மன அமைதியை பெற‌ உளவியல் நிபுணர்கள் கூறும் வழிமுறைகள்

தற்போதைய காலத்தில் வேலை, வீடு என ஓடிக்கொண்டிருக்கும் மக்கள் நிம்மதியின்றி அலைகின்றனர். என்னதான் வேலை செய்தாலும் நிம்மதியில்லாவிட்டால் அந்த வாழ்க்கை அர்த்தமற்றதாகிவிடும். அந்தவகையில், மன அமைதியை பெற உளவியல் நிபுணர்கள் கூறும் சில வழிமுறைகளை இன்று உங்களுக்காக கொண்டுவந்துள்ளோம்.

 

ஆழ்ந்த சுவாசம்

கீழைத்தேய நாடுகள், மேலைத்தேய நாடுகள் இரண்டுமே ஒப்புக்கொள்கின்ற உத்தி இதுவாகும். ஆழ்ந்த சுவாசத்தின்மூலம் இரத்தத்தில் பிராண வாயுவின் அளவு அதிகரிப்பதால் உங்கள் தசைகள் தளர்வடைகின்றன. மனம் இயல்பு நிலை அடைகின்றது. அடி வயிற்றில் கையை லேசாக அழுத்திக்கொண்டு ஆழமாக சுவாசிப்பதன் மூலம் அடிவயிற்றின் அசைவுகளையும் உடலும் மனமும் தளர்வுநிலை அடைவதையும் கண்கூடாக உணரலாம்.

 

காட்சிப்படுத்துங்கள்

பூப்பூவாய்த் தூவும் வெந்நீர ஷவரின்கீழ் கண்மூடி நிற்பது போலவும் உங்கள் அழுத்தங்களும் பதட்டங்களும் அடித்துக் கொண்டு போவது போலவும் மனதுக்குள் ஒரு காட்சியை வரைந்து மனவியல் நிபுணர்கள் பார்க்கச்சொல்கிறார்கள்.

அமைதியான இடமொன்றில் ஏகாந்தமாய் நீங்கள் கண்மூடிப் படுத்திருப்பது போன்ற காட்சியையும் உருவாக்கிக்கொள்ளலாம். ஆனால் அந்தக் காட்சியைத் துல்லியமாக உணர்வது அவசியம். அங்கு பார்வையில் படிகின்ற அம்சங்கள், கடற்கரையின் உப்பு வாசனை இவை அனைத்தையும் மனதில் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

 

மனஅழுத்தம் தீர விரல் அழுத்தம்

உள்ளங்கைகளில், மற்ற கையின் கட்டைவிரலால் தொடர் அழுத்தம் தருவது தொடங்கி, முழுமையான மசாஜ் செய்துகொள்வது வரையிலான உடல் தளர்வு நிலை உத்திகள் மன அழுத்தத்தைப் போக்கும் திறன் கொண்டவை.

 

புன்னகையின் சக்தி

மகிழ்ச்சியாக இருக்கும்போது நீங்கள் புன்னகைக்கிறீர்கள் என்பது எவ்வளவு உண்மையோ, புன்னகைக்கும் போதெல்லாம் மகிழ்ச்சியடைகிறீர்கள் என்பதும் உண்மை. நரம்புகளில் தொடங்கும் சிறு அதிர்வுகள் முகத்திலுள்ள தசைகளை அசைத்து, பாதுகாப்பான உணர்வை மூளைக்கும் கொண்டு செல்லும் அற்புதம் ஒவ்வொரு புன்னகையின் போதும் நிகழ்கிறது என்கிறார்கள். புன்னகையின் சக்தி புரியவேண்டுமா? புன்னகைத்துத்தான் பாருங்களேன்.

 

கடைவாய் – ஒரு இரகசியம்

மனதில் உருவாகும் அழுத்தம் வந்து படிகின்ற இடங்களில் ஒன்று கடைவாய் இணைப்புகள். பற்களை இறுகக்கடித்து, காதுக்குக்கீழ் சுட்டுவிரலால் அழுத்திக் கொண்டு, நீளமாக மூச்சிழுப்பதும், வாயைத் திறந்தபடி காற்றை வெளியே விடுவதும், அழுத்தத்தின் சுவடுகளை உடலில் தங்காமல் வெளியேற்ற மேலைநாட்டு ஆய்வாளர்கள் கண்டு பிடித்திருக்கின்ற வழி இதுவாகும்.

 

மனம் சொல்லும் மந்திரம்

நம்மை நாமே உற்சாகப்படுத்திக்கொள்ள ஆட்டோசஜஷன் முறைப்படி சில வாசகங்களை மனதுக்குள் உருவாக்கிக் கொள்வது மேலை நாட்டின் பாணியாகும். நம்நாட்டில் அதற்குப் பஞ்சமே கிடையாது. “எல்லாம் செய்யக்கூடும்”, “நடப்பதெல்லாம் நன்மைக்கே” என்று எத்தனையோ வாசகங்கள், மனதுக்கு சக்திதரும் மந்திரங்களாய் உள்ளன. மனதுக்குள்ளேயே அவற்றைப் பத்து பதினைந்து முறைகள் சொல்லும்போது பெரிய அளவில் மாற்றங்கள் தெரியும்.

 

அடுத்தது என்ன…..?

 

மனஅழுத்தத்திற்கு ஆளாகும் பலரும் தன்னிரக்கத்தைத் தவிர்க்க முடியாமல் தவிக்கிறார்கள். “எனக்கேன் இது நிகழ்ந்தது? மற்றவர்களுக்கு இப்படி இல்லையே” என்ற எண்ணங்கள் எழும்போது தன்னிரக்கம் நம் செயற்திறனை மேலும் பாதிக்கின்றது. மாறாக, அடுத்தது என்ன?” என்ற அணுகுமுறையை கடைப்பிடிக்கின்றபோது செயற்படவேண்டும் என்ற தூண்டுதல் வேகம் பெறுகிறது.

 

எழுதிப்பாருங்கள்

மனஅழுத்தத்தை தந்த சம்பவம் அதன் விளைவுகள் கையாள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள், உடனடி நடவடிக்கைகள் ஆகியவற்றை ஒரு காகிதத்தில் எழுதுங்கள். மனதுக்குள்ளேயே பலவற்றையும் யோசிப்பதைவிட எழுதும்போது ஒரு புதிய தெளிவு பிறக்கிறது. அந்தத்தெளிவே மன அழுத்தத்திலிருந்து விடுபடும் சக்தியைக் கொடுக்கிறது. தெளிவாக எழுதிப்பார்க்கும் போது தீர்வை நோக்கிப் பல அடிகள் வைத்தது போன்ற மன நிறைவை எளிதில் எட்ட முடிகிறது.

 

தடாலடிகளை தள்ளிப்போடுங்கள்

அழுத்தம் கொடுக்கும் பதட்டம் காரணமாக தடாலடியாய் சில தவறான முடிவுகளை எடுக்கக் தோன்றும். அந்த நேரப்பதட்டத்தில் எது தவறு எது சரி என்று சிந்திக்காமல் செயற்படுவது சேதங்களை வளர்க்கும். எனவே, மனம் பதட்டமாக இருக்கும் போது முடிவெடுப்பதைத் தள்ளிப்போடுங்கள். பத்துவரை மனதுக்குள்ளேயே எண்ணிவிட்டு, சிறிதுதூரம் உலவிவிட்டு, பதட்டம் தணியும்வரை பொறுமையாய் இருந்தால் ஆக்கபூர்வமான முடிவுகள் சாத்தியமாகும்.

 

கோப்பி குடிப்பதைக் குறையுங்கள்

காலை மாலை கோப்பி மிகவும் சுகமானதுதான். ஆனால் மன அழுத்தம் ஏற்படும் நேரங்களில் கோப்பியைத் தவிர்ப்பது நல்லது என்கிறார் ஜேம்ஸ் ட்யூக் என்ற ஆய்வாளர். தூய குடிநீர், பழச்சாறுகள் போன்ற பானங்கள் புத்துணர்வு தருவதாகவும் மன அழுத்தத்தைப் போக்கும் சக்தி தருபவையாகவும் இருக்கும். நீரோ பழச்சாறோ பருகும் போது, அந்தத் திரவம் உங்களுக்குள் கலந்து புத்துணர்வு தருவதை உணர்வுப் பூர்வமாய் ஏற்பது மேலும் ஊக்கம் தரும்.