இருண்ட திரை (dark mode) பயன்பாட்டின் நன்மையும் தீமையும்

 

டார்க் மோட் என்ற பயன்பாடு கைப்பேசி மற்றும் அப்களில் அண்மைய காலமாக அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இது உண்மையில் பிரகாசமாக இருக்கும் பின்னணி நிறத்தை குறைத்து கண்ணுக்கு இதமாக அறிமுகப்படுத்தப்பட்டது. சில காலத்திற்கு முன்பு, டார்க் மோட் பயன்முறையின் சில பயன்பாடுகள் மற்றும் டிஜிட்டல் சேவைகளுக்கு மட்டுமே வந்தது. ஆனால் இப்போது ஒவ்வொரு டிஜிட்டல் இயங்குதளம் மற்றும் இயக்க முறைமைகளிலும் டார்க் பயன்முறை ஒரு பொதுவான மாற்றமாக மாறியுள்ளது.

சிலருக்கு, இந்த இருண்ட பயன்முறை (dark mode) பிடிப்பதில்லை. ஆனால் ஒட்டுமொத்தமாக, டார்க் பயன்முறையில் நிறைய நன்மைகள் உள்ளன. குறிப்பாக ஸ்மார்ட்போன்கள் மற்றும் கணினிகளின் திரைகள் கண்களுக்கு அவ்வளவு நல்லதாக இருப்பதில்லை. இத்தகைய சிக்கல்கள் இந்த டார்க் பயன்முறையால் தீர்க்கப்படுகின்றன. நன்மையைப் போன்று தீமைகளும் இருக்கத்தான் செய்கின்றன. அவை பற்றி இன்று அறிந்துகொள்வோம்.

 

கண்களின் பாதுகாப்பு

நாள் முழுவதும் பிரகாசமான நீல ஒளியைப் பார்ப்பது பார்வைக்குறைப்பாட்டிற்கு வழிவகுக்கும். குறிப்பாக குறைவான வெளிச்சம் இருக்கும் சந்தர்ப்பங்களில் மொபைல் ப்ரைட்னஸ்ஸை அதிகமாக வைத்து பார்ப்பது, அதை சரியாக உணராமல் நம் கண்கள் தானாகவே சோர்வடைகின்றன. மொபைல் திரை அல்லது கணினி திரையை தொடர்ந்து பார்க்கும்போது உங்களில் சிலருக்கு தலைவலி வரும். இருப்பினும், டார்க் மோட் பயன்முறை கண்களில் உள்ள உடல்நலப் பிரச்சினைகளை குறைக்கிறது. குறிப்பாக பிரகாசமான நீல ஒளி மூலம் வரும் கண் சோர்வை கணிசமாகக் குறைக்கிறது. ஆனால் நீங்கள் நாள் முழுவதும் தொலைபேசி அல்லது மடிக்கணினியை டார்க் மோட் பயன்முறையில் வைத்து இயக்கும்போது, அதுவும் ஒரு பிரச்சினையாக மாறலாம். அதாவது, அவ்வப்போது இடைவெளி எடுக்கும் போது டார்க் மோட் பயன்முறை திரையில் பணிபுரியும் ஒருவருக்கு பிரகாசமான சூழலை பார்ப்பது கஷ்டமாக மாறலாம். இதனால் ​​கண்கள் மீண்டும் சோர்வடைகின்றன.

 

தூக்கமின்மையை குறைக்கும்

பிரகாசமான நீலஒளி (ப்ளூ லைட்)யைப் பார்த்தால் தூங்குவதற்கு உதவும் மெலடோனின் என்ற ஹார்மோன் சுரப்பையும் குறைக்கும். அதனால்தான் படுக்கைக்குச் சென்றாலும் தொடர்ந்து மொபைலை பயன்படுத்திக் கொண்டிருப்பது அவ்வளவாக ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. தொடர்ந்து இப்படியே இரவில் படுக்கை நேரத்தில் மொபைல் பார்ப்பது, இறுதியில் கண்கள் வறண்டு போகும் நிலைக்கு தள்ளிவிடும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். பின்னர் தூக்கமின்மை வருகிறது. இவை உடல் பருமன் போன்ற பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும். ஆனால் இரவில் அல்லது சூழல் மிகவும் பிரகாசமாக இல்லாதபோது, ​​ஸ்மார்ட்போன் அல்லது கணினியை டார்க் மோட் பயன்முறையில் வைத்து பயன்படுத்துவது ஆபத்தை கணிசமாகக் குறைக்கப்படுகிறது. ஆனால் எப்படியிருந்தாலும், படுக்கைக்கு செல்வதற்கு குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே தொலைபேசிகள் மற்றும் மடிக்கணினிகளைக் ஓரங்கட்டிவிடுவது நல்லது.

 

பேட்டரி பயன்பாடு

முன்பிருந்த மொபைல்கள் கீழே அடித்தாலும் உடையாது. ஒருமுறை சார்ஜ் செய்தால் இரண்டு மூன்று நாட்கள் பாவிக்கக் கூடியதாக இருக்கும். ஆனால் துரதிஷ்டவசமாக தற்போதைய ஸ்மார்ட்போன்களை நாள் முழுவதும் பயன்படுத்த குறைந்தது ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சார்ஜ் செய்ய வேண்டும். சில ஸ்மார்ட்போன்களை ஒரு நாளைக்கு இரண்டு முறைகூட சார்ஜ் செய்ய வேண்டியுள்ளன. இதுபோன்ற ஸ்மார்ட்போனை நீங்கள் பயன்படுத்தினால், டார்க் மோட் பயன்முறை ஓரளவிற்கு நல்ல செய்திதான். டார்க் மோட் பயன்முறையில் வேலை செய்யும்போது, ​​ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற சாதனங்களின் பேட்டரி ஆயுள் காலம் நீடிக்கலாம். ஏனென்றால் இது பிரகாசமான திரையை விட குறைந்த ஆற்றலும் குறைந்த பிரகாசமும் கொண்ட திரையை தருகிறது. பேட்டரி ஆயுளை சேமிக்க டார்க் மோட் பயன்முறை சிறந்ததென இப்போது கூகிள் உறுதிப்படுத்தியுள்ளது. குறிப்பாக OLED திரைகளுக்கு மிகவும் உகந்தது.

 

அதியுயர் தொழிநுட்ப இன்டெர்பேஸ் ( HIGH TECHNOLOGY INTERFACE )

இவ்விடயத்தை சிலர் ஏற்றுக்கொண்டாலும் ஒருசிலர் ஏற்றுக்கொள்வதில்லை. அதாவது, டார்க் மோட் பயன்முறை செயற்படுத்தப்படும் போது, ​​எந்தவொரு USER INTERFCE யிலும் ஒரு புதிய மற்றும் உயர் தொழில்நுட்ப தோற்றம் வரும். குறிப்பாக பல்வேறு பயன்பாடுகள் மற்றும் டிஜிட்டல் இயங்குதளங்களின் டாஷ்போர்டுகளில், இந்த டார்க் மோட் பயன்முறை சிறந்த தோற்றத்தை அளிக்கிறது. விளக்கப்படம் (CHARTS) போன்றவற்றிக்கும் இந்த டார்க் மோட் பயன்முறை நன்றாக இருக்கும். ஆனால் இந்த வித்தியாசமான கிளாசிக் அல்லது உயர் தொழில்நுட்ப தோற்றம் அனைவருக்கும் ஒத்துப்போகாது இருக்கலாம். அதையும் நாம் மறுக்க முடியாது.

 

வெளிச்சமான சூழல்

இப்போது, ​​மேலே குறிப்பிட்டுள்ள நன்மைகளைக் கருத்தில் கொண்டு, டார்க் மோட் பயன்முறை என்பது எல்லா நேரத்திலும் பயன்படுத்தக்கூடிய ஒன்றாக எண்ணக்கூடாது. எடுத்துக்காட்டாக பிரகாசமான சூரிய ஒளியின்போது வெளியில் டார்க் மோட் பயன்படுத்தினால் சில விடயங்களை வாசிக்க முடியாது. பிரகாசமான விளக்குகள் கொண்ட ஒரு அறைக்குள் இருந்தாலும் இதே நிலை ஏற்படும். ஆனால் இந்த சந்தர்ப்பங்களில் மட்டும் டார்க் மோட் பயன்முறை சற்று வெறுப்பை தரும். இயல்பான அல்லது குறைந்த ஒளி நிலைமைகளைக் கொண்ட சந்தர்ப்பங்களில், டார்க் மோட் பயன்முறை கண்களுக்கு எளிதானது மற்றும் மேலே உள்ள அனைத்து நன்மைகளையும் வழங்குகிறது.

 

தொடர் வாசிப்பு கடினம்

இது மேலே கூறிய குறிப்புகளுடன் தொடர்புபட்டது. இப்போது சிலர் அந்த E BOOKS போன்றவற்றின் மூலம் தொலைபேசியிலோ அல்லது டேப்களிலோ புத்தகங்களை படிக்கிறார்கள். டார்க் மோட்-இல் நீண்ட நேரம் வாசிப்பது சிரமம் என சிலர் கூறுகின்றனர். பிரகாசமான சூழலில் டார்க் மோட் வைத்து வாசிப்பது கடினம் என்பதை நாங்கள் அறிவோம். அத்தகைய சந்தர்ப்பத்தில் டார்க் மோட்-ஐ நீக்கிவிட்டு மொபைல் அல்லது டேப்பின் பிரகாசத்தை குறைத்து வைத்து வாசிப்பது சிறந்தது.

 

எல்லோருக்கும் ஏற்றதல்ல

சிலருக்கு டார்க் மோட் ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தாலும் பலருக்கும் இது வெறுப்பாக இருக்கும். அதாவது, BRIGHTNESS எவ்வளவு குறைவாக இருந்தாலும், டார்க் மோட் பயன்முறையை உபயோகிக்காத பலரும் உள்ளனர். அதற்கு காரணம் அவர்கள் முன்பிருந்தே BRIGHTNESS ஸை அதிகமாக வைத்து பயன்படுத்துபவர்களாக இருந்து, டார்க் மோட்-ஐ பயன்படுத்த சொன்னால் அவர்களுக்கு சிரமமாக இருக்கும்.