு செய்கிறதாம். ஒட்டகச்சிவிங்கிகள் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை குட்டி ஈனுகின்றன.
பூனை
இவை அனைத்தையும் எழுதும்போது நமக்கு நெருக்கமான விலங்குகளைப் பற்றியும் எழுத வேண்டுமல்லவா? பூனை மிகவும் குறுகிய கர்ப்ப காலத்தைக் கொண்ட ஒரு விலங்கு. இது சுமார் 4 மாத வயதிலேயே கர்ப்பமாகக்கூடிய ஒரு விலங்காகும். பூனையின் சராசரி கர்ப்ப காலம் சுமார் 60 – 65 நாட்கள் ஆகும். அது இரண்டு மாதங்களுக்கும் சற்றே அதிகமாகும். ஒரு பூனை வழக்கமாக ஒரு நேரத்தில் 4 முதல் 12 குட்டிகளை பெற்றெடுகின்றது. மேலும் வருடத்திற்கு 3 முதல் 5 முறை குட்டிகளை ஈனும்.